Header Ads



தவம் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு

(எஸ்.அன்சப் இலாஹி)

கிழக்கு மாகாண திணைக்களங்களில் கடமையாற்றும் பட்டதாரி உத்தியோகத்தர்களை திணைக்கள வாரியாக இடமாற்றம் செய்யப்படவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலின் படி, சேவைத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தின் அமைப்பாளருமான ஏ.எல். தவத்திடம் பட்டதாரிகள் சுட்டிக்காட்டியதை அடுத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை  நடாத்தவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல் தவம் தெரிவித்தார்.

கடந்த 2013.09.06 இல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் திணைக்கள ரீதியில் இடமாற்றம் செய்யப்படவுள்ள பட்டதாரிகளின் சேவைத்திறன் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதனையடுத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில் பாதிக்கப்பட்ட பட்டதாரிகளிடமிருந்து எனக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பாக தான் ஒரு அரசியல் பரப்பில் இருக்கின்றவன் என்ற பாத்திரத்தை மறந்து ஒரு பட்டதாரி என்ற அடிப்படையிலும், பட்டதாரி மாணவனாக இருக்கின்றபோது பட்டதாரி மாணவர்களாகிய எம்மால் பல விடயங்கள் சாதிக்கப்பட்டதை போன்று பட்டதாரியாகவும் எனது நண்பர்களுக்காக ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்த திர்மானித்துள்ளேன். இதனை தான் அமைப்பாளராக செயற்படுகின்ற கிழக்கு மாகாண பட்டதாரிகள் சங்கத்தினூடாக நிறைவேற்றுவது பொருத்தமானதாக அமையும் என கருதுகிறேன்.
 
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையில் பட்டதாரிகளுக்கு பொருத்தமான வேலைகள் வழங்படும் என குறிப்பிட்டதற்கிணங்க அரசின் கொள்கை திட்டத்தின் கீழ் வேலைகள் வழங்கப்பட்டபோதும் பட்டதாரிகள் தங்களின் திறன்களை திணைக்களரீதியாக மெச்சத்தகும் வகையில் வளர்த்திருக்கின்றனர். இந்த அலுவலர்களின் திறன் விருத்திக்கு அரசு பல இலட்சக்கணக்கான தொகையை செலவு செய்து பல பயிற்சிகளையும் வழங்கியிருக்கிறது. இதனூடாகத்தான் மாகாணத்தின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடியுமென மாகாணசபை கருதுகிறது.

ஆனால்  திணைக்களம் மாற்றப்படுகின்ற  இடமாற்றத்தினால் உத்தியோகத்தர்கள் மனச்சோர்வடைவதுடன், திணைக்களத்தின் செயற்பாடுகளும் பாதிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு மாகாண வாரியத்தின் கவனத்திற்கும், கௌரவ ஆளுனரின் கவனத்திற்கும் மாகாணசபை உறுப்பினர்களின் பொது அபிப்பிராயத்திற்கும் இப்பிரச்சினை கொண்டுவரப்பட்டு தீர்வுமுயற்சி மேற்கொள்ளப்பட இருக்கின்றது. இதற்காக தங்களது பெயர், முகவரி, தொழில் செய்யும் திணைக்களமும் முகவரியும், இடமாற்றத்திற்கான திணைக்களமும் முகவரியும், இடமாற்றம் தொடர்பான அபிப்பிராயத்தையும், தொலைபேசி இலக்கம், மின் அஞ்சல் முகவரி என்பனவற்றுடன் rangeviewsl@gmail.com மின் அஞ்சல் ஊடாக கிழக்குமாகாண பட்டதாரிகள் சங்கத்திற்கு அனுப்பிவைக்குமாறும், மேலதிக விபரங்களை தொலை பேசி 071 8481238, இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறும் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.