உஸாஹி சூறாவளி குறித்து எச்சரிக்கை
2013 ஆம் ஆண்டின் சக்திவாய்ந்த சூறாவளியாக இருக்கப்போகும் உஸாஹி பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானை நோக்கி நகர்வதாக வானியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை தாய்வானின் கிழக்கு, தென்கிழக்குப் பகுதியிலிருந்து 560 கிலோ மீற்றரிலும் பிலிப்பைன்ஸின் வட பகுதியிலிருந்து 360 கிலோ மீற்றர் தொலைவிலும் உஸாஹி சூறாவளி தாக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இதனால் தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் கடற் பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேநேரம் பிலிப்பைன்ஸின் வட மாகாணத்தின் சில பகுதிகளில் கடும் காற்று, மண் சரிவு மற்றும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாகாணத்தின் சில பகுதிகளில் அவசர மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய அனர்த்த குறைப்பு மற்றும் முகாமைத்துவ சபை தெரிவித்துள்ளது. இதேவேளை தாய்வானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதாகக் கூறப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானை நோக்கி நகரும் புயல் மணித்தியாலத்திற்கு 175 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையிலே இவ்வார இறுதியில் சீனாவினை கடும் சூறாவளி தாக்குமென எதிர்பார்க்கப்பட்டள்ளது. சீனாவின் காலநிலை எச்சரிக்கை முறைமையினால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் காலநிலை மையம் தெரிவித்துள்ளது.
Post a Comment