Header Ads



இலங்கையில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் - அமெரிக்கா எச்சரிக்கை

ஐ.நா மனிதஉரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிவித்தது போலவே, பொறுப்புக்கூறுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்காது போனால், அனைத்துலக விசாரணைக்கு வலியுறுத்தப்படும் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது. 

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 24வது அமர்வில், சிறிலங்கா குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக உரையாற்றிய அமெரிக்கப் பிரதிநிதி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். 

“மனிதஉரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக, ஒத்துழைப்பு வழங்கும் ஐ.நா மனிதஉரிமை ஆணையம் மற்றும் நாடுகளை அமெரிக்கா பாராட்டுகிறது. 

சிறிலங்கா தொடர்பான நிலைமைகளை வெளிப்படுத்திய பிரதி ஆணையருக்கு எமது நன்றி. 

மூன்று மாகாணங்களுக்கான தேர்தல் வெற்றிகரமாக நடந்துள்ளதற்கு சிறிலங்கா மக்களுக்கு அமெரிக்காவின் வாழ்த்துக்கள். 

மாகாணசபைகளுடன் ஆக்கபூர்வமான முறையில் இணைந்து செயற்படுமாறும், அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் கடப்பாட்டை நிறைவேற்றுமாறும் சிறிலங்கா அரசசாங்கத்தை அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது. 

குறிப்பாக கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் தொடர்பான கட்டுப்பாடுகள், மனிதஉரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், நீதித்துறைத் தலையீடுகள், குறித்து, மனிதஉரிமை ஆணையரின் கவலைகளை நாமும் பிரதிபலிக்கிறோம். 

மத சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பாகுபாடுகள் அதிகரித்து வருவது குறித்தும், மனிதஉரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களை புரிவோர் தண்டிக்கப்படுவதில் இருந்து தப்பித்தல், அமைதியாக ஒன்று கூடுவதற்கான கட்டுப்பாடுகள், வெலிவேரியவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான மனிதஉரிமை ஆணையரின் கவலைகளுடன் நாமும் பங்கு கொள்கிறோம். 

பொறுப்புக்கூறுவதில் முன்னேற்றமின்மை, அனைத்துலக விசாரணையை வலியுறுத்தும் என்ற மனிதஉரிமை ஆணையரின் கருத்தை நாடும் சுட்டிக்காட்டுகிறோம்.  

நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நிறைவேற்றுவது, அனைத்துலக மனிதாபிமான, மற்றும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான நம்பகமான, சுதந்திரமான விசாரணைகளை நடத்துவது உள்ளிட்ட, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19/2, 22/1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும்படி சிறிலங்கா அரசாங்கத்தை நாம் கேட்டுக் கொள்கிறோம்.  

ஐ.நா மனிதஉரிமை ஆணையரின் பயணத்துக்கான ஒத்துழைப்பை வழங்கிய சிறிலங்காவை மதிப்பதுடன், சம்பந்தப்பட்ட எல்லா ஐ.நா பார்வையாளர்களும் பயணம் செய்வதற்கு ஒழுங்கு செய்யும் படி சிறிலங்காவைக் கேட்டுக் கொள்கிறோம். 

ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தின் தொழில்நுட்பஉதவிகளை ஏற்றுக் கொள்ளும்படியும் சிறிலங்காவை ஊக்குவிக்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.