Header Ads



முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையே காரணம்

மாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்துள்ள போதிலும் பொதுமக்களிடையே அது பற்றிய கருத்தாடல்கள் ஓய்ந்ததாய் தெரியவில்லை. இந்நிலையில் இத்தேர்தலில் வெற்றியீட்டி, மாகாண சபையின் உறுப்பினர்களாக  தெரிவுசெய்யப்பட்டுள்ள அனைவருக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் (பீ.எம்.ஜே.டி) வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். அவர்களது சேவைகள் தொடரட்டும்.

பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரங்கள், இறுதி நேரத்தில் மிகவும் சூடுபிடித்தது. எனினும், தேர்தல் முடிவுகள் முஸ்;லிம் வேட்பாளர்களின் வெற்றி வீதத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாகாண சபையில் அங்கத்தவர்களாக இருந்த பலருக்கு தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. 

கண்டி மாவட்டத்தில் அதிக முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டமை, நாட்டில் வியாபித்துள்ள இனவாத சூழ்நிலை என்பன தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்களில் அநேகர் தோல்வியடைவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன என்று கூறலாம்.

எது எவ்வாறாயினும், தோல்வியடைந்தவர்களும்  மனம் தளராது, தம்மாலான பணிகளை மக்களுக்கு ஆற்ற முன்வர வேண்டும் என  நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு வேண்டுகின்றது.

தேர்தல் காலத்தில் வார்த்தையளவில் காணப்படும் உறுதிமொழிகள், தேர்தலின் பின்னர் செயற்பாடுகளாக பரிணாமம் பெறுவதில்லை. கண்டி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. இம்முறை தெரிவு செய்யப்பட்டவர்கள் இத்தவறினை மீண்டும் இழைத்துவிடக் கூடாது. 

மாற்றமாக, தங்களுக்கு வாக்களித்த மக்களது எதிர்பார்புகளை நிறைவேற்றுவதில் முனைப்புடன் செயற்பட வேண்டும். எமது அமைப்பு கட்சி பேதங்களுக்கு அப்பால், மக்களின் நலனை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கின்றோம். 

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் பீ.எம்.ஜே.டி ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரித்தது. குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கின்ற விகிதாசாரம் குறைவாகும் என்ற அவதானம் நிலவியது. எனவே, அதிகளவிலான மக்களை வாக்களிக்க வைப்பதிலேயே நாம் கூடுதலான கவனத்தைச் செலுத்தினோம். அதற்காகப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இன்னும் பல அமைப்புக்களும் இதே பணியை செய்தன.

மக்களை வாக்களிக்க வைக்கின்ற பணியில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம். முன்னொருபோதும் இல்லாதவாறு மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனர். இதற்கு வாக்காளர்களுக்கு எமது விசேட நன்றிகளைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம். எனினும், முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளமையானது மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதிநிதித்துவம் குறைந்தமைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைமை அதிகளவிலான அபேட்சகர்களை நிறுத்தியமை முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமைக்குப் பிரதான காரணமாகும். முஸ்லிம் அபேட்சகர்களின் வாக்குகள் சிறிய வித்தியாசத்தில் காணப்படுகின்றமை இதனை உறுதி செய்கின்றது. அதேபோன்று, விருப்பு வாக்குப் போடுவது தொடர்பில் மக்களுக்குத் தெளிவின்மையும், அபேட்சகர்கள் மத்தியில் நிலவிய விருப்பு வாக்குப் போட்டியும் முக்கிய காரணங்களாகும். 

குறித்த நடவடிக்கைகளை நாங்கள் வண்மையாகக் கண்டிக்கின்றோம். அதனால், ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அவர்கள் சமூகநலன் கருதி மீட்டிப் பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

அண்மைக் காலமாக நாட்டில் இடம்பெற்று வருகின்ற இனவாத பிரச்சாரங்களுக்கு அரசாங்கம் முறையான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளத் தவறி வருகின்றமை, அரசாங்கம் சார்பாகப் போட்டியிட்ட முஸ்லிம்கள் வெற்றி பெற முடியாமல் போனதற்குப் பிரதான காரணமாக இருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம்.

தேர்தல் முடிந்தவுடன் தோல்வியடைந்தவர்கள் மக்களைக் குறைகூறிக் கொண்டிருப்பது பொருத்தமல்ல. அவர்களும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் தங்களது நடடிவக்கைகளை மீள்பரிசீலனை செய்வது அவசியமாகின்றது.  நாங்கள் குறிப்பிட்டதொரு பிரதேசத்தைப் பிரதிதிநிதித்துவப் படுத்துபவர்கள் என்ற வகையில், முழுமையான பங்களிப்பை வழங்கியுள்ளோம். இதற்கு ஒத்துழைத்த சகல வாக்காளர்களுக்கும் பீ.எம்.ஜே.டி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தேர்தல் கால இறுதித் தருவாயிலும், தேர்தலின் பின்னரும் எமது அமைப்பின் பெயரில் குறுச் செய்திகள் பரிமாறப்பட்டன, துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டன, சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றிற்கும் எமது அமைப்பிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இது சமூக விரோதிகளால் திட்டமிட்டு செய்யப்படுகின்ற சதி முயற்சிகளாகும் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

இர்பான் காதர்
பிரதிப் பொதுச் செயலாளர்
பீ.எம்.ஜே.டி

1 comment:

  1. வடக்கில் கூட்டணிவுடன் ,வடமத்தி , மத்தியில் unp வுடன் உங்க்கள் நோக்கம் சமூகம் சார்ந்ததா ?,பதவி சார்ந்ததா ? விளக்கம் தேவை ............................

    ReplyDelete

Powered by Blogger.