மர்ஹும் அஷ்ரபின் மரணத்தின் மர்மம் துலக்கப்படுமா..?
(ஏ.எல்.ஜுனைதீன்)
முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினரால் பெரும் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட மறைந்த மாமனிதர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கு அரசியல் சுய முகவரி பெற்றுத் தந்த சரித்திர நாயகன் அவர் மறைந்த நாளிலோ பிறந்த நாளிலோ மட்டுமன்றி வருடத்தின் எல்லா நாட்களிலும் நினைவு கூறப்பட வேண்டியவர். அவர் மரனித்து எதிர்வரும் 16 ஆம் திகதி 13 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்னும் அவருடைய அகால மரணம் பற்றிய மர்மம் துலக்கப்படவில்லையே என மக்கள் இன்றும் ஏக்கம் தெரிவிக்கின்றனர்.
அன்னார் விபத்தில் மரணித்தாரா? அல்லது திட்டமிடப்பட்ட சதி முயற்சியின் காரணமாக மரணமடையச் செய்யப்பட்டாரா? என்று அன்னாரை நேசித்த மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களால் இதுவரைத் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
தலைவர் அஷ்ரபின் மரணம் பற்றிய சில காத்திரமான தகவல்கள் தமக்கு கிடைத்தன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆரம்பத்தில் ஆவேசமாகக் கூறினார். ஆனால் பெருந்தலைவரின் மரணத்தைச் சூழ்ந்திருந்த மர்மம் மட்டும் இன்னும் கண்டறியப்படவில்லை. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லையே என்றும் மக்கள் குறை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர்.
மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ர்ஃபின் கோட்பாடொன்றான 'சரியான முடிவை பிழையான நேரத்தில் எடுத்தால் அதுவும் பிழையாகிவிடும்' என அடிக்கடி கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அன்னாரின் கோட்பாட்டிற்கெணங்க சரியான 'நேரத்தில் சரியான முடிவை எடுக்க' 13 வருடங்கள் கடந்தும் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
மர்ஹும் அஷ்ரபினால் வளர்க்கப்பட்டவர்கள், அன்னார் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அவர் மீது விசுவாசம் கொண்டவர்கள், எனக் கூறுபவர்கள் எல்லோரும் அவருடைய பெயரால் இதுவரையும் ஏன் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலுக்குக் கூட அன்னாரைப் பற்றி மேடைகளில் வாய்கிழியப் பேசி அரசியல் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் மூலம் அரசியல் அதிகாரங்களையும், பதவிகளையும் காலத்திற்கு காலம் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அன்னாரின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை வாய் திறந்து பேசுவதாக இல்லை, பேசுவதற்கு முன்வருவதாகவும் இல்லை எனவும் அன்னாரின் அனுதாபிகளால் ஆத்திரம் தெரிவிக்கப்படுகின்றது.
மாமனிதர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக தற்போதய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த 2001.08.10 ஆம் திகதி கல்முனை நகர மண்டபத்திற்கு முன்னால் நடைபெற்ற 'மக்கள் நீதி மன்றத்திற்கு முன் முறையீடு' என்னும் மக்கள் நிறைந்திருந்த பொதுக் கூட்டம் ஒன்றில் நிகழ்த்திய உரையைப் பலரும் இன்றும் நினைவுபடுத்திக் கூறுகின்றனர்.
அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கூட்டத்தில் அன்று மர்ஹும் அஷ்ரபின் அகால மரணம் தொடர்பாக என்ன பேசினார்? அவர் இவ்வாறுதான் பேசினார் என மக்கள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றனர்,
'தலைவர் அஷ்ரப்பின் மரணத்தின் பின்னணியிலே நடந்த பல விடயங்கள் இன்னும் பகிரங்கமாகச் சொல்லப்படாத விடயங்களாகவே இருக்கின்றன. அப்படியான பல விடயங்கள் எங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. பலர் நேரில் வந்தும் எங்களிடம் சொல்கிறார்கள்.எழுதியும் தருகிறார்கள். கறுப்புப் பெட்டி கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அது ஒரு ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த தலைவருக்கு என்ன நடந்தது என்பதை நாம் பார்க்க வேண்டும். மறைந்த தலைவரோடு கடைசி மணித்தியாலங்களில் இருந்த பலர் உள்ளனர். பலவிதமான திடுக்கிடும் தகவல்களை அவர்கள் சொல்லுகிறார்கள். விசாரணைக்கு முன்வரும் வரை பொறுமையாக இருந்து இந்த விடயங்களை வெளியிடலாம் என உத்தேசித்திருக்கின்றேன்' இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அன்று திரளாகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசுகையில் கூறியிருந்தார்.எனத் தெரிவிக்கிறார்கள்.
மாமனிதர் அஷ்ரபின் மரணம் சம்பவித்து 13 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவர் பொறுமையாகவே இருக்கின்றாரா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதுமாத்திரமல்ல. அஷ்ரபின் மரணம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கடந்த 2000.10.04 ஆம் திகதி சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்த கருத்தும் அஷ்ரபினால் அரசியல் நடத்துபவர்கள் மற்றும் அதிகாரத்திற்கு வந்திருப்பவர்கள் போன்றோரின் கவனத்திற்கு மக்கள் கொண்டு வந்து நினைவூட்டுகின்றனர்.
ரணில் விக்கிரமசிங்க அன்று என்ன பேசினார்? அவர் இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்கு வாக்குறுதி ஒன்றை வழங்கி உரை நிகழ்த்தினார் என மக்கள் இன்றும் தெளிவாகக் கூறுகின்றனர்,
'இந்நாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்த பின் மர்ஹும் அஷ்ரபின் அகால மரணம் குறித்து நாங்கள் ஒரு பூரண விசாரணை நடாத்துவோம். இதற்கென அமைக்கப்படும் விசாரணைக் குழுவில் மர்ஹும் அஷ்ரபின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரையும் நியமிப்போம். அமைச்சர் அஷ்ரபின் மரணத்தில் சந்தேகம் எழும்போது இம் மரணத்தின் காரணம் என்ன? இதன் பின்னணி என்ன? இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
நானும் அமைச்சர் அஷ்ரபும் அரசியலில் வேறுபட்டு இருந்தாலும் அன்னாரும் நானும் நல்ல நண்பர்கள். குறைந்த பட்சம் ஒரு நண்பர் என்ற முறையிலாவது விசாரணைக் குழுவை நியமித்து உண்மையைக் கண்டறிய வேண்டிய கடப்பாடு எனக்கு உண்டு.
அமைச்சர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக எமது விமானப் படையினர் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு எவரும் விலகிச் சென்று விட முடியாது. அமைச்சர் அஷ்ரப் மரணிப்பதற்கு முன் இரண்டு நாட்களில் பல பிரச்சினைகளை அவர் எதிர்நோக்கினார் என்பதும் அவர் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். எனவே, அன்னாருடைய மரணத்தின் பின்னணி அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ரணில் விக்கிரமசிங்க அன்று கூறியிருந்தார்.என மக்கள் அவரின் பேச்சை நினைவில் வைத்துக் கூறுகின்றனர்.
தற்போதய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராகப் பதவி வகிக்கும் இக்காலத்திலாவது மாமனிதர் மர்ஹும் அஷ்ரபின் மரனம் குறித்த விசாரணையை நடாத்துவதற்கு குழுவொன்றை நியமித்து குழுவின் முடிவை அன்னாரை நேசிக்கும் மக்களுக்கு எடுத்துக் கூற முடியும் என அன்னார் மீது அபிமானம் கொண்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதுமாத்திரமல்லாமல், அன்னாரின் மரணத்தைச் சூழ்ந்துள்ள மர்மம் துலக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் சிறுபான்மை இன துடிப்புள்ள அரசியல் தலைவர்கள் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான படிப்பினைகள் அதிலிருந்து பெற்றுக் கொள்ளவும் முடியுமல்லவா? என்றும் மக்களால் அபிப்பிராயம் தெரிவிக்கப்படுகின்றது.
மாமனிதர் அஷ்ரஃபின் மரணம் விபத்தால் ஏற்பட்டதா? அல்லது திட்டமிடப்பட்ட சதியால் ஏற்படுத்தப்பட்டதா? என்பதை அன்னாரை நேசித்த மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அன்னார் வளர்த்த கட்சியின் மூலம் மக்கள் முன் கொண்டுவரப்பட்டு (பல கட்சிகளில் இருந்தாலும்) தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் கடமையல்லவா?
Post a Comment