மக்கா செல்லும் ஹஜ்ஜாஜிகளுக்கு தடுப்பு ஊசி போடும் நிகழ்வு
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
உலக முஸ்லிம்களின் முக்கிய 5ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இம்மாதம் சவூதி அரேபிய புனித மக்காவுக்கு செல்லும் ஒரு தொகுதி ஹஜ்ஜாஜிகளுக்கான மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையின் ஏற்பாட்டில் 11-09-2013 இன்று இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய பனிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஹஜ் ட்ரவல்ஸ்; மற்றும் றீமா ட்ரவல்ஸ் ஆகிய ஹஜ் முகவர்களில் இம்முறை புனித மக்காவுக்கு செல்லும் ஹஜ்ஜாஜிகள் மற்றும் அவர்களை கூட்டிச் செல்லும் முகவர்கள் , றீமா ட்ரவல்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சுபைர் ஹாஜி ,காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனையின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள்,உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது ஹஜ்ஜாஜிகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் மற்றும் சுகாதார பரீசோதகர் றஹ்மதுல்லாஹ்; மற்றும் தாதிகளினால் மெனிங்கோ கொக் வெக்ஸின் தடுப்பு ஊசி போடப்பட்டது.
குறித்த மெனிங்கோ கொக் வெக்ஸின் எனும் தடுப்பு ஊசி தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யூ.எல்.நஸீர்தீன் கருத்து தெரிவிக்கையில்
குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து வரும் மக்களில் காணப்படும் மெனிஞ்சைடிஸ் எனும் மூளை காய்ச்சல் தோற்று நோய் வராமல் தடுப்பதற்கும் சவூதி அரசாங்கத்தினால் சன நெரிசல் உள்ள இடங்களில் தோற்று ஏற்படாமல் இருப்பதற்கும் இந்த வெக்ஸினை அந்த அரசாங்கம் நிற்பந்திக்கிறது.
வருடா வருடம் ஹஜ்ஜிக்கு செல்லும் ஹஜ்ஜாஜிகளுக்கு இந்த மெனிங்கோ கொக் வெக்ஸின் எனும் தடுப்பு ஊசி மிக நீண்ட காலமாக 2500 ரூபாய் 3000 ரூபாய் கொடுத்து போட்டு வந்ததாகவும் இவ்வருடம் பல முயற்சிகளுக்கு மத்தியில் அரசாங்கம் மூலமாக எவ்வீத அறவீடுகளுமின்றி இலவசமாக போட்டு வருவதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல்.நஸீர்தீன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் சவூதி செல்வதற்கு மெனிங்கோ கொக் வெக்ஸின் எனும் தடுப்பு ஊசி கட்டாயமாக போட்டு அதனை மஞ்சல் கலர் புத்தகத்தில் பதிந்து போட்டதாக உறுதிப்படுத்தி வழங்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment