இலங்கை ஹஜ் யாத்திரிகளின் மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள்
(ஏ.எல்.ஜுனைதீன்)
முகவர்கள் ஹஜ் யாத்திரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு அங்கீகாரமுள்ள பற்றுச் சீட்டை வழங்குவதுடன் அவர்களால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்படவிருக்கும் வசதிகள் தொடர்பான ஒப்பந்தத்தையும் எழுத்தில் கையளிக்க வேண்டும் என புனித ஹஜ் கடமையை இம்முறை நிறைவேற்றவுள்ள ஹஜ் யாத்திரிகளின் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
மெளலவி றபியுத்தீன் (ஜமாலி) தலைமையில் நிந்தவூர் பள்ளிவாசலில் நடைபெற்ற ஹஜ் யாத்திரிகளின் மாநாட்டிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இங்கு எடுக்கப்பட்ட மேலும் சில தீர்மானங்கள் வருமாறு,
கலாசார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட 4 இலட்சம் ரூபாவை அனைத்து முகவர்களும் ஏற்றுக்கொண்டு அதனையே அமுல்படுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்பட்ட முகவர்கள் குரிப்பிட்ட கட்டணத் தொகையைப் பெற்று அழைத்துச் செல்லும் விருப்பை வெளிப்படுத்தும் போது அவர்களுக்கான ஹஜ் கோட்டாவிற்கான வரையறையைத் தளர்த்திக் கொடுக்க வேண்டும்.
முகவர்கள் அவர்களுக்குள் ஹஜ் யாத்திரிகர்களை இலாப நோக்கத்திலான பரிமாற்றம் செய்வதைத் தடை செய்ய வேண்டும்.
சகல முகவர்களிடமும் ஹஜ் யாத்திரிகர்களின் நன்மை கருதி முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் மீளளிக்கப்படும் 2 இலட்சத்தை வைப்பிலிட்டு பணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
முகவர்களால் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வாக்களிக்கப்பட்ட வசதிகளைச் செய்யத் தவறும் பட்சத்தில் ஹஜ் யாத்திரிகர்களின் முறைப்பாட்டில் நம்பகத்தன்மை காணப்பட்டால் மீளளிக்கப்படும் பணத்திலிருந்து இதற்கான இழப்பீடு யாத்திரிகர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.
குறிப்பிட்ட தொகைக்கு மேலதிகமாக முகவர்கள் அறவீடு செய்வதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, இம்மாநாட்டில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
Post a Comment