ஒபாமாவுடன் ருஹானி நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்து மாறுபட்ட கருத்துகளுடன் ஈரானிய மக்கள்
ஐ.நா பொதுக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த ஈரானின் புதிய அதிபர் ஹசன் ருஹானி ஆறு வருடங்களுக்குப் பின்னர் அமெரிக்க அதிபராக உள்ள பாரக் ஒபாமாவுடன் தொலைபேசியில் உரையாடினார். இதன்மூலம், ஈரானின் அணுசக்திப் பிரச்சினையும், பொருளாதாரத் தடைகளும் நீங்குவதற்கான முதல் முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக உலக நாடுகள் கருதுகின்றன. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஈரானிய மக்கள் இந்த முயற்சியை வரவேற்றுள்ளனர். சீர்திருத்தவாதிகளும், பழமைவாத மதத்தலைமையும் கூட இதனை ஆமோதித்துள்ளனர்.
ஆயினும், ஈரானியர்களில் ஒரு சாராரால் இது தீவிரமாக எதிர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பயணம் முடிந்து இன்று ஈரான் திரும்பிய ஹசன் ருஹானியின் வாகனத்தை ஏராளமான ஈரான் மக்கள் 'அமெரிக்காவிற்கு மரணம்' என்று வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளுடன் மறித்து கோஷமிட முற்பட்டனர்.
இதில் ஒருவர் தனது செருப்பை அவரை நோக்கி வீசியதாகவும் கூறப்படுகின்றது. மத்திய கிழக்கு நாடுகளில் இது ஒரு பொதுவான அவமதிப்பு செயலாக கருதப்படுகின்றது. முட்டைகளும் அவரது வாகனம் மீது வீசப்பட்டதாக மற்ற செய்திகள் தெரிவித்துள்ளன. ஜூன் தேர்தலில் ருஹானி பேசிய 'சாத்தானுடன் பேச்சுவார்த்தை நம்பிக்கை மற்றும் மதிநுட்பத்தை வெளிப்படுத்தாது' என்ற வாசகத்தை அவரது எதிர்ப்பாளர்கள் இன்று பிரயோகித்தனர்.
ருஹானியின் ஆதரவாளர்கள் மோதலுக்குப் பதிலாக சமாதானத்திற்கு முயன்ற அவரை வரவேற்று வாழ்த்து அட்டைகளுடன் வந்திருந்தனர். 'போர் வேண்டாம், அமைதி வேண்டும்' என்று எழுதியிருந்த அட்டைகளையும் அவர்கள் பிடித்திருந்தனர். முப்பது வருடங்களாக அமெரிக்காவுடனான பகைமை குறைத்து ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்கி அணு ஆயதப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முன், ஈரானை ஒன்று படச் செய்யும் கடினமான பணி ருஹானிக்கு உள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஈரானின் தலைவரான அயத்துல்லா அலி காமினியின் விமர்சன ஆதரவு கிடைத்துள்ளது. ஆயினும், சக்தி வாய்ந்த நபரின் ஒப்புதல் கிடைத்தபோதிலும் இந்த முன்னேற்றங்கள் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களை அமைதிப்படுத்த அவை போதுமானதாக இல்லை என்று கருதப்படுகின்றது.
Post a Comment