புத்தளம் வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் மோசடி - பௌத்த தேரர் மனு தாக்கல்
(nf) நடைபெற்று முடிவடைந்த மாகாண சபைத் தேர்தல்களின் புத்தளம் மாவட்டத்தின் புனித அன்ரு பாடசாலைகளில் இடம்பெற்ற வாக்கெண்ணும் நடவடிக்கைகளில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று 30-09-2013 மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனசெத முன்னணியின் தலைவர் பத்தரமுல்லே சீலரதன தேரரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர், உதவி தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர், புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி மற்றும் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தேர்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் புத்தளம் அன்ரு பாடசாலையிலிருந்து சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் பொலிஸாரினால் கண்டெக்கப்பட்டு, நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதாக பத்தரமுல்லே சீலரதன தேரரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் சட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவில்லை எனக் கோரி 10 பேர் சத்திய கடதாசி முன்வைத்துள்ளதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடாத்துவதாக தேர்தல்கள் ஆணையாளர் உறுதியளித்ததாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, வாக்காளர்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமையினால், புத்தளம் மாவட்டத்தில் வாக்கெண்ணும் நடவடிக்கைகளின் பின்னர் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை ரத்து செய்வதற்கு ஆணையிடுமாறும் சீலரதன தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வாக்குகளை மீண்டும் எண்ணுவதற்கு பிரதிவாதிகளுக்கு ஆணையிடுமாறும், மீண்டும் தேர்தல் ஒன்றை நடாத்துமாறும் மனுவின் ஊடாக பத்தரமுல்லே சீலரதன தேரர் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
Post a Comment