Header Ads



இனியவன் இஸாறுதீனின் 'முள்மலர்கள்' கவிதைத் தொகுதி மக்களிடம் கையளிப்பு

(எம்.ஏ. நபுஹார்)
                                                         
கவிஞர் இனியவன் இஸாறுதீனின் இரண்டாவது கவிதைத் தொகுதி 'முள்மலர்கள்' வெளியீட்டு விழா  அண்மையில் அட்டாளைச்சேனை பெரியபாலம், 'சோளாபவர்' ஒளிநிழல் முன்றலில் வெகு விரிசையாக நடைபெற்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழக  உபவேந்தர் கலாநிதி அல்ஹாஜ்  எஸ். எம். முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற 'முள்மலர்கள்'  கவிதைநூல் வெளியீட்டு  நிகழ்வில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் மாண்புமிகு அல்ஹாஜ்  ஏ. எல். எம். அதாஉல்லா பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை அமைச்சர்  எம். எஸ். உதுமாலெவ்வை (மா.ச.உ) கௌரவ அதிதியாகவும் மற்றும் பிரதேச செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல். எம். ஹனிபா அம்பாறை மாவட்ட திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஐ. எல். தௌபீக், தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ. எல். ஹனீஸ் ஆகியோர்களும் அதிதிகளாகக் கலந்துகொண்டனர். கவிதைநூலின் முதற் பிரதியினை நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன் அமைச்சர் அதாஉல்லாவுக்கு வழங்கி வைத்து நூலை வெளியிட்டு வைத்தார். சிறப்புப் பிரதிகள் கிழக்கு மாகாண சபை அமைச்சர்  எம். எஸ். உதுமாலெவ்வை அவர்களுக்கும் ஏனைய சிறப்பு அதிதிகளுக்கும்  அல்ஹாஜ் எம். ஏ. எம். எஹியாவுக்கும்; மற்றும் பலருக்கும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில்; நூலறிமுகம் செய்த கலாபூசணம் ஆசுகவி அன்புடீன்; தனது நண்பர் நூலாசிரியரைப் பற்றி நெகிழ்ந்து இனிக்கப் பேசினார். தென்கிழக்கு பல்கலைக்கழக, கலை பண்பாட்டு பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செல்வி அனூசூயா சேனாதிராஜா, அக்கரைப்பற்று வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. அஹமது கியாஸ் ஆகியோர் இருவரும் 'முள்மலர்கள'; நூலாய்வுரை செய்தபோது கவிதைகளின் இரசனைக் குறிப்புக்களோடு நூலாசிரியரின ஆரோக்கியமான கருத்தையும், நயத்தையும், எதார்த்தத்தையும் கவிதைகளின் எளிய தமிழ் நடையையும் பாராட்டினர்.

உபவேந்தர் கலாநிதி எஸ். எம். முஹம்மது இஸ்மாயில் தனது தலைமை உரையில் இனியவன் இஸாறுதீன்; 'தற்கால அவலத்தை அர்த்த புஷ்டியான முறையில் சமுதாய முற்போக்குக் கவிதைகளை நல்ல உத்தியோடு எழுதியிருக்கிறார். அதிலும் மிகச் சிறப்பாக எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடியவாறு எளிய தமிழில் கவிதைநூல் தந்தமைக்கு நமது சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இன்னும் அவர் பேசுகையில் இவரைப் போல ஏனைய  படைப்பாளர்களும் நமது சமுதாய முன்னேற்றத்துக்கு உதவக்கூடிய நல்ல கருத்துள்ள படைப்புக்களைத் தர வேண்டும்' என்றார். இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் அதாஉல்லா 'கிழக்கு மாகாணத்திலுள்ள கவிஞர்கள் திறமையானவர்கள். எம் மத்தியில் உள்ள எத்தனையோ கவிஞர்கள் உலகரங்கில் கூட பேசப்படுகின்றார்கள். அவர்கள் உரிய முறையில்  ஊக்கவிக்கப் படாமையால் தமது திறமையினை மேலும் வெளிக்காட்டாமல் சோர்ந்து போய் விடுகின்றனர். அவர்களை நாம் இனம் கண்டு ஊக்குவிக்க வேண்டும்' என்றார்.

'இஸாறுதீனின் கவிதை நூலை இங்கேயே வாசித்து ரசித்தேன். இவரது கவிதைகள் மிக அருமையாகவும் ஆழமாகவும் இருப்பதைக் கண்டேன். அதற்காக நான் இவரை வாழ்த்துகிறேன்.  கவிதையை இசையோட்டத்தோடு பாடுகின்றபோது   மேலும் மெருகேறிவிடுகின்றது. கவிதையை சாதாரணமாக வாசிப்பதற்கும்  இசையோடு வாசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கின்றது. இசையோடு வாசிக்கப்படும் கவிதைக்கு  அழுத்தம் அதிகமாய் இருக்கும். இசையோடு சொல்லப்பட்டதனால்தான்; கண்ணதாசன் கவிதைகளும்; வாலியின் கவிதைகளும் இன்றும் பிரபலமடைந்திருக்கின்றன. எமது பிராந்தியத்தில் இசையோடு பாடகின்ற கவிஞர்களை நாம் இனம் காண வேண்டும். செவிகளுடாகச் சொல்லும் கவிதைகளுக்கு அதிக தாக்கம் இருக்கும். மனங்களில் மாற்றங்கள் கொண்டுவர இசை மூலமாக சொல்லுகின்ற கவிதைகளுக்கு சக்தி அதிகமிருக்கும்' என்றார். மற்றும் பிரதேச செயலாளர் அல்ஹாஜ். எஸ்.எல். எம். ஹனிபா பேசுகையில் 'எங்களுடைய  கடந்த காலத்தைப் பற்றி எண்ணும்போது கஷ்டங்களைப் பற்றியும் நஷ்டங்களைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்த எங்களுக்கு எதிர் காலத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற  நாங்கள் இந்த கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஒரு சுகானுபவத்தை அனுபவிக்கும் நிலமையை ஏற்படுத்தித் தந்திரக்கிறார் இனியவன் இஸாறுதீன் அவர்கள். இவர் அவருடைய பெயருக்கு முன்னால்  வைத்திருக்கின்ற இனியவன் என்ற சொல்லுக்கு ஒப்பாக அவர் பார்க்கின்றபொழுது, அவர் பழகுகின்ற பொழுது, அவரோடு தொடர்புகள் வைத்திருக்கின்றபோதெல்லாம்  நமக்கு இனித்துக்கொண்டிருக்கின்ற அவருடைய பண்பும், பழக்கமும் அவரிடம் இயல்பாய் இருப்பதை அவருடைய வருகையில் அனுபவித்துக்கொண்டிருப்பதன் முலம் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்று இஸாறுதீனை பாராட்டினார்.

தனது 'முள்மலர்கள'; கவிதைநூல் வெளியீட்டு விழாவில் அதிதிகளுக்கு 'ஞாபகமான ஞாபகம்' என்ற அழகிய நினைவுச் சான்றிதழ்களை வழங்கி வைத்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசிய நூலாசிரியர் இனியவன் இஸாறுதீன் தனது ஏற்புரையில் 'நான் அட்டாளைச்Nசைனையில் பிறந்ததற்காகப் பெருமைப் படுகிறேன். ஏனென்றால் கவிதை எழுதக் காரணமானது நான் பிறந்த மண், இதுதான் என் கவிதைக்கு விதை. இலங்கையில் நாம்தான் நல்ல தமிழ் பேசுகின்றோம்.

என்னைக் குளிப்பாட்டியது இந்த கோணாவற்றை ஆறு. நான் பிறந்த ஊரில் நாம் நடந்தால் 'இங்கே வீசும் காற்றை சுவாசிக்க இரண்டு நுரையீரல் போதவில்லையே'... என்ற ஏக்கம் வரும்.  நமது மூதாதையர்கள் பாமரர்கள். அப்போது அவர்கள் கேள்வி ஞானத்தில்தான் நல்ல நாட்டார் பாடல்களைப் பாடினார்கள். 

'கை மீன் வாங்கி கழுத்தைக் கறியாக்கி 
வாலைப் பொரித்திருக்கேன் 
வாங்க மச்சான் ரெண்டு சோறு தின்போம்....' என்றும்

'ஓடிவரும் தண்ணீரில் 
உலாவி வரும் மீனதுபோல்
நாடி வந்தேன் கண்ணே – உன்
நட்புதலை வேண்டுமென்று....' என்றும்

'குஞ்சி முகமும்
கூர் விழுந்த மூக்கழகும்
நெத்தி இளம் பிறையும் - என்ர
நித்திரையில் தோன்றுதுகா...' என்றும்

'மாமி மகளே மகிழம்பூ வாயழகி
பெருக்கப் பெருக்க – என்னோட 
பேச மனஸ்தாபம் என்ன?...' என்றும்

'அப்பம் தருவேன்  
அதில் தொட தேன் தருவேன்
கை கழுவ பால் தருவேன்- நம்
காரியம் சித்தியாகுமென்றால்...' என்றும்

'காவல் பறனிலே
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ணான மச்சி வந்து
காலூன்றக் கனவு கண்டேன்...' 

என்றெல்லாம் கருத்தும் கற்பனையும் கவிதை நயமும் கொண்ட நாட்டார் பாடல்களை நமது முன்னோர் அன்று பாடினார்களே... அவர்களென்ன கவிதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டா  பாடினார்கள்? அந்த பாமர மக்களுக்கு கவி  இயல்பாக வந்தது. அவர்களின் சந்ததி நான்.... அந்த கவிச்சமுதாயத்தின் பிரதிநிதி நான். அதனால்தான் எனக்கும் வருகிறது கவிதை.  அவர்களைப்போல நீங்கள் என்ன பாடமாட்டீர்களா...?  பாடுவீர்கள்...நீங்களும் கவிதை எழுதுவீர்கள். இந்த கவிதை  மண்ணில் பிறந்தவர்கள் நாம்.  இங்கு பிறந்த எல்லோருக்கும்;  கவிதை வரும். கவிதை என்பது இயல்பாக வர வேண்டும். கவிதை எழுதவேண்டுமானால் வாழ்க்கையை, இயற்கையை  ரசிக்க வேண்டும். மனிதனை நேசிக்க வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும், நமது இதயத்தைத் தூய்மையாய் வைத்திருக்க வேண்டும். கவிதை எழுதுபவனை கவிஞன் என்று பாராட்டுகிறார்கள். படைப்பாளன் என்பவன் இறைவன். அவன்தான்; கவிதை என்ற படைப்பை என் மூலமும் வெளிக்கொணர்கிறான். ஆனால் இதில் என்னை வியப்பதற்கு எதுவுமில்லை'.... என்று  சொல்லித் தன் உரையை முடித்தார்.                                                              

No comments

Powered by Blogger.