Header Ads



சிரியா விவகாரத்தில் இஸ்லாமிய தேசம் என்ற நோக்கை முன்வைத்து ஒன்றுபட அழைப்பு

(Tn) சிரிய அரசுக்கு எதிராகப் போராடும் பிரதான இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்கள், வெளிநாட்டை மையமாகக் கொண்டு செயற்படும் எதிர்த்தரப்பு குழுவை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளது.  இதில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்திற்கு எதிரான சிரிய தேசிய கூட்டணியை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நிராகரித்துள்ளனர்.

“அஹமத் தொமாஹ் தலை மையிலான தேசிய கூட்டணி அரசு எம்மை பிரதிநிதித்துவப்படுத்த வுமில்லை அவர்கள் அங்கீகரிக்கப்பட வுமில்லை” என்று சிரியாவின் 13 பலம்வாய்ந்த கிளர்ச்சிக் குழுக்கள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப் பட்டுள்ளது.

இந்த குழுக்களில் சிரிய கிளர்ச்சியாளர்களின் கூட்டணியான சுயாதீன சிரிய படையில் அங்கத்துவம் பெற்றிருக்கும் பிரதான கிளர்ச்சிக் குழுக்களும் உள்ளடங்குகிறது. அதே போன்று சிரிய வடக்கு மாகாணமான அலப்போவின் பிரதான கிளர்ச்சிப் படையான லிவா அல் தவ்ஹித் மற்றும் அல் கொய்தா கிளையான இல் நுஸ்ரா ஆகிய கிளர்ச்சிப் படைகளும் உள்ளடங்குகின்றன.

அல் கொய்தா ஈராக் கிளையுடன் கூட்டுச் சேர்ந்த அல் நுஸ்ரா முன்னணியை ஐ. நா. பாதுகாப்புச் சபை தடை செய்துள்ளதோடு, இந்தக் குழுவை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த ஆண்டு டிசம்பரில் தீவிரவாத பட்டியலில் இணைத்தது. இந்த அறிக்கையில் சிரிய சுயாதீனப் படையில் இருக்கும் அஹ்ரார் அல் ஷாம் கிளர்ச்சிப்படையும் கையொப்பம் இட்டுள்ளது. குறித்த அறிக்கை இஸ்லாமிய சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் கீழ் இஸ்லாமிய கோட்பாட்டுக்கு அமைய அனைத்து ஆயுதப் படைகளும் சிவில் குழுக்களும் ஐக்கியப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்” என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.  அத்துடன் பிரிவினைகளை நிராகரித்து ஒரே (இஸ்லாமிய) தேசம் என்ற நோக்கை முன்வைத்து ஒன்றுபடவும் மேற்படி கிளர்ச்சியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான மோதல்கள் அண்மைக்காலத்தில் வலுத்துவரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் செயற்படும் அல் கொய்தா பிரிவான ஈராக் இஸ்லாமிய தேசம் அலப் போவின் அல்பாப் நகரில் இருக்கும் இரு கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக கடந்த வாரம் யுத்தத்தை பிரகடனப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் துருக்கி எல்லையை ஒட்டிய பகுதியில் ஏனைய கிளர்ச்சியாளர்களுடன் ஈராக் இஸ்லாமிய நேச போராளிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதலில் ஈடுபட்டதில் பல போராளிகள் கொல்லப்பட்டனர். இதேபோன்று அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட இரு குழுக்களான ஈராக் இஸ்லாமிய தேசம் மற்றும் ஜபாத் அல் நூஸ்ராவுக்கு இடையிலும் கடந்த சனிக்கிழமை சிரிய கிழக்கு மாகாணமான ஹஸாகாவில் மோதல் வெடித்ததாக மனித உரிமை தொடர்பான கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.