Header Ads



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 30 ஆண்டு காலப்போரில் இருந்து இன்னமும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.  கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில், நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர்,

“வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை, ஒரு தேர்தல் அறிக்கை அல்ல. பிரிவினையை இலக்காகக் கொண்ட ஒரு தந்திரோபாய ஆவணம்.  போர் முடிந்த பின்னர் இனங்களிடையே ஒற்றுமையை வளர்த்தெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வரும் தருணத்தில், பிரிவினையை ஏற்படுத்துவதற்காக தந்திரமாக தயாரிக்கப்பட்ட ஆவணமாகவே இதனை கருதுகிறோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முப்பது ஆண்டுகாலப் போரின் மூலம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.  1977 இல் வெளியிடப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தையும் மிஞ்சிய ஆவணமாகவே இதனை கருதுகிறோம். வட்டுக்கோட்டைத் தீர்மானமே வடக்கு இளைஞர்களை பிரிவினைவாதத்துக்குள் தள்ளியமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தது.

அதற்கு மேலும் வலு சேர்ப்பதாகவே இந்த ஆணவம் அமைந்துள்ளது.  இது தமிழ் இளைஞர்களுக்கு நீட்டப்படும் மற்றொரு சயனைட் குப்பி” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.