Header Ads



கிழக்கு மாகாணத்தில் வைக்கோலை எரிப்பது நிறுத்தப்படுமா...?

(சுலைமான் றாபி)

கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளான்மை அறுவடை தற்போது நிறைவு பெற்ற வேளையில் வைக்கோல்கள் எரியூட்டப்படுவதனை அவதானிக்க முடிந்தது. உண்மையில் இது சரியானதா அல்லது கமநல சேவைகள் தினைக்களத்தின் சட்ட திட்டங்களை விவசாயிகள் உதாசீனம் செய்கின்றார்களா என்ற கேள்வியும் தற்போது நிலவுகின்றது. இதேவேளை வைக்கோலை எரிக்கக்கூடாது என பலமுறை கமநல சேவைகள் மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தல்கள் வழங்கியும் விவசாயப்பெருமக்கள் தங்கள் மன இச்சைப்படி விவசாயிகள் செயற்படுகின்றனரா என்ற கேள்வியும் மத்திய நிலையங்களில் நிலவுகிறது. உண்மையில் விவசாயிகளை அந்தந்த வயல் காணிகளின் சொந்தக்காரர்கள் வழிநடத்தும் விதத்தில் இவைகள் உருவேடுத்திருப்பதாகவும் அறிய முடிகின்றது. மேலும் சிலர் தங்கள் தங்கள் சொந்த வயல் காணிகளிலும், மேலும் சிலர் குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்வதினாலும் இவ்வாறான நெறுமுறை தவறிய விடயங்கள் நடைபெறுகின்றது.

உண்மையில் அறுவடை செய்யப்படும் வேளாண்மைகள் மூலமாக உருவாகும் வைக்கோல்கள் எரிக்கப்படாமல் அந்தந்த வயல்களிலே தொடர்ந்தும் தேங்கிக் கிடக்குமானால் அவைகள் இயற்கைப்பசளையாக மாறி இன்னும் இன்னும் மேலதிக விளைச்சல்களைப் பெற்றுக்கொடுக்கும். இதனால் அதிக இலாபங்களை விவசாயிகள் அடைந்து கொள்ளலாம். இதேவேளை வைக்கோல்கள் எரிக்கப்படுவதனால் பல்வேறு சமூகப்பிரச்சினைகளுக்கு அந்தந்த சமூகங்கள் உள்வாங்கப்படுகிறது. இதிலும் குறிப்பாக வைக்கோல்கள் எரிக்கப்படும் போது அதிலிருந்து வெளியாகும் துகள்கள் புகைமூலமாக காற்றினால் வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள், பொது இடங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் போன்ற இடங்களில்  உறைந்து காணப்படுகிறது. இதனால் அவைகளைப் பாவிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். மேலும் வைக்கோல் எரியூட்டப்படுவதனால் பிரதானமாக சூழல் மாசுபடுகின்றது. 

இது தவிர கால்நடைகளை வளர்ப்பவர்களும் கூட அதீத பிரச்சினைகளை சந்திக்கின்றனர். உண்மையில் மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும் போது வேளான்மை அறுவடை செய்த பிற்பாடுதான் கால்நடைகளுக்கு அவைகளின் உணவுகள் அதிகமாக கிடைக்கப்பெறுகின்றன. அதிலும் குறிப்பாக வைக்கோலும் உள்ளடங்கும். எனவே இதனை எரிப்பதனால் அவைகள் மேய்ச்சல் தரையின்றி, போதிய உணவின்றி கஷ்டப்படும் அல்லவா..? எனவே அவைகளுக்கு கிடைக்க இருக்கின்ற உணவினை மனித சமுதாயம் எரித்து நாசமாக்குவது சரிதானா..? இதனை விவசாயிகளும் காணிச்சொந்தக்காரர்களும் சற்று சிந்திப்பது நல்லதல்லவா..? இதேவேளை கடந்த காலங்களில் தாங்கள்  தீமூட்டும் காணிகளுக்கு அப்பால் காணப்படும் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள சில வேளாண்மைகளும் தீயினால் கருகி சாம்பலான நிலைகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்த விடயமெல்லாம் தொடர்ந்து நடைபெற்றால் இதற்கு பொறுப்புக்கூறுவது  யார்..?

இந்த விடயம் சம்பந்தமாக நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் அவர்களிடம் கேட்ட போது,

வைக்கோலை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது சம்பந்தமாக வயல் காணிகளின் சொந்தக்காரர்களுக்கும் அறிவுத்தல் வழங்கியிருக்கின்றோம். மேலும் வைக்கோலை எரிக்க வேண்டாம் என வணக்கஸ்தலங்கள் மற்றும் பொது இடங்களிலும் அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கின்றோம். இருந்த போதும் விவசாயிகள் தொடர்ந்தும் அவைகளை உதாசீனம் செய்துவருகின்றனர் எனத்தெரிவித்தார்.  அப்படிஎன்றால் தங்களால் அவர்களுக்கெதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்க முடியாது போயுள்ளதா என்று கேட்ட போது....? நிச்சயமாக நடவடிக்கை எடுக்க முடியும்! ஆனால் அதற்குரிய போதிய ஆதாரங்கள் இல்லை. இருந்தாலும் ஒரு வயற்காணிக்கு  ஒருவர் தீமூட்டும் போது அதனை இரண்டு பேர்கள் தகுந்த சாட்சி ஆதாரங்களுடன் நிரூபிக்கும் பட்சத்தில் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமெனவும், வைக்கோலை எரிப்பவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் "மானிய உரம்" கண்டிப்பாக இடைநிறுத்தப்படும் எனவும் நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையத்தின் கமநல அதிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் அக்டோபர் மாதம் அடுத்த போகம் ஆரம்பிக்கப்படும் வேளை கமநல சேவைகள் உரிய நடவடிக்கைகளை எடுத் வைக்கோலை எரிக்காமல் பாதுகாப்பது அந்த நிலையத்தின்  தார்மீகக்கடமையாகும்.

No comments

Powered by Blogger.