Header Ads



துருக்கியில் ஹிஜாப் மீதான தடை நீக்கம் - ஆண்களுக்கு தாடி வைக்க அனுமதி

துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகனின் புதிய அரசியல் சீர்திருத்த திட்டத்தின் கீழ் அந்நாட்டு அரச நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

“பொது நிறுவனங்களில் ஹிஜாப் தடையை அகற்றுகிறோம்” என்று பிரதமர் அறிவித்தார். அதேபோன்று புதிய சீர்திருத்த திட்டத்தில் நாட்டின் குர்த்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கு மேலும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் குர்திஷ் ஆதரவு மற்றும் சிறு கட்சிகளுக்கு பாராளுமன்றத்திற்கு நுழைய இருந்த தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளதோடு தனியார் பாடசாலைகளில் குர்திஷ் மொழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று நேற்று புதிய அரசியல் சீர்திருத்தத்தை அறிவித்த எர்டொகன் கூறினார். “துருக்கி நகரங்களுக்கு மீண்டும் குர்திஷ் பெயர் வைக்கப்படும். குர்திஷ் எழுத்துக்கான தடை விலக்கிக் கொள்ளப்படும்” என்று எர்டொகன் குறிப்பிட்டார்.

துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ் தொழிலாளர் கட்சியுடனான அரசின் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாகவே இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் அரச சேவையில் இருக்கும் பெண்களுக்கு நடைமுறையில் இருந்த உடை கட்டுப்பாடு விலக்கிக்கொள்ள எர்டொகனின் அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் அறிவிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு ஹிஜாப் அணிய அனுமதியளிக்கப்படுகிறது. அதேபோன்று ஆண்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரச சேவையில் இருக்கும் ஆண்களுக்கு தாடி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.

மதச்சார்பற்ற துருக்கியில் இஸ்லாமிய பின்னணியுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர் எர்டொகன் அரசு, நாட்டின் ஹிஜாப் தடையை விலக்க நீண்ட காலமாக போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது. tn

No comments

Powered by Blogger.