Header Ads



பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் மிகவும் நல்ல மனிதர் - ரவூப் ஹக்கீம் சான்றிதழ்

(டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்)

தம்புள்ளையில் பத்திரகாளி அம்மன் சிலையை தகர்த்தவர்களை கண்டுபிடிக்க முடியாதது அரசாங்கத்திற்குப் பெரிய அவமானம் என நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மன்னார் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். அந்த படுமோசமான செயலை தாம் மிகவும் வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் கூறினார்.

மன்னார், மாந்தை மற்றும் முசலி பிரதேசங்களில் நடைபெற்ற சில தேர்தல் பிரசார கூட்டங்களிலும் அமைச்சர் ஹக்கீம் இதுபற்றி பிரஸ்தாபித்தார்.
அமைச்சர் புதுக்குடியிருப்பில் உரையாற்றும் போது இதுபற்றி மேலும் தெரிவித்ததாவது,

தம்புள்ளையில் சில தமிழ் குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன. அங்குள்ள கோயிலில் அந்த மக்கள் வழிபட்டு வந்த ஸ்ரீ பத்திரகாளி அம்மனின் சிலையை இனவாதிகள் உடைத்தெறிந்துள்ளமை பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியில் சமயச் சகிப்புத்தன்மை அற்றுப்போயுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது.

பொலீசாரோ, உளவுப் பிரிவினரோ இவ்வாறான, கீழ்த்தரமான செயல்களைப் புரிபவர்களை கண்டுகொள்ளாமலும், தேடிக் கண்டுபிடிக்காமலும் இருப்பது கவலைக்குரியது.

நாட்டின் நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக இருக்கும் நான் இதனைக் கூற உண்மையிலேயே வெட்கப்படுகிறேன். தம்புள்ளை ஜூம்ஆ பள்ளிவாசலுக்கும் இவ்வாறான கதியே நேர்ந்துள்ளது. பள்ளிவாசலை அங்கிருந்து அகற்ற முற்பட்டதையடுத்து நாம் எல்லோருமாக எழுப்பிய எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த விடயம் நிறுத்தி வைக்கப்ப்பட்டிருந்தது. ஆனால், இப்பொழுது பள்ளிவாசலுக்கு அருகில் குடியிருந்த முஸ்லிம்களின் வதிவிடங்களையும் அவர்களது விற்பனை நிலையங்களையும் அப்புறப்படுத்துவதற்கு எத்தனிக்கப்படுகிறது. அங்கு தொழுகை மற்றும் சன்மார்க்க கடமைகளை நிறைவேற்ற வருவோரை இயல்பாகவே தடுத்துவிடும் செயற்பாடாகவே நாம் இதனைக் கண்கிறோம்.

இந் நாட்டில் வாழும் சகல மதத்தினரும் தாம் பின்பற்றியொழுகும் சமயங்களை சுதந்திரமாக அனுஷ்டிப்பதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவ வேண்டும். சமய சகிப்புத் தன்மை அற்ற விதத்தில் இனவாத சக்திகள் தலைதூக்கி எந்தவொரு இனத்தவர் அல்லது சமயத்தவரின் வழிபாட்டுத் தளங்கள் மீதும், அவர்களது வர்த்தக நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை ஜனநாயகம் நிலவும் நாடொன்றில் அனுமதிக்கக் கூடாது.  

இப்பொழுதுள்ள பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் மிகவும் நல்ல மனிதர். அவரை எந்த நேரத்திலும் நாம் தொடர்பு கொள்ளக் கூடியதாக இருப்பது அவரிடம் காணப்படும் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் சம்பவத்தில் அதனோடு சம்பந்தப்பட்டிராத அந்த பொலிஸ் மா அதிபரோடு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் சீறிப் பாய்ந்து தம்மை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள எத்தனித்தது ஓர் அரசியல் நாடகம் என்றார்.

1 comment:

  1. அரசியல் வாதிக்கும் தடுக்க முடியாது என்றல் ஏன் இந்த அரசியல் நமக்கு. ஏன் ஆளும் கட்சியல் இறுக்க வேண்டும். வயிறு வழக்கவா

    ReplyDelete

Powered by Blogger.