முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசும் அதிகாரம் தமிழர்களுக்கும் உண்டு - அசாத் சாலி
முஸ்லிம் மக்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசும் அதிகாரம் எமக்கு உள்ளதைப் போன்று தமிழர்களுக்கும் உண்டு. இதை கேவலப்படுத்தும் வகையில் சில நாச சக்திகள் பேசுவதை கவனத்திற் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என அசாத் சாலி தெரிவித்தார்.
இராஜகிரியவில் நேற்று எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்களினால் மேற்கண்டவாறான கருத்து முன் வைக்கப்பட்டது. இது தொடர்பாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அசாத் சாலி கருத்துத் தெரிவிக்கையில்,
நேர்மையான முறையில் தேர்தலை நடத்தியிருந்தால் அரசாங்கம் படுதோல்வி அடைந்திருக்கும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தைரியமிருந்தால் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடி விவாதத்திற்கு வர வேண்டும். வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்தின் வெற்றிக்கு தேர்தல்கள் ஆணையாளரும் முக்கிய காரணம்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் எவ்வளவு சூழ்ச்சிகளை செய்துள்ளதென்பது அனைவரும் அறிந்த விடயமே. அரச ஊழியர்களையும், அரச வாகனங்களையும் பாவித்தமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
சூழ்ச்சிகளின் மூலம் ஆட்சியினைக் கைப்பற்றிவிட்டு தகுதியான தலைவரென ஜனாதிபதி கூறுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டின் தகுதியான தலைவர் யார் என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும்.
மேலும் நாட்டின் உண்மைத் தன்மையினை இன்று எந்தவொரு ஊடகங்களிலும் முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. எதிர்க்கட்சிகளின் கொள்கைகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துவதில் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் மறுத்து வருகின்றமை கவலைக்கிடமானதே.
மேலும் அரசாங்கத்தின் உள்ளேயே விடுதலைப் புலிகளை வைத்துக்கொண்டு எம்மை தீவிரவாதிகள் என அரச தரப்பினர் குறிப்பிடுவதானது கேளிக்கையாகவே உள்ளது.
விடுதலைப்புலி உறுப்பினர்களை வைத்து வடக்கில் பிரசாரம் செய்து வாக்குகளைப் பெறலாம் என அரசாங்கம் நினைத்தமை தவிடு பொடியாகி விட்டது. தெற்கில் செய்யும் ஏமாற்று வேலைகளை அரசாங்கம் வடக்கிலும் செய்ய முடியாது என்பதை வடக்கு மக்கள் நிரூபித்து விட்டார்கள்.
அதேபோன்று முஸ்லிம் மக்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் உரிமைகள் பற்றி பேசும் அதிகாரம் எமக்கு உள்ளதைப் போன்று தமிழர்களுக்கும் உண்டு. இதை கேவலப்படுத்தும் வகையில் சில நாச சக்திகள் பேசுவதை கவனத்திற் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்தார்.
மனிதனை பற்றி சிந்திக்க, கரிசனை காட்ட மனிதனுக்கு இயல்பும், ஆற்றலும், சக்தியும் இருக்கும்.
ReplyDeleteமனித வேடம் தரித்த மிருகங்கள் இதுக்கு விதி விலக்குப்பா !!