திருடர்கள் உங்களின் பெயரை சொல்லியும் அழைக்கலாம்..!
இந்தியா - ராமநாதபுரத்தில் நகை பறித்த மோசடி பெண்ணை, 3 மாதங்களுக்கு பின், அதே இடத்தில் பிடித்து ஒப்படைத்த, ஒன்பதாம் வகுப்பு துணிச்சலான மாணவியை, போலீசார் பாராட்டினர்.
ராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை கே.கொடிக்குளத்தை சேர்ந்தவர் தாமஸ், மகள் மஞ்சுளா, 15, ராமநாதபுரத்தில் உள்ள அரசு பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். 3 மாதங்களுக்கு முன்பு, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, மாலை 4 மணிக்கு, ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில், சக மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அவரது பெயரை மற்ற மாணவிகள் கூறி அழைத்தனர். அதை கவனித்த பெண் ஒருவர், "மஞ்சுளா' என அழைத்து, தன்னை உறவினர் என அறிமுகப்படுத்தி, பேசினார். இதை நம்பிய மாணவி, பஜாருக்கு வர அழைத்த அந்த பெண்ணுடன் சென்றார். சிறிது தூரம் சென்ற பின், மஞ்சுளாவின் 9 கிராம் சங்கிலியை ஏமாற்றி, அப்பெண் வாங்கினார். கடைக்கு சென்று வருவதாக கூறிய, அப்பெண் தலைமறைவானார். பல இடங்களில், பல நாட்கள் தேடியும் அந்த பெண் சிக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு, பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் மஞ்சுளா, மாணவிகளுடன் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற மோசடி பெண்ணை அடையாளம் கண்ட மஞ்சுளா, சக மாணவிகள் உதவியுடன், அப்பெண்ணை பிடித்து, கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், "அவர், பட்டுக்கோட்டை அருகே பேராவூரணியை சேர்ந்த குணசேகரன் மனைவி ராமலட்சுமி, 31,' என, தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, மாணவியிடம் வாங்கிய நகை பற்றியும், யாரிடமெல்லாம் மோசடி செய்துள்ளார் என்பது குறித்தும், விசாரித்து வருகின்றனர். துணிச்சலான மாணவியை, போலீசார் பாராட்டினர்.
Post a Comment