Header Ads



தெற்கு, வடக்கு இனவாதத்தை ஐ.தே.கட்சியினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் - ரணில்

தெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தெருவில் இறங்க தயாராகவுள்ள நிலையில் வடக்கில் நீங்கள் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம் என எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க யாழ். மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக நேற்று மாலை நல்லூர் சங்கிலியன் மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

எந்த விதமான அச்சுறுத்தல்களுக்கும் அடி பணியாது வடக்கு மாகாண மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.  ஐக்கிய தேசிய கட்சி தான் இந்த மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தியது. 2005ம் ஆண்டு நான் வாக்கு கேட்ட போது தெற்கு மக்கள் என்னை ஆதரித்தார்கள். வடக்கு கிழக்கு மக்கள் என்னை ஆதரிக்கவில்லை.

அன்று எனக்கு வாக்களித்திருந்தால் இன்று இந்த வடக்கு கிழக்கு மக்கள் எவ்வளவு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்திருக்க மாட்டார்கள். நாங்கள் அரசியல் பரவலாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றோம்.  வடக்கு மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்புகின்றோம். ராஜபக்ஷ ரெஜிமென்டின் கீழ் அடிமையாக மக்கள் வாழ்வதை விரும்பவில்லை .

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மக்களை அடிமையாக வைத்திருக்கவே ராஜபக்ஷ ரெஜிமென்ட் விரும்புகின்றது.  இந்த நாட்டில் சகல மக்களும் ஐக்கியமாக வாழ வைக்க ஐக்கிய தேசிய கட்சியினால் தான் முடியும் இதனை சர்வதேசமும் ஏற்று கொண்டுள்ளது. இன்று அரசாங்கம் சொல்லுகின்ற அபிவிருத்தி திட்டங்களை அரசின் செலவில் செய்யவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா, சீனா, உலக வங்கி, ஆசிய வங்கி போன்றவர்களிடம் இருந்து உதவிகளை பெற்றே அபிவிருத்திகளை மேற்கொள்கின்றது.

இந்த அபிவிருத்திகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கிடைத்த கொமிஷன் ஏராளம்.  அவர்கள் வடக்கில் அபிவிருத்தி மேற்கொண்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இன்று வடக்கில் இளைஞர்களுக்கு வேலை இல்லை, காணாமல் போனவர்கள் பிரச்சனை, இராணுவ ஆட்சி, சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் கையளிக்கப்படாமை, போன்ற பல பிரச்சனைகள் உண்டு.

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற அத்தனை பிரச்சனைகளையும் ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே தீர்க்க முடியும்.  தெற்கில் ராஜபக்ஷ அரசை விரட்டி அடிக்க மக்கள் தெருவில் இறங்க தயாராகவுள்ளனர். நீங்கள் இந்த அரசுக்கு ஒட்சிசன் வழங்க வேண்டாம். தெற்கு இனவாதத்தையும் வடக்கு இனவாதத்தையும் ஐக்கிய தேசிய கட்சியினால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. அது முடியுமானால்.......... ஏன் சார் எதிர்கட்சியில் 'ஆயுட்காலத்தலைவராக' வீட்டிருக்கிறீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.