பெண்ணினத்தின் முன்மாதிரிகள்..!
(எம்.ஏ.ஜி.எம் முஹஸ்ஸின்)
பெண்கள் சமூகத்தின் கண்கள் என மதிக்கப்பட வேண்டியவர்கள். வருங்கால சந்ததியை உற்பத்தி செய்வோரும் அவர்களை செதுக்கி செப்பனிடுவோரும் அவர்களே! ஒரு பெண்ணின் நடத்தை, நம்பிக்கை, குணங்கள் என்பவற்றின் செல்வாக்கு தலைமுறை தாண்டியும் கடத்தப்படலாம். இவ்வகையில் பெண்களுக்கான வழிகாட்டால் ஒரு சமூகத்துக்கான வழிகாட்டலாக இருக்கும்.
இஸ்லாமிய எழுச்சியில் ஆண்களைப் போன்றே பெண்களும் பெரும் பங்களிப்பை நல்கியுள்ளனர். ஆரம்பகால இஸ்லாமிய வாழ்வை எடுத்து நோக்கும் போது இந்த உண்மையை நாம் அறியலாம். அவர்கள் இஸ்லாமிய கலைகளையும் கலாச்சாரத்தையும் கட்டிக்காப்பதில் தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த நிலையை இன்று காண முடிவதில்லை.
எமது இளம் பெண்களில் பலர் தொலைக்காட்சி சேனல்களின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். சினிமா நாயகிகளைத் தமது முன்மாதிரியாக்கிக் கொண்டு அதற்கேற்ப தமது உடை. நடை, பேச்சு முறைகளைக் கூட மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறு சீரழிந்து செல்லும் பெண் இனத்தின் முன்மாதிரிகள் யார்? அவர்கள்தான் இஸ்லாமிய வரலாற்று வானில் மின்னும் ஒளித்தாரகையான அன்னை பாத்திமா(ரலி) அவர்களாவார்கள். இவர்கள் அகில உலகின் அருட்கொடை, மனிதருள் மாணிக்கம் மாநபி(ஸல்) அவர்களினதும் முதன்முதலில் இஸ்லாத்தில் இணைந்து தமது வளங்களையெல்லாம் அதன் வளர்ச்சிக்காக வாரி வழங்கிய அன்னை கதீஜா(ரலி) அவர்களின் அருமைப் புதல்வியுமாவார்கள்.
அன்னையவர்கள் தான் நபி(ஸல்) அவர்களின் மகள் என்கிற எண்ணத்தில் இறுமாந்ததில்லை. ஒரு தலைவரின் மகளுக்குரிய மக்கள் செல்வாக்கையோ மரியாதையையோ எதிர்பார்த்திருந்ததாகவும் இல்லை. இவர்கள் இஸ்லாமிய உலகில் நிகழ்ந்த பலபோர் முனைகளிலும் பங்கு கொண்டார்கள். இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்த மக்கா வெற்றியிலும் அன்னையவர்கள் பங்கேற்றார்கள். அவர்கள் மதீனத்து மண்ணின் இணையற்ற தலைவரின் மகளாக இருந்தும் வறுமையில் வாடினார்கள். வீட்டுப்பணியை சிரமத்துடன் நிறைவேற்றினார்கள்.
ஒருமுறை யுத்தகைதிகள் பலர் பிடிபட்டிருந்தனர், அலி(ரலி) அவர்கள் அன்னையரின் இரு கரத்தையும் பார்த்தார்கள், தண்ணீர் இறைத்து கைகளில் தழும்புகள், நீர் சுமந்து கழுத்தில் கருமை, வீட்டுப் பணிகள் புரிந்து ஆடைகள் அழுக்கடைந்து, முகம் வாடி வதங்கிய நிலை, சுவனத்து மங்கையர்களின் தலைவி, பாத்திமா(ரலி) அவர்களின் கோலமா இது! அலி(ரலி) அவர்களின் நெஞ்சு கனத்துப் போனது. பாத்திமா(ரலி) அவர்களை பரிதாபத்துடன் பார்த்து, பாத்திமாவே! உன் தந்தையிடம் சென்று, உனக்கொரு பணியாளரை கேட்கலாமே! உனக்கு உதவியாக இருக்குமே என வேண்ட, பாத்திமா(ரலி) அவர்களும் பெருத்த எதிர்பார்ப்புடனும் மனமகிழ்வுடனும் அண்ணலார் இல்லம் சென்று தனக்கு ஒரு யுத்தக்கைதியை தந்துதவினால் பெரும் உதவியாக இருக்கும் என்று வேண்டினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பணியாளனைவிட சிறந்த ஒன்றை அறிவிக்கட்டுமா? எனக் கேட்டுவிட்டு உறங்கும் முன்னர் சுப்ஹானல்லாஹ் 33 தடவையும் அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும் அல்லாஹுஅக்பர் 34 தடவையும் கூறுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். இதனை அன்னையவர்களும் திருப்தியாக ஏற்றுக் கொண்டார்கள்.
இங்கே அன்னையரின் வறுமையின் உச்ச நிலையையும் பொறுமையையும் நாம் பெரும் பாடமாக பெற வேண்டும். இன்றைய பெண்களுக்கு வாஷின்ங் மிசினிருந்தும் கேஸ் குக்கர் இருந்தும் மின்சார வசதி இருந்தும் வீட்டு வேலைகளை செய்வதென்பது பெரும் சிரமமாக உள்ளது. இறைவணக்கம் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால் நபி(ஸல்) அவர்களின் அருமை புதல்வி பாத்திமா(ரலி) அவர்களின் நிலை என்ன என்பதை பார்த்தீர்களா? நபி(ஸல்) அவர்களே தன் மகளை பார்த்து கூறுகின்றார்கள், பாத்திமாவே! நான் உனக்காக நாளை மறுமையில் பொறுப்பு எடுக்கமாட்டேன், ஒரு நபியின் மகள் என்று நல்லமல்களை விட்டுவிடாமல் சுயமாக நல்லமல் செய்து அல்லாஹ்வின் அன்பைப்பெற்ற பாத்திமா(ரலி) அவர்களின் முன்மாதிரியை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும். ஒரு தலைவரின் மகள் என்ற நிலையில்கூட வறுமையிலும் பொறுமை காத்த இவர்களின் பொன்னான நல் வாழ்வை நம் பெண்ணினம் பின்பற்றிட வேண்டும். இன்னும் கூறுவதென்றால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆண்களில் ஈமானில் முழுமை அடைந்தவர்கள் அதிகமானோர், ஆனால் பெண்களில் ஈமானில் முழுமையடைந்தோர் நான்கு பேர் ‘ஆசியா(அலை), மர்யம்(அலை), கதீஜா(ரலி), பாத்திமா(ரலி)’ இப்படிப்பட்ட உத்தமிகளின் வாழ்விலிருந்து நாம் படிப்பினை பெறுவதை விட்டுவிட்டு இவர்களின் பெயர்களை நம் பிள்ளைகளுக்கு வைத்து விட்டால் அவர்கள் பெற்ற பாக்கியங்களை நாமும் பெறலாம் என்ற மூடத்தனத்தை கைவிட்டுவிட்டு அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றியது போன்று இன்றைய பாத்திமாக்களும் முன்வர வேண்டும்.
அறிவுரைகள்:
• அல்குர்ஆனும் அண்ணலாரின் அருள்மொழிகளுமே நமது வாழ்க்கை வழிகாட்டல் என்பதை எச்சந்தர்பத்திலும் மறந்துவிடாதீர்கள்.
• இறை நம்பிக்கையும் இறையச்சமும் உங்களைக் காக்கும் இரு அரண்கள் என்பதை நினைவில் வையுங்கள்.
• பர்தா முறையை அனுசரியுங்கள், அது அடக்கு முறையோ, அடிமைத்தனமோ அல்ல, அதுவே உண்மையான கெளரவமும் உயர்வுமாகும் என்பதை உணருங்கள்.
• நபித்தோழிகளில் உங்களுக்கு அழகிய படிப்பினைகள் இருக்கின்றது, நடிகைகளோ, நட்சத்திர மாடல் அழகிகளோ, உலக அழகிகளோ? அல்ல என்பதை உறுதியாக நம்புங்கள்.
அல்லாஹ் நம் அனைவரையும் இஸ்லாத்தில் வாழ்ந்து மரணித்த பெண்களாக ஆக்கியருள்வானாக.!
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
ReplyDeleteஉங்களில் இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கும் கல்வி வழங்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துகின்றான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)