சச்சின், தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடுவார் - வாசிம் அக்ரம்
சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடுவார் என்று நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், கராச்சியில் 1989ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். அப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 15 ரன்கள் எடுத்தார். இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. அந்த டெஸ்டில் வாசிம் அக்ரமும் இடம் பிடித்திருந்தார்.
இதைக் கருத்தில் கொண்டே, பாகிஸ்தானுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடுவார் என்று அக்ரம் தெரிவித்துள்ளார். அந்தப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த டெஸ்டில் சச்சினை சிறப்பாக வழியனுப்ப வேண்டும். அதுதான் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும் என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு இறுதியில் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்து விட்டு, பாகிஸ்தான் அணியை அழைக்க இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அக்ரமின் கருத்து வெளியாகிறது. தற்போது 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் 200வது டெஸ்ட் சாதனை புரிய உள்ளார்.
Post a Comment