Header Ads



மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் புதிய உறவுகள் ஆரம்பம்

ஈரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியின் விளைவாக மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், ஈரான் அணுகுண்டு தயாரிக்கக்கூடும் என்ற அச்சமும் அந்நாடுகளுக்கு இருந்து வந்தது. ஈரான் அதனைத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும் அரசியல் சூழ்நிலைகள் ஈரானுக்கு சாதகமாக இல்லை.

இந்த நிலையில், ஈரானின் புதிய அதிபராக ஹசன் ருஹானி பதவி ஏற்றபின் பதட்ட சூழ்நிலைகள் தணிந்து காணப்படுகின்றன. ருஹானி நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு தனது முதல் உரையை ஆற்றினார். இந்த சமயத்தில் அவர் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை சந்திப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆயினும் இந்த சந்திப்பு சிக்கல்களைத் தோற்றுவிக்கக்கூடும் என்பதால் தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று காலை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்துகொண்டார். ஈரானின் சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிப் அந்தக் கூட்டத்தில் பங்கு கொண்டார். அப்போது ஈரானின் புதிய அரசாங்கத்தை வரவேற்றுப் பேசிய ஒபாமா, அணுசக்தி குறித்த விஷயங்களிலும் புதிய அணுகுமுறைகள் பரிசீலிக்கப்படும் என்று தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

நேற்று மதியம் ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூன் அளித்த விருந்திலும் மதுவகைகள் பரிமாறப்படும் என்ற காரணத்தினால் ருஹானி அதனைத் தவிர்த்துவிட்டார். நேற்று மதியம் ஐ. நா பொதுக்குழுவில் உரையாற்றிய ருஹானி பிரான்ஸ் அதிபர் ஹாலன்டேவைச் சந்தித்தார். கடந்த 2005-ம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்றுள்ள இந்த முதல் சந்திப்பிற்குப் பின்னர், ஈரான் அணுசக்தித் திட்டங்களின் மூலம் பொதுப் பலன்களைப் பெறலாம், ஆனால் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட முடியாது என்று தொடர்ந்து 10 வருடங்களாக பிரான்ஸ் கூறிவருவதாக அதிபர் ஹாலன்டே தெரிவித்தார்.

நாளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரியுடன் சந்திக்க இருக்கும் ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவத் சரிப் மூலம் மேற்கத்திய நாடுகளுடனான ஈரானின் புதிய உறவுகள் குறித்த சகாப்தம் தொடங்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.

No comments

Powered by Blogger.