சமூகத்தின் உணர்வுகளோடு ஒன்றித்த முஸ்லிம் காங்கிரஸை வெற்றிபெறச் செய்யுங்கள் - ஹக்கீம்
வடமாகாண சபையில் முஸ்லிம்களின் குரலும் ஒலிக்க வேண்டும். அது நேசக் குரலாகவும் இருக்க வேண்டும். பகை உணர்வுடன் முஸ்லிம்களைப் பார்ப்பதற்கு இடமளிக்கக் கூடாது. நேசக் குரலாக வட மாகாண சபையில் ஒலிக்கக் கூடியது முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மன்னார் மூர் வீதியில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் தெரிவித்தார். அங்கு உரையாற்றும் பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தவையாவன,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்த சில புல்லுருவிகளின் சதி வேலை இந்தத் தேர்தலில் மன்னார் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களில் அரங்கேறியுள்ளது. எமது கட்சிக்குள் ஊடுருவி இருந்த இந்த புல்லுருவிகள் கட்சிக்கு எதிராக சதி செய்வதற்கு திட்டம் தீட்டியிருந்தார்கள்.
அவர்கள் வெற்றிலைச் சின்னத்தில் அரசாங்கத்தின் அடிவறுடி அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் அவரது கையாட்கள் சிலர் போட்டியிடும் பொழுது, அதே வெற்றிலைச் சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மாற்றுக் குழு என்று கூறிக்கொண்டு இந்த மாவட்டங்களில் போட்டியிடுகின்றனர். போதாக்குறைக்கு அவர்கள் மறைந்த வன்னியின் மைந்தன் முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூரின் படத்தையும் தங்களது சுவரொட்டிகளில் இடம்பெறச் செய்துள்ளனர். இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸை காட்டிக்கொடுத்து அரசாங்க கட்சிக்கு சேவகம் புரிவோரை தோற்கடிக்க வேண்டும்.
இவர்கள் இப் பிரதேசங்களில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை போன்ற பிரச்சினைகளின் காரணங்களால் விரக்தியடைந்து உள்ளவர்களை மூலதனமாகக் கொண்டு அதை வைத்து தங்களது எஜமானர்களுக்கு விருப்பத்தை பூர்த்தி செய்யவே முன்வந்திருக்கிறார்கள். மாற்றுக்குழு எனக் கூறிக்கொள்ளும் அவர்கள் தங்களை அரசாங்கத்தின் நேரடித் தெரிவு என்று வெட்கமில்லாமல் கூறிக்கொண்டு சுவரொட்டிகளை ஒட்டுவதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட வட மாகாண மாவட்டங்களில் அவர்களது விருப்பத்திற்குரியவர்களாய் இருக்க வேண்டும். மன்னார் மாவட்டத்தில் அதிகார அரசியல்வாதி ஒருவரின் அடாவடித்தனம் எல்லோரும் அறிந்ததே. சில காலத்திற்கு முன்னர் கோந்தப்பிட்டி மீன்பிடித்துறை விவகாரம் சகோதர தமிழ் சமூகத்தோடு முரண்பாடுகளை ஏற்படுத்தி விபரீதம் உண்டாவதற்கு காரணமாக இருந்தது அதிகார அரசியல்வாதியின் பிழையான அணுகுமுறையினாலேயே ஆகும். அதனால் அநியாயமாக எமது மக்கள் கஷ்டங்களுக்கு உள்ளாகினார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து, உண்மைத் தன்மையை மறைத்து அரசாங்கத்தோடு என்னை மோத விடவேண்டும் என்பதே சோரம் போன இவர்களது எதிர்பார்ப்பாகும். சமூகத்தின் உணர்வுகளோடு ஒன்றித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை வெற்றி பெறச் செய்ய இந்தத் தேர்தலில் கட்சியின் மரச் சின்னத்திற்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் என்றார்.
இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலீப் பாவா பாரூக், எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம், நிந்தவூர் பிரதேச சபைத் தலைவர் தாஹிர், கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஏ.எல். அப்துல் மஜீத் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment