Header Ads



சிவசேனா கட்சியுடன் இலங்கைக்கு இரகசிய தொடர்பா..?

(Pp) இந்தியாவில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான, நரேந்திரமோடியுடன் இலங்கை அரசாங்கம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் இறங்கியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.  இதுதொடர்பாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது- 

கடந்தவாரம், நடந்த ஒரு சம்பவம், பாஜக தலைவர் நரேந்திரமோடியுடன் இலங்கை  அரசாங்கம் இணக்கத்தை ஏற்படுத்த முனைகிறது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்தவாரம் உலங்குவானூர்தி ஒன்று குறிப்பிட்ட பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. 

தற்போது எடுக்கப்பட்டு வரும் புதிய படமான பொம்பே வெல்வெட் ஹிந்தித் திரைப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களைத் தாங்கிய விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி தொம்பேயில் உள்ள தேவி பெண்கள் பாடசாலை மைதானத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 

உலங்கு வானூர்த்தி கண்டியில் இருந்து காலி நோக்கி, பொலிவூட் நட்சத்திரங்களான, ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா ஆகியோர் பயணம் செய்தனர். 

அவர்கள், இன்னொரு உலங்கு வானூர்தி மூலம், கொக்கலவுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர் என்றும் செய்திகளில் கூறப்பட்டிருந்தது. 

அதிலிருந்த பயணிகள் தொடர்பாக, விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் அன்ரூ விஜேசூரியவிடம், மேலதிக விபரங்களைக் கேட்ட போது,உலங்கு வானூர்தியை வாடகைக்கு அமர்த்தியிருந்த தனியார் நிறுவனம் குறித்த விபரங்களை வழங்க மறுத்து விட்டார். 

ஆனால், ரன்மிகிதென்ன தொலைக்காட்சிப் படப்பிடிப்புக் கிராமத்தில் படமாக்கப்பட்டு வரும், ஹிந்திப் படத்தில் நடித்து வரும், ரன்பீர் கபூர் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோரே அதில் இருந்ததாக ஊடகங்களில் தகவல் பரவியது. 

சிறிலங்காவோ, இந்தியாவோ இந்தச் செய்தியை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ இல்லை. 

ஆனால், அந்த உலங்குவானூர்தியில், குறிப்பிட்ட திரைநட்சத்திரங்கள் இருக்கவில்லை. 

உண்மையில், அதில் இருந்தது ஒரு வேறொரு முக்கிய பிரமுகர். அவர் ஏன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டார்? 

அந்த உலங்கு வானூர்தியில் இருந்த மர்மமான பயணி, சிவ்சேனாவின் புதிய தலைவர் உத்தவ் தாக்கரே. 

எதிர்காலத்தில் அமையவுள்ள பாஜக அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிதான் சிவ்சேனா. 

இவரது தந்தை பால் தாக்கரேயினால், உருவாக்கப்பட்ட கடும்போக்குவாத சிவ்சேனா கட்சியின் தலைவராக, உத்தவ் தாக்கேரே பொறுப்பேற்றார். 

இவர் பயணம் செய்த உலங்குவானூர்தி இயந்திரக் கோளாறினால், தொம்பேயில் அவசரமாகத் தரையிறங்காது போயிருந்தால், தாக்கரேயின் பயணம் இன்னொரு இரகசியமாகவே இருந்திருக்கும். 

சில மாதங்களுக்கு முன்னர், உத்தவ் தாக்கரே, தனியார் ஜெட் ஒன்றின் மூலம், சிறிலங்காவுக்கு வந்திருந்ததாக, தெரியவந்துள்ளது. 

கோடீஸ்வர அரசியல்வாதியான அவர், ஒளிப்படங்களைப் பிடிப்பதில் தீவிர ஆர்வம் உள்ளவர். 

அவரது ஒளிப்படக் கருவிகளை, மீட்பு உலங்கு வானூர்திக்கு மாற்றியதைக் கண்ட ஊடகவியலாளர்கள், பொலிவூட் நட்சத்திரங்களே அதில் பயணம் செய்ததாக தவறாக கருதியிருந்தனர். 

வில்பத்து தேசிய பூங்காவில், ஒளிப்படங்களை எடுப்பதற்கன முன்னைய பயணத்தின் போது உத்தவ் தாக்கரே, சிறிலங்கா அதிபரையும் சந்தித்தார் என்பது இப்போது புரிந்துள்ளது. 

எதிர்கால இந்திய அரசுக்கும், சிறிலங்கா அரசுக்கும் பாலம் கட்டும் நோக்கிலேயே தாக்கரே இந்த இரகசிய பயணத்தை மேற்கொண்டதாக ஊகிக்கப்படுகிறது. 

எனினும் இந்தியா, தாக்கரேயின் பயணத்தை உறுதிப்படுத்தவோ, நிராகரிக்கவோ இல்லை. 

1 comment:

  1. மேற் கண்ட செய்தியை தயாரித்தவர் தமிழ்நாட்டு நினிமா துறையில் நடிகைகளை பற்றி கிசு கிசு செய்திகள் தயாரிப்பவராக பணியாற்றினாரா தெரியவில்லை! சிவ சேனா தலைவர் பால் தாக்கரே முன்பு பாக்கிஸ்தானை தாக்குவற்க்கு இந்தியா விடுதலை புலிகளின் உதவியை பெற்று கொள்ள வேண்டும் என்று கூறி வெளிநாட்டிலும் தமிழ்நாட்டிலும் உள்ள புலி ஆதரவாளர்களுக்கு கிளு கிளுப்பு ஊட்டிவர்.

    ReplyDelete

Powered by Blogger.