ஜனாதிபதி எங்களை வேற்றுக்கிரக மக்கள் மாதிரி பாவிக்காவிட்டால் அவருடன் பேச முடியும்
(ஏ.எல்.ஜுனைதீன்)
ஜனாதிபதி எங்களை வேற்றுக் கிரக மக்கள் மாதிரி பாவிக்காத இடத்தில் எங்களால் அவருடன் பேசி ஒரு தீர்வுக்கு வரமுடியும். எந்தப் பிரச்சினையையும் பேசி அதற்கு தீர்வு காணலாம் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கின்றது. அதே தன்னம்பிக்கை மற்றவர்களுக்கும் இருந்தால் பேசுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என வடமாகாண சபைக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சராகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் பிரேரிக்கப்பட்டுள்ள சி.வி.விக்கினேஸ்வரன் தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாங்களும் இந்நாட்டின் குடிமக்கள் ஜனாதிபதியுடன் பேசுவதில் எங்களுக்கு எதுவித பிரச்சினையுமில்லை. எங்களைப் பொறுத்தவரையில் மக்களை ஏதோ இன்னொரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்று நாங்கள் கணிப்பதில்லை. ஆகவே, ஜனாதிபதியுடன் பேசுவதில் எனக்கு எந்தவிதமான பிரச்சினையுமில்லை. ஜனாதிபதி எங்களை வேற்றுக் கிரக மக்கள் மாதிரி பாவிக்காத இடத்தில் எங்களால் அவருடன் பேசி ஒரு தீர்வுக்கு வர முடியும். இதற்கான தன்னம்பிக்கை என்னிடம் இருக்கின்றது.
தேர்தலில் வெற்றி பெற்ற நாங்கள் நேற்று கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து கூட்டம் ஒன்றை நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் என்னை சபையின் தலைவராகவும் முதலமைச்சு வேட்பாளராகவும் கூட்டத்தில் அவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். இம் முடிவை எங்கள் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆளுநருக்கு தெரியப்படுத்துவார். இது சம்மந்தமான கூட்டம்தான் நேற்று நடைபெற்றது.
இதன் பின்பு நடைபெற்று முடிந்த தேர்தல் சம்மந்தமாக சம்மந்தன் ஐயா அவர்கள் சில வார்த்தைகளை அங்கு கூறினார். நாங்கள் சேர்ந்து நடத்தப் போகின்ற மாகாண சபையில் எவ்வாறான நிர்வாக அலகுகளை வழி நடத்திச் செல்லவிருக்கின்றேன் என்பது சம்மந்தமாக அவர்களுக்கு சில கருத்துக்களை நான் முன் வைத்தேன்.
முதலில் நாங்கள் நிர்வாக அலகை சரியாக நிலை நிறுத்த வேண்டும். இது சம்மந்தமாக நான் கூறியது என்னவென்றால் என்னையும் சேர்த்து 5 அமைச்சர்களை நாங்கள் நியமித்தாலும் ஏனைய 25 பேர் சபையில் இருக்கின்றார்கள். அவர்களை ஐந்து, ஐந்து பேர்களாக ஒவ்வொரு அமைச்சுக்கும் அவர்கள் தங்களுடைய பங்கை ஆற்றவேண்டியிருக்கும். எவருமே இதிலிருந்து விடுபட மாட்டார்கள். இது சம்மந்தமாக யார், யார் தேர்ந்து எடுக்கப்படல் வேண்டும் என்பது சம்மந்தமாக அவர்களிடமிருந்து அவர்களுடைய தகைமைகள் பற்றிய தகவல்களையும் நான் கேட்டறிந்திருக்கின்றேன். ஆகவே, உடனடியாக நாம் செய்ய வேண்டியது நிர்வாக சம்மந்தமான அலகை நிலை நிறுத்துவது. அதன் பின்னர் எங்களுடைய மக்களுக்கு உடனடித் தேவையாக இருக்கும் பிரச்சினைகளை நாங்கள் சேர்ந்து கலந்தாலோசித்து நடவடிக்கை எடுப்போம். அரசாங்கத்திடமிருந்து நிதியையும் பெறல் வேண்டும். என்றார்
வாழ்த்துக்கள் தலைவரே. உங்களின் முடிவுகள் நன்றாகவே இருக்கிறது. ஐந்தைந்து பேர் கொண்ட அமைச்சு குழுவில் ஐவரையும் ஐந்து இடங்கள் என்ற கணக்கில் பிரித்து கொடுங்கள். எக்காரணங்கொண்டும் பதவியாசைகளுக்காக சுயனலத்திற்காக உங்களுக்குள் எந்த பிரிவினையோ பாகுபாடோ வரவேண்டாம். உங்களை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நிரைவேற்றுங்கள். எவரும் உங்கள் வீட்டு சொத்தைக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யப்போவதில்லை. உங்களுடைய ஆட்சி ஏனைய ஆட்சிகளைவிட பல மடங்கு எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்க வேண்டும். எவராவது ஒற்றுமையை விட்டும் விழக நினைத்தால் எப்போதாவது, அவர் விழகி வீட்டிலேயே இருக்கட்டும், தவிர, தனிக்கட்சி அமைத்து அவருக்குப்பின்னாலும் 10 பேரை வைத்து மக்களை கூறுகூறாக்க வேண்டாம், வாழ்த்துக்கள்.
ReplyDelete"முறையான திட்டமிடலே சிறப்பான நிர்வாகத்திற்கு வழிகோலும்." அந்த வகையில் முதலமைச்சர் வகுத்துள்ள நிர்வாக அலகைக் கட்டமைத்தல் என்பது மிகச் சரியானதேயாகும்.
ReplyDeleteஜனாதிபதியுடன் பேசி சகல பிரச்சினைகளுக்கும் "நமக்குள்ளே நாம் தீர்வைக் காண முடியும்" என்கிற தங்களின் திடமான நம்பிக்கையையும் நான் மெச்சுகின்றேன்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் தங்களது வயதையும் பொருட்படுத்தாது இத்தமிழ் பேசும் சமூகத்தின் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளும் நல்லெண்ணச் செயற்பாடுகள் அனைத்திற்கும் பேரருள் புரிவானாக!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-