மன்னார் முஸ்லிம்கள் மிகமோசமான அடிமைத்தனத்தில் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அஸ்மின்
வாக்குகளை விலைகொடுத்து வாங்குகின்ற மிகக் கேவலமான கலாச்சாரம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஒரு நிலையிலிருந்து முஸ்லிம் மக்களை விடுதலைபெறச் செய்ய வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் ஒத்தழைப்பை நான் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றேன். உரிமைகளுக்கான அரசியலை நாம் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வடக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சிறுபான்மை சமூகங்களின் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மிகப் பலமாக முன்னெடுக்க வேண்டும் என வேட்பாளர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.
வட மாகாண சபை தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு சார்பில் த.தே.கூ.பில் போட்டியிடும் வட மாகாணத்தின் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரான அவர் நேற்று இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தனது உரையில்,
"ஜனநாயக ஒழுங்கில் தேர்தல்கள் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறையாக அமைந்திருக்கின்றது. தேர்தல் கால பரப்புரைகள் தேர்தலில் போட்டியிகின்ற ஒவ்வொரு கட்சிகளும் தமது கொள்கைகள், வழிமுறைகள், எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விளக்கமளிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஒழுங்கிற்கமைய வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளின் தேர்தல் பரப்புரைகளை அடிப்படைளாக வைத்து மக்கள் தமது தெளிவுகளை மேற்கொள்ள முடியும். வடக்கு தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமே ஜனநாயக விழுமியங்களை முழுமையாக மதித்து தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதே தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் குறிப்பாக ஆளுந் தரப்பினர் ஜனநாயக விழுமியங்களுக்கு அப்பால் சென்று செயறபட்டிருப்பதை எங்களால் அவதானிக்க முடியும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி கட்டுக்கோப்பான வேட்பாளர் அணியினை நிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு விருப்பு வாக்குகளுக்கு அப்பால் கட்சியின் வெற்றிக்காக உழைக்கின்ற நடைமுறையோடு மக்களை பரப்புரைகள், கலந்துரையாடல்கள், ஊடகங்கள், இணைய ஊடகங்கள் மூலம் ஒரு சிறப்பான பணியினை செய்து முடித்திருக்கிறார்கள். ஆளுந்தரப்பினர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விமர்சிப்பதிலேயே காலம் தள்ளினர். மிக அநாகரிகமான ஊடக பிரச்சாரங்களின் மூலமும் அச்சுறுத்தல்களின் மூலமும் வாக்குகளை விலை பேசி வாங்குவதனூடதகாவும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்திருக்கிறார்கள். இத்தகைய முறைகேடுகள் இந்த தேசத்தின் ஜனநாயக ஒழுங்கிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே அமைகின்றது. மக்கள் அறிவூட்டப்படுவதனூடாக மேற்கொள்ளும் ஜனநாயக பங்களிப்புகளே அபிவிருத்தியடைந்து வரும் தேசம் ஒன்றின் அடையாளமாக இருக்கின்றது. ஆனால் சர்வதிகார முறைமையை நோக்கிச் செல்கின்ற இராணுவ ஆட்சி அடையாளங்களைக் கொண்ட தேசம் ஒன்றை உருவாக்குவதில் ஆளுந்தரப்பினர் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்பதையே ஆளுந்தரப்பினரின் தேர்தல் பிரச்சார வேலைகள் காட்டுகிறது.
வட மாகாண சபை தேர்தல் பல்வேறு கோணங்களில் முக்கியத்தவம் பெறுகின்றது. என்னை பொறுத்தவறை தழிழ் முஸ்லிம் உறவு, இணக்கப்பாட்டு அரசியல் சர்ந்தும் முக்கியத்தவம் பெறுகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லிம் அரசியல் கூட்டமைப்புடன் மேற்கொண்ட உடன்பாடுகளின் அடிப்படையில் தமிழ் முஸ்லிம் உறவின் அடையாளமாக ஒரு வேட்பாளனாக உங்கள் முன் நான் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றேன். இந்த முயற்சியை தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஆதாரித்து அங்கீகரித்திருக்கின்றனர். எல்லா மட்டங்களிலும் பரவலான வரவேற்பினை மக்கள் எமக்கு வழங்கினார்கள். முஸ்லிம் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் இந்த முயற்சியையும் கருத்துக்களையும் ஏற்றுக் கொள்கின்றார்கள். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் செல்வாக்குமிக்க அரசியல்வாதி என்று கூறிக் கொள்ளும் ஒருவரினால் மேற்கொள்ளப்படுகின்ற அச்சுறுத்தல்களுக்கு அஞ்சியவர்களாக மக்கள் தமது வெளிப்படையான ஆதரவை வழங்குவில் தயக்கம் காட்டுகின்றார்கள்.
மன்னார் முஸ்லிம்கள் மிக மோசமான அரசியல் அடிமைத்தனத்துக்கு ஆட்பட்டிக்கின்றார்கள். வாக்குகளை விலைகொடுத்து வாங்குகின்ற மிகக் கேவலமான கலாச்சாரம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்தகைய ஒரு நிலையிலிருந்து முஸ்லிம் மக்களை விடுதலைபெறச் செய்ய வேண்டும். இதற்கு தமிழ் மக்களின் ஒத்தழைப்பை நான் பகிரங்கமாக வேண்டி நிற்கின்றேன். உரிமைகளுக்கான அரசியலை நாம் உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். வடக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து சிறுபான்மை சமூகங்களின் உரிமைக்கான போராட்டத்தினை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு மிகப் பலமாக முன்னெடுக்க வேண்டும். எனவேதான் வட மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் மக்கள் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் முஸ்லிம் மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க இருக்கின்றார்கள்.
மன்னார் மாவட்டத்தின் தேர்தல் களத்திலே என்னோடு களமிறங்கியிருக்கின்ற ஏனைய ஏழு வேட்பாளர்களும் மிகவும் நற்குணம் படைத்தவர்கள். மிகக் குறுகிய காலத்தில் எங்களோடு மிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு கலாபீடத்தில் ஒன்றாகக் கற்ற நண்பர்களைப் போன்று எங்களுக்கிடையிலான உறவு மேம்பட்டிருக்கின்றது. அத்தகைய உறவுகளைப் பெற்றுத் தந்த மன்னார் மண் என்றும் மகத்துவம் மிக்கது. தொடர்ந்தும் இந்த மண்ணோடும் இந்த மக்களோடும் எனது உறவை பேணுவேன் என்று உறுதியளிக்கின்றேன்.
தேர்தல் பரப்புரைகள் நிறைவடைகின்ற இக்கட்டத்தில் தேர்தலை குழப்புவதற்கும் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கும் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கும் வாக்குகள் எண்ணப்படுகின்ற போது மோசடிகள் மேற்கொள்வதற்கும் திரை மறைவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். அத்தகைய விழிப்புணர்வு தான் எம்முடைய அறுதிப் பெரும்பான்மை என்கின்ற இலக்கினை அடையச் செய்யும்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சிறுபான்மை சமூக உரிமைப் போராட்டத்தில் வெற்றிப் பெறுவதற்கு ஜனநாயக வழிமுறை சார்ந்த போராட்ட வழிமுறையை தொடங்கியிருக்கின்றது. இந்த மகத்தான முயற்சிக்கு நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்" என தெரிவித்தார்.
அழகான முறையில் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து விலை பேசி வாக்குக்கேட்கிரீர்கள். வாழ்க உங்கள் அரசியல் பாணி, வளர்க உங்கள் அரசியல் பயணம்? ஆரம்பமே அமர்க்களம்!!!!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteநீர் கூட்டமைப்பின் அடிமை
ReplyDelete