Header Ads



எதனைக் கிழித்து விட்டீர்கள்...?

(ஏ.எல்.ஜுனைதீன்)

  முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் நடைபெறவிருக்கும் இந்த தேர்தலில் உண்மையில் அரசாங்கத்தின் மீதான பல வெறுப்புணர்வுகள் காணப்படுவது பரவலாக நாங்கள் அறிந்த விடயமாகும். அதனால்தான் எங்கள் தலைமையை கட்சிப் போராளிகள், ஆதரவாளர்கள் அரசாங்கத்தில் தொடர்ந்தும் ஏன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்? எதனைக் கிழித்து விட்டீர்கள்? என்றெல்லாம் பகிரங்கமாக குற்றம் சுமத்திப் பேசுகின்றார்கள்.  இப்படி இவர்கள் பேசுவதற்கும் காரணம் இருக்கின்றது. உண்மையில் அரசாங்கம்  சில விடயங்களில் மெத்தனப் போக்குடன் காணப்படுவதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை காணப்படுகின்றது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இன்று  (2013.09.15) ஞாயிற்றுக்கிழமை சக்தி தொலைக் காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் இந் நிகழ்ச்சியில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது,

  அண்மையில் தோற்றம் பெற்ற இனவாத அமைப்புக்கள் குறிப்பாக பொதுபல சேனா  போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களை பாதிக்கும் வண்ணம் செயல்பட்டு வருகின்றது.  அந்த இயக்கம் முஸ்லிம் வழிபாட்டுத் தளங்கள், முஸ்லிம் பெண்களின் உடை அமைப்புக்கள் என்பனவற்றில் விமர்சனங்களைச் செய்து முஸ்லிம்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்ற விடயங்கள் மக்கள் மத்தியில் கவலையைத் தோற்றுவித்திருக்கிறது.

 ஏன் இதனை ஆட்சியாளர்கள் கட்டுப்படுத்த முடியாது? இந்நாட்டிலிருந்து செயல்பட்ட சக்திமிக்க விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்திய இந்த அரசாங்கம் சிறு, சிறு குழுக்களாக இயங்கும் இந்த அமைப்புக்களைக் கட்டுப்படுத்தி  இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க ஏன் முன் வருவதாக இல்லை என்ற பிரச்சினை புதிதாக எழுந்துள்ளது.

  இதுமட்டுமல்லாமல், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக பல காணி சுவிகரிப்பு நடவடிக்கைகள் இன்று ஏற்பட்டிருக்கிறது. நேற்றுக்கூட புல்மோட்டையில்  முஸ்லிம்களுக்குச் சொந்தமான கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஏக்கர் நிலங்கள் அதுவும் தனியார்களுக்குச் சொந்தமான உறுதிகளைக் கொண்ட நிலங்களைக் அங்கிருக்கும் கச்சேரி நிர்வாகம் கடுமையாக புதை பொருள் ஆராய்ச்சி என்ற அடிப்படையில் கைப்பற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக அங்கிருக்கும் மாகாண சபை உறுப்பினர் அன்வர் உட்பட பள்ளிவாசல் தலைவர் ஆகியோரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.

  இது போன்ற நிலைதான் அம்பாறை மாவட்டத்திலும் குறிப்பாக பொத்துவில் பிரதேசத்திலும் காணப்படுகின்றது. இவை எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற பொழுதும், அதைபோன்று தென் இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினை மற்றும் வர்த்தக ரீதியிலான நெருக்கடி என்பனவற்றிக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்தும் அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் இருப்பதன் காரணமாக இன்று கட்சிக்கும் எங்களுக்கும் பல அழுத்தங்கள் வந்து கொண்டிருக்கின்றது.

  இருந்தாலும், ஒரு விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெளிவாக இருக்கின்றது. எமது கட்சியின் நடவடிக்கைகள் இந்த நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்ற பொழுது அரசாங்கத்தை உள்ளுக்குள் இருந்து இந்த விடயங்களைக் கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைகளை நாங்கள் பல வருடங்களாக மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம்.

  குறிப்பாக பள்ளிவாசல்கள் பிரச்சினைகள் வந்தபோது கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.  சர்வதேச கொழும்பிலுள்ள இராஜதந்திரிகள் ஊடாக அரசுக்கு இது குறித்து அழுத்தங்களைக் கொடுத்துள்ளோம். இப்படியாக பல விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று வரை அரசுக்குள் இருந்து போராடி வருகின்றது.

  ஐக்கிய தேசியக் கட்சியைப் பொறுத்த மட்டில் இன்று அக்கட்சி கனவு உலகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இந்நாட்டில் 29 சதவீத வாக்குகள் இருந்து கொண்டிருக்கின்றதும் ஏனைய தமிழ், முஸ்லிம் வாக்குகளைச் சேர்த்தால் 45 சத வீதமான வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கட்சி நினைக்கின்றது.

  ஆனால், நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் குறிப்பாகக் கண்டி மாவட்டத்தில் வேட்பாளர்களாக 7 முஸ்லிம்களை நிறுத்தி அம்மாகாணத்தில் வழமையாக தெரிவாகி வருகின்ற முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களை இல்லாமல் செய்வதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்தக் கால கட்டத்தில் முஸ்லிம் சமூகம்,  தமிழ், முஸ்லிம் அடிப்படையில் தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.என முஸ்லிம் சமூகத்திடம் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன்.

  பயங்கரவாதச் செயல்கள் சம்மந்தமான நடவடிக்கைகளில் முஸ்லிம்களில் ஒரு குழு இயங்குகின்றது என பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட பொழுது முதன் முதலாக தனது கண்டணத்தைத் தெரிவித்த கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸாகும். அதன்  தலைமை மிகத் தெளிவாக பல பக்க அறிக்கையைக் கூட அவருக்கு அனுப்பியிருந்தது. அவரின் கூற்றில் முஸ்லிம்களுக்குள் இல்லாத ஒரு தீவிரவாதத்தை இந் நாட்டில் முஸ்லிம்களிடையே இருக்கின்றது போன்று காட்ட முற்படுகின்றது. அதனைக் கண்டித்திருக்கின்றோம். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கூறினார்.

3 comments:

  1. தலைவருக்கு ரொன்பவும் நேசமானவர் போல் தெரிகிறது..........????

    ReplyDelete
  2. நீங்கள் முற்பகுதியில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உண்மையான கள நிலவரத்தைப் பிரதிபலிக்கின்றனவாக இருந்த போதிலும், அரசாங்கத்தின் உள்ளிருந்து அதனைக் கட்டுப்படுத்தும் உங்களின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.

    இது வரை உங்களின் கட்சி அரசுடன் இணைந்திருந்து எதனைத்தான் அப்படிக் கட்டுப்படுத்தி இருக்கின்றது?

    அரசாங்கமே உங்களை இருக்க விருப்பமில்லா விட்டால் வெளியேறலாம் என்று பகிரங்கமாகச் சொல்லியுள்ள நிலையிலும் நீங்கள் 'கழுத்தைப் பிடித்து தள்ளினால்தான் வெளியேறுவோம்' என்ற நிலைப்பாட்டிலல்லவா இதுவரை இருந்து கொண்டிருக்கின்றீர்கள்?

    நீங்கள் அரசுக்குள் இருந்து போராடியதை விட மௌனித்து காலங் கடத்தியதே அதிகம்! அதிகம்!!

    இதனால்தான் உங்கள் கட்சியின் தலைவர் கூட அண்மையில் 'நானும், எனது கட்சி உறுப்பினர்களும் சேர்ந்து கொண்டு முஸ்லிம் சமூகத்திற்குச் செய்த பெரும் பாவம், அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு 18வது திருத்தத்திற்கு கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கியதாகும்' என்று பகிரங்கமாகவே புலம்பியிருந்தார்.

    ஐக்கிய தேசியக் கட்சி கனவுலகத்தில் இருந்தாலும் அது 7 முஸ்லிம் வேட்பாளர்களில் ஒருவராக உண்மையாகவே சமூகத்திற்காகக் குரல் கொடுத்து இந்த அரசாங்கத்தின் மரணப்பிடி வரைக்கும் சென்று மீண்டுள்ள ஆஸாத் சாலி என்ற ஒரு சமூகப் போராளியையும் அதன் பட்டியலில் உள்வாங்கியுள்ளது.

    அவருக்காக கண்டி மாவட்டமெங்கும் வாழும் முஸ்லிம்கள் தமது வாக்குகளை அளிப்பார்கள். இப்படி அதிகப்படியாக அளிக்கும்போது எண்ணிக்கையின் அடிப்படையில் ஏனைய உறுப்பினர்களும் தேறி வெல்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.

    எனவே ஐ.தே.கட்சியின் கனவிலும் ஒரு நலமான நனவு உள்ளடங்கியுள்ளது. அது வரும் 21ம் நாள் அனைவருக்கும் புலனாகும்.

    முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகச் சித்தரித்த கோத்தாவுக்கு உங்கள் கட்சி கண்டன அறிக்கையை அனுப்பியது உலகறியத் தெரிந்ததுதான்.

    இப்படித்தான் அரையமைச்சர் ஹிஸ்புல்லாவும் மஹியங்கனைப் பள்ளிவாசல் விடயத்தில் குழப்பக்காரர்களை உடன் கைது செய்யுமாறு கோத்தாவுக்கு அவசரமாகக் கடிதம் அனுப்பி அதை ஊடகங்களில் ஓடவிட்டிருந்தார். என்ன நடந்தது உங்களின் கண்டனங்களுக்கும், அறிக்கைகளுக்கும்?

    பாதுகாப்பு அமைச்சர் புரியாணி சாப்பிட்டு விட்டு அவற்றினால் கைகைளைத் துடைத்துக் கொண்டிருப்பார் என்றே நான் நினைக்கிறேன்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-



    ReplyDelete
  3. அடிக்கல் நாட்டும் கூட்டம்.. அடிக்கல் மட்டும்தான் இவர்களால் செய்ய முடிந்த சேவை.

    ReplyDelete

Powered by Blogger.