Header Ads



மலையக தமிழர்களிடம் பாடம் கற்போம், முஸ்லிம் பிரதிநிதித்தவம் குறைவது ஆபத்து - - றிசாத் பதியுதீன்

நடைபெற்று முடிந்த மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைத்திருப்பது கவலைக்குரிய விடயமென்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன், எதிர்வரும் தென மாகாண சபைத் தேர்தலில் அதிகளவு முஸ்லிம் பிரதிநிதித்தவத்தை பெற்றுக்கொள்வதற்கு சிறந்த தந்திரோபாயங்கள் வகுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

வடமாகாண சபை தேர்தலுக்கு பிந்திய நிலவரம் தொடர்பில்  jaffna muslim இணையத்திற்கு தகவல் வழங்கிய அமைச்சர் றிசாத் மேலும் குறிப்பிட்டதாவது,

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் இன்னும் பல நெருக்கடிகள் ஏற்படும் பாதக நிலைமைகள் காணப்படுகிறது. முஸ்லிம்களிடம் பலமான அரசியல் தலைமை இல்லாமையும் உள்ள தலைமைகள் உரியமுறையில் முஸ்லிம்களை வழிநடத்தாமையும், சமூகநல மற்றும் மார்க்க அமைப்புக்கள் முஸ்லிம்களை சரியான முறையில் வழிநடாத்தமையும் முஸ்லிம் சமூகத்தின் பின்னடைவுகளுக்கு காரணமாக அமைகின்றன. இந்நிலை தொடருமாயின் நமது சமூகம் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கிக்கொள்ளும்.

நடந்துமுடிந்த தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவடைந்தமை வேதனைக்குரியது. நம்மவர்கள் வழங்கிய விருப்பு வாக்குகள் பெரும்பான்மை சிங்களவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. ஆனால் நமது முஸ்லிம் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் நாம் கோட்டை விட்டுள்ளோம். பெரும்பான்மை கட்சிகளுக்கு வாக்களித்தாலும் பரவாயில்லை. ஆனால் அக்கட்சிகளில் போடடியிடும் முஸ்லிம் பிரதிநிதிகளை கவனத்திற் கொண்டிருப்போமேயானால் முஸ்லிம் பிரதிநிதிகளை தெரிவு செய்திருப்போம். அதிலும் தவறுவிட்டுள்ளோம்.

ஆளும் கட்சி அரசாங்கத்தில் வெறுப்பு கொண்டிருப்பவர்கள் ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு வாக்களித்திருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம்  பிரதிநிதிகள் வெற்றி பெற்றிருப்பார்கள். அல்லது முஸ்லிம்  காங்கிசுக்கு வாக்களித்திருக்கலாம். ஆனால் நமது சமூகம் இந்த சந்தர்பத்தை தவறவிட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் தென்மாகாண மற்றும் மேல்மாகாண தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் களம் இறக்கப்படுவார்கள்.

நடைபெற்ற மாகாண தேர்தல்களின் மலைய தமிழர்கள் அரசாங்கத்தடன் இணைந்தும் தனித்தும் போட்டியிட்டார்கள். அவர்களுக்கு பல ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. மலையக தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்துள்ளது. அந்த தமிழ் பிரதிநிதிகள் எந்த கட்சியிலிருந்தாலும் தாம் சார்ந்த சமூகத்தினருக்காகத்தான் குரல் கொடுக்கப்போகிறார்கள். அது அவர்களுக்கு பயன்களை பெற்றுத்தரும்.

இலங்கை முஸ்லிம்களாகிய நாம் மலையகத் தமிழர்களிடம் பாடம் கற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களிடம் காணப்பட்ட சமூக உணர்வுதான் அவர்கள் அதிக பிரதிநிதித்துவங்களை அறுவடை செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்வரும காலங்களில் முஸ்லிம் வாக்குகள் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்கச்செய்ய நாம் முயற்சிக்கவேண்டும். இதற்கு பொறுப்புமிக்கவர்கள் இதுதொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.