இலங்கை ஹாஜிகளை ஏற்றிய முதலாவது விமானம் நாளை புறப்படுகிறது
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருட புனித ஹஜ் கடமைக்கான ஹாஜிகளை ஏற்றிய முதலாவது பயணிகள் விமானம் நாளை வெள்ளிக்கிழமை 13-09-2013 இலங்கையில் இருந்து புனித மக்கா நோக்கி பயணமாகவுள்ளது.
இவ்ருடம் இலங்கையில் இருந்து 2240 ஹாஜிகள் ஹஜ் கடமையை நிறைவேற்ற சவுதி அரசாங்கத்தால் அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் முதல் தொகுதியில் சுமார் 75 ஹாஜிகளை ஏற்றிய விமானம் நாளை பிற்பகல் 4.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா நோக்கி செல்லவிருப்பதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் தெரிவிக்கின்றார்.
முதலாவது தொகுதி ஹாஜிகளை வழியனுப்பி வைக்கும் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 1.00 மணிக்கு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிரதமரும் புத்தசாசன மத விவகார அமைச்சருமான கலாநிதி டி.எம். ஜயரத்ன தலைமையில் இடம்பெறவிருப்பதுடன் மேற்படி நிகழ்வில் பல அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
கடந்த காலங்களைப்போல் இவ்வருடமும் இலங்கைக் ஹாஜிகளின் நலன் கருதி புனித ஹஜ் காலத்தில் மக்கா மினா, அறபா மற்றும் மதினா போன்ற இடங்களில் இலவசமான மருத்து சேவையும் வழங்கப்பட இருப்பதுடன் இதற்காக திணைக்களம் ஒரு தொகுதி மருந்துப் பொருட்களையும் இப்பணியில் சுமார் நான்கு வைத்தியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரையும் ஹாஜிகளுடன் அனுப்பிவைக்க இருப்பதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து ஹாஜிகளை ஏற்றிய விமானங்கள் சவுதி அரேபியாவின் ஜித்தா விமான நிலையத்தை நோக்கி பயணக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment