இலங்கை - இந்திய இருதரப்பு நடுத்தீர்ப்பு மன்றமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம்
(டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்)
இலங்கையில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள நடுத்தீர்ப்பு மையத்தின் ஊடாக வர்த்தக மற்றும் தொழில் பிணக்குகளுக்கு தீர்வு காண்பதற்கான பயனுள்ள பேச்சுவார்த்தையொன்று இலங்கையின் நீதியமைச்சருக்கும், இந்திய வர்த்தகம் மற்றும் கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் புது டில்லியில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.
இதன் போது இலங்கை - இந்திய இருதரப்பு நடுத்தீர்ப்பு மன்றமொன்றை ஏற்படுத்துவதன் அவசியம் பற்றியும் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்திய – வர்த்தக கைத்தொழில் மன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி ஏ. டிடார்ஸிங் தலைமையிலான அவ்வமைப்பின் உயர்மட்டக் குழுவினரும் அமைச்சர் ஹக்கீம் மற்றும் அவரது சட்ட ஆலோசகர் எம்.எச்.எம். சல்மான் ஆகியோரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டு நீண்ட நேரம் கருத்துக்களைப் பறிமாறிக்கொண்டனர். இதன் போது இரு நாடுகளும் தமது நடுத்தீர்ப்பு மையங்களை சந்தைப்படுத்துவது பற்றியும் ஆராயப்பட்டது.
வேறு நாடுகளில் இருந்து நிபுணத்துவ உதவிகளைப் பெறாது இரு நாடுகளும் நடுத்தீர்ப்பாளர்களையும் நிபுணர்களையும், துறைசார் வல்லுநர்களையும் பரிமாறிக்கொள்வது பற்றியும் ஆராயப்பட்டது.
புது டில்லியில் நடைபெற்ற ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை மன்றத்தின் 52 ஆவது செயலமர்வில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த 47 நாடுகள் அங்கம் வகிக்கும் அவ்வமைப்பின் முன்னாள் தலைவர் இலங்கையின் நீதியமைச்சர் ஹக்கீம், அங்கு உத்தியோகபூர்வமாக தங்கியிருந்த போதே இந்த முக்கிய சந்திப்பில் ஈடுபட்டார்.
Post a Comment