Header Ads



'எங்கள் ஊர் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்' - எஸ்.எச்.எம்.ஜெமீல்

(ஏ.எல்.ஜுனைதீன்)

  'எங்கள் ஊர் எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்...' எனும் ஆக்கம் ஒன்றை முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் அல்-ஹாஜ் எஸ்.எச்.எம்.ஜெமீல் 'ஒரு கிராமத்துச் சிறுவனின் பயணம்' என்ற பெயரில் வெளிவரவுள்ள நூலில் எழுதியுள்ளார். அதன் இரசனை கருதி இக்கால இளைஞர்களுக்காகவும் அக்காலத்தை மீண்டும் மீட்டுப் பார்ப்பதற்காக வயோதிபர்களுக்காகவும் அந்த ஆக்கத்தை இங்கு தருகின்றோம்,

  கல்முனை நகருக்கு அணித்தாயுள்ள சாய்ந்தமருது (சாய்ந்தமருதூர் என்பதிலுள்ள ஊர் எனும் பகுதி காலக் கிரமத்தில் விடுபட்டு சாய்ந்தமருது என மருகிவிட்டது) எனும் ஊர் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இயற்கைச் சூழலினால் அமைந்த எழில் கொஞ்சும் கிராமமாகத் திகழ்ந்தது. ஒவ்வொரு வீட்டையும் சுற்றிய பரந்த வளவிலே தென்னை, பலா, மா, வேம்பு, கமுகு, இலந்தை, விளிமா, முருங்கை, பப்பாசி, வாழை, கொய்யா, அன்னாசி போன்ற எத்தனையோ வகை மரங்களும், செடிகளும் அடர்த்தியாக வளர்ந்து பூத்துக் காய்த்துச் சொரியும். வெற்றிலை, மிளகு, பிரண்டை, அவரை, தூதுவளை, வள்ளிக் கொடிகள் அம்மரங்களிலும் சூழவுள்ள வேலிகளிலும் படர்ந்திருக்கும் மல்லிகை, செவ்வரத்தை என்பன எப்போதும் பூத்திருக்கும் உச்சி வெயில் கூட நிலத்தில் விழாத அளவு அம்மரங்கள் நிழல் பரப்பி நிற்கும்.

  ஒவ்வொரு வீட்டு முற்றத்தில் இருக்கும் ஊஞ்சலில் பகல் முழுவதும் யாராவது ஊஞ்சலாடிக் கொண்டிருப்பர். குறிப்பாக முன்னிரவு வேளைகளில் தாய்மார்கள் தமது சிறு குழந்தைகளை ஊஞ்சலாடித் தாலாட்டுப் பாடி உறங்க வைப்பார்கள். அத்தாலாட்டுப் பாடல்கள் அனைத்தும் இஸ்லாமியக் கோட்பாடுகள் கிரியைகள் நற்பழக்க வழக்கங்கள் என்பன பற்றியதாகவே அமைந்திருக்கும். அநேகமாக எல்லாப் பெண்களும் பெண்புத்திமாலை, அதபுமாலை, தலைப்பாத்திஹா என்பனவற்றை மன்னஞ் செய்திருப்பர்.

  சகல வீடுகளிலும் கட்டாயம் கிணறு இருக்கும். ஒரு வீட்டைக் கட்டத் தொடங்குவதற்கு முன்னர் அவ்வளவில் கிணற்றைக் கட்டுவர். கிணற்றினைக் கட்டி முடித்த பின்னரே வீட்டினைக் கட்டத் தொடங்குவர். கட்டுமான வேலைகளுக்கான தண்ணீரை இலகுவாகப் பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

  கிணறு கட்ட துரவு (பெரிய குழி) வெட்டுவது என்பது மிகவும் ஒரு கலகலப்பான நிகழ்ச்சியாகும். கிணறு கட்டும் வளவுக்காரரின் அழைப்பை ஏற்று சுமார் பத்துப் பதினைந்து அயலவர்களும், உறவுக்காரர்களும் தத்தமது மண்வெட்டியோடு  இஷாத் தொழுகைக்குப் பிறகு அங்கு வருவர். அவர்களுக்கு இராப் போசனம் வழங்கப்படும். துரவு வெட்டும் இடத்தைச் சுற்றி 'கடல் லாம்பு' எனப்படும் பிரகாசமான வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் தொங்க விடப்படும். பாத்திஹா ஓதலுடன் வேலை ஆரம்பமாகும். வேலை செய்பவர்களுக்கு களைப்பு தெரியாமலிருக்க பாவாமார்கள் (பக்கீர்மார்) றபான் அடித்து அப்பாஸி நாடகம், அலிபாதுஷா நாடகம், நூறு மஸ்அலா போன்ற பைத்துக்களைப் பாடி உற்சாகமூட்டுவார்கள். இவற்றை, பெண்களும் சிறுவர்களும் பெரியார்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பார்கள்.

  கோடை காலத்திலேதான் துரவு வெட்டுவதும், கிணறு கட்டுவதும் நடைபெறுவதுண்டு. அப்போதுதான் மிகவும் ஆழமாகக் கிணற்றை அமைக்கலாம். ஆள் மாறி ஆள் அனைவரும் வேலையில் உற்சாகமாகப் பங்கெடுப்பர். தண்ணீரைக் காணும் வரையில் தோண்டுவர். அது சில வேளைகளில் 20 – 25 அடி ஆழம் வரை செல்லும். அநேகமாக விடியச் சாமம்  வரை வேலை நடைபெறும். ஆனால், தண்ணீரைக் காணாவிட்டால் விடிந்த பின்னரும் வேலை தொடர்ந்து நடைபெற்று தண்ணீரைக் கண்ட பின்னே முடிவுறும். இத்தகைய பணிகள் அனைத்தும் மனம் விரும்பிச் செய்யும் சிரமதானமேயாகும். எவ்வித கொடுப்பனவுகளோ யாருக்கும் கொடுப்பதில்லை, வாங்குவதுமில்லை. அதைப் பற்றி  சிந்திப்பதோ, கதைப்பதோ கிடையாது.

  கிணறு எப்போதும் வீட்டின் முன் பக்க முற்றத்தில் அமையும். அதாவது உள் வீட்டுக் கதவைத் திறந்தவுடன் முதலில் கிணறுதான் கண்ணில் படும்படியாகக் கட்டப்பட்டு இருக்கும். கிணற்றடியில் கமுகு மரங்கள் மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அவற்றில் வெற்றிலைக் கொடிகள் சிறப்பாகப்  படர்ந்திருக்கும். அதனால் உச்சி வெயில் நேரத்தில் கூட கிணற்றுத் தண்ணீர் இன்றைய குளிர்சாதனப் பெட்டியின் நீரைப் போன்று மிகவும் குளிர்மையாக இருக்கும்.

  சாய்ந்தமருதூரின் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடல், அதனை அண்டிப் பரந்த கடற்கரை. ஊரின் குடியிருப்புப் பகுதிக்கும் கடலுக்கும் இடையே சுமார் 400 மீற்றர் அகலமான பரந்த மணற்பரப்பு, வடபுறம் திரும்பிப் பார்த்தால் கல்லாறு வரை கண்ணுக்குத் தெரியும். அதே போன்று தென்புறம் திரும்பிப் பார்த்தால் நிந்தவூர் தெரியும்.

  'பிராமண மீசை' எனப்படும் தாவரம் திட்டுத் திட்டாக வளர்ந்திருக்கும். உதைப் பந்து அளவில் உருண்டையான அத்தாவரம் முள்ளு முள்ளாய் இருக்கும். முற்றிக் காய்ந்ததும் காற்றின் வேகத்திற்கேற்ப கடற்கரையில் உருண்டோடும். அதன் பின்னால் சிறுவர்கள் ஓடுவார்கள். சில வேளைகளில் காரைதீவு, நிந்தவூர் எல்லையான வெட்டு வாய்க்கால் வரை ஓடுவோம். மறு புறத்தில் தோணா மூடப்பட்டு மணல் திட்டியாய் இருக்கும். கோடை காலத்தில் கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளி வரை ஓடித் திரும்பி வருவோம்.

  'தோணா' என்பது ஊருக்கு நடுவால் இன்றுமுள்ள நீரோடையாகும். இதனைக் 'கரைச்சை' என்றும் அழைப்பார்கள். இன்றிருப்பது போல் இது ஒரு ஒடுக்கமான நீரோடையல்ல. சுமார் 50 மீற்றர் அகலமானதாகயிருந்தது. இரு புறத்திலும் அடர்த்தியானதும், செழிப்பானதுமான தென்னை மரங்கள், மாரி காலத்தில் கரைகள் வழிந்து நீரோடும். அப்போது சிறு தோணிகளில் ஊர் மக்கள் உல்லாசப் பயணம் போவர். அச்சொட்டாக கேரளக் கால்வாய்களை இப் பயணம் நினைவூட்டும். தோணாவின் கிழக்குப் பிரதேசமே அக்கரை என அழைக்கப்படும். மாரி காலத்தில் ஊரின் மழை நீர் அவ்வளவும் அத்தோணா மூலம் கடலுக்குள் ஓடி விடும். அதனால் முழு வெள்ளமும் ஓரிரு நாட்களில் வடிந்து விடும்.

  கோடை காலத்தில் தோணாவின் சில பகுதிகள் தண்ணீர் வற்றி வரண்டு போயிருக்கும் வேளையில் அதன் மேற்பகுதியில் வெள்ளை நிறத்தில் உப்புப் படர்ந்திருக்கும். அதனைப் பெண்கள் மெல்லியதாக வழித்தெடுத்து பதப்படுத்தி உபயோகிப்பார்கள். இது கட்டியாயிராது தூளாயிருக்கும். சாப்பிடும் பொழுது சோற்றினுள் தூவி உண்பார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மிகச் சிறிய அளவிலேயே கிடைப்பதினால் இக் 'காய்ச்சுப்பு'வுக்கு மவுசு அதிகமாயிருந்தது. தோணாவின் இரு மருங்கிலும் அடர்த்தியாக கிண்ணை மற்றும் தாழை மரங்கள் வளர்ந்திருக்கும். கிண்ணம்பழம் சிறுவர் சிறுமியருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும்.

  கடற்கரை மிகப் பரந்து வளர்ந்து கிடக்கும் இன்னொரு தாவரம் அடம்பன் கொடியாகும். சில வேளைகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலென்று கடற்கரை மணலை அது மூடியிருக்கும்.

  இவ் வெள்ளை மணற்பரப்பில் பிள்ளைகளுக்குப் பிடித்த விளையாட்டுக்கள் இரண்டு. ஒன்று நண்டு பிடித்தல், அடுத்தது சிப்பி பொறுக்குதல். செம்மஞ்சள் நிறமான சில நண்டுகள் அலவாக்கரையில் நூற்றுக் கணக்கில் ஓடித் திரியும். அவற்றினைத் துரத்துவோம். உடனேயே அது தமது வலையினுள் புகுந்துவிடும். பொறுமையாகக் காத்திருந்து வெளி வரும்பொழுது பொத்திப் பிடிப்போம். பின்னர் அதனை ஓடவிட்டு மீண்டும் துரத்துவோம்.

  அலவாக்கரை முழுவதும் விதவிதமான நிறங்களிலும், அளவுகளிலும் நிரம்பிக் கிடக்கும் சிப்பிகளில் எமக்குப் பிடித்தவைகளைப் பொறுக்கி வீடுகளுக்குக் கொண்டு வந்து விளையாடுவோம். இப்போது இலங்கையின் எப்பாகத்துக் கடற்கரையிலும் அவ்வளவு பெருந்தொகையிலும், அழகிலும் சிப்பிகளைக் காண முடிவதில்லையே! என்ன நடந்தது?

  நிலாக் காலத்தில் பெண்களுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு கடற்கரைக்குச் செல்வதாகும். இரவுச் சாப்பாட்டிற்குப் பின்னர் குடும்பம் குடும்பமாக கடற்கரைக்குச் செல்வர். ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் கூட்டமாக வளைத்திருந்து நடுச் சாமம் தாண்டும் வரை கதைத்துக் கொண்டிருப்பார்கள். சிறுவர், சிறுமியர்கள் ஓடித்திரிந்து விளையாடுவர். தம்மோடு கொன்டு செல்லும் கடலை, கச்சாங்கொட்டை, சோளப்பொரி, அவல் என்பவற்றை மென்று கொண்டே கதைகள் நீண்டு செல்லும்.

ஊரின் மேற்குப் புறமாக தார் வீதி அமைந்திருந்தது. மட்டக்களப்பிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் அப் பிரதான வீதியின் இரு மருங்கிலும் ஆல், அரசு, வாகை, மருதை, வம்மி ஆகிய மரங்கள் நிழல் பரப்பிக் கொண்டிருந்தன. உச்சி வெயிலிலும் வெறுங்காலுடன் நடந்து செல்லக் கூடிய அளவிற்கு நிழலாய் இருக்கும். தந்திக் கம்பங்களை நாட்டிக் கம்பியிழுப்பதற்கு ஒரு பக்கத்து மரங்களைத் தறித்தனர். பின்னர் மின்சாரம் வழங்குவதற்காக மறு பக்கத்து மரங்களும் தறிக்கப்பட்டு விட்டன.

  தார் வீதியில் மேற்குப் பகுதியில் உள்ள பிரதேசம், புளியவட்டவான் என அழைக்கப்படும். தற்போது சாய்ந்தமருது அரசினர் வைத்தியசாலை அமைந்துள்ள இடத்திற்கு எதிரிலுள்ள பிரதேசம் இதுவாகும். அவ்விடத்தில் குர்ஆன் மத்ரஸா கட்டிடம் ஒன்று மட்டுமே கல்லால் கட்டி ஓடு வேயப்பட்ட கட்டிடமாகும். அதற்கப்பால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமையான கரைவாகு வட்டை வயல் வெளியும், இடையிடையே சலசலத்தோடும் சிற்றோடைகளும், வாய்க்கால்களும், ஓர் ஆறும்  அமைந்திருந்தன. வேளாண்மை செய்யப்பட்டிருக்கும் காலத்தில் வெள்ளைக் கொக்குகளும், சாம்பல் நிற உண்ணியன் கொக்குகளும் ஆயிரக் கணக்கில் வரம்புகளில் குந்திக் கொண்டிருக்கும்.

  இரசாயனப் பசளை, கிருமிநாசினி, புல்லெண்ணெய் எவற்றைப்பற்றியும் அறியாத காலம் அதுவாகும். அதனால் வேளாண்மைக் காலத்தில் வரம்பு முழுவதும் பொன்னாங்கண்ணி எனும் கீரைத் தாவரம் மிகச் செழிப்பாக படர்ந்திருக்கும். பெண்கள் அவற்றை ஆய்ந்து ஓலைப் பெட்டிகளில் கொண்டு வந்து கிராமத்தில் விற்பார்கள். சுண்டல், பாலாணம் ஆகியவற்றுக்கு மிகவும் ருசியாயிருக்கும். இரண்டு சதத்துக்கு வாங்கினால் இரண்டு, மூன்று முறை கறியாக்கப் போதுமானதாக இருக்கும். காலையில் வயலுக்குப் போகும் ஆண்களுக்கு உமல் ( ஓலைப்பை) நிரம்ப பொன்னாங்கண்ணி இலைக்கறியை ஆய்ந்து கொண்டு வருவார்கள்.

  நீர்க்கரைகளில் வளர்ந்திருக்கும் 'வள்ளல்' எனும் தாவரம் உணவுக்குப் பயன்படுத்தப்படும். வேளாண்மை அறுவடையின் பின்னர் வயலில் முளைக்கும் 'திராய்' எனும் தாவரமும் மீனுடன் சேர்த்து சுண்டல் செய்வதற்கும், பாலாணம் காய்ச்சுவதற்கும் மிகவும் உருசியானதாகும்.

  கரைவாகுவட்டையின் நடுவே இளையதம்பிப் போடியாரின் அழகிய தென்னந் தோட்டம் இருந்தது. வேளாண்மையின் வயலின் நடுவேயுள்ள தென்னந்தோட்டம் 'காலை' எனப்படும் 1978 ஆம் ஆண்டைய சூறாவளியில் இக்காலை அழிந்துவிட்டது. வயல்கள் முடிவுறும் எல்லையில் ஊவா மலைத் தொடர் மங்கலாகத் தெரியும்.

  நீர் நிலைகளில் களிக்கெழுத்தி, மஞ்சள்கெழுத்தி, கோம்பைக்கெழுத்தி, பொட்டியான், சுங்கான், உளுவை, மாங்காய்ச்சள்ளல், குறட்டை, செத்தல், கொக்கிசான், பனையான், ஆரல் எனும் சிறிய மீன் வகைகள் பெருந்தொகையாகக் காணப்படும். சில வேளைகளில் விரால், கைமீன் (கயல்) ஆகிய பெரிய மீன்களும்  வலையில் அகப்படும். வீட்டில் மனைவி இன்று ஆக்குவதற்கு ஒன்றுமில்லையே என்றால் கணவன் வலையைத் தோளில் போட்டுக் கொண்டு கூடையையும் தூக்கிக் கொண்டு போனால் ஓரிரு மணித்தியாலங்களின் பின்னர் கறிக்குப் போதுமான மீனோடும் பொன்னாங்கண்ணி இலைக்கறியோடும் வருவார். செல்வன், செப்பலி ஆகிய மீன் வகைகள் பிற்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டவையாகும்.

  தார் வீதிக்கு மேற்குப் புறத்தில் மக்கள் குடியாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது. நடு ஊருக்குள் குடியிருக்கவே மக்கள் விரும்பினர். அதனால் பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் அமைந்திருந்த வளவுக்கு மவுசு கிடையாது 1940 ஆம் ஆண்டுக்கு முன்னர் 16 பாகம் நீளம் 16 பாகம் அகலம் கொண்ட ஒரு வளவின் ( அதாவது 40 பேர்ச்சஸ் ) விலை 50 ரூபாய்தான். அந்த விலைக்கும் வாங்குவாரில்லை. இன்று இப் பிரதான வீதியானது வர்த்தகப் பிரதேசமாக மாறியுள்ள காரணத்தினால் 10 அடி அகலம் 60 அடி நீளம் கொண்ட ஒரு நிலத்துண்டின் விலை சுமார் 35 இலட்சம் ரூபாவாகும்.

  இவ்வயல் வெளிகளிலேயே சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சிறுவர்களின் பொழுது கழியும். பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிற்கும் மரங்களில் நூற்றுக்கணக்கான கிளிகளும், நங்கனங்களும் (மைனா) வாழும். அவற்றின் பொந்துகளில் கிளிக் குஞ்சுகளையும் நங்கனக் குஞ்சுகளையும் பிடித்துக் கொண்டு வந்து வீடுகளில் வளர்ப்பது எங்கள் பொழுது போக்கு. பகல் முழுவதும் அலைந்தால் நான்கைந்து குஞ்சுகள் அகப்படும். அவற்றினைப் பங்கு போடுவதில் ஏற்படும் சண்டையைச் சமரசமாகத் தீர்த்துக்கொள்வோம். வயலோரத்துத் தென்னை மர ஓரங்களில் தூக்கணாங் குருவிக் கூடுகள் நூற்றுக் கணக்கில் தொங்கும்.

  ஊரின் தென் எல்லையில் அழகியதொரு குளம் இருந்தது. பத்து ஏக்கருக்கு மேல் விஸ்தீரணமாய் இருக்கும். காரைதீவின் மாளிகைக்காட்டுப் பிரதேசத்திற்குள்ளும் அது நீண்டிருந்தது. குளத்தின் பெயர் தாமரைக் குளம். இதிலொரு பகுதியை மண்போட்டு நிரப்பி தற்போது பொது நூலகம், ஷபீனா வித்தியாலயம், அரசாங்க மருத்துவ மன, மல்ஹருஸ் ஷம்ஸ் வித்தியாலயம் என்பன கட்டப்பட்டுள்ளன.

  எங்கள் இளமைக் காலத்துத் தாமரைக் குளத்தில் அதன் பெயருக்கு ஏற்ப வெண்தாமரையும், செந்தாமரையும் குளத்து நீர் தெரியாதவாறு மலர்ந்திருக்கும். மாரி காலத்தில் ஊரின் வெள்ள நீர் அதனுள் வடிவதனால் மழை நீர் ஊருக்குள் தடைப்பட்டு நிற்பதில்லை.

  கோடை காலத்தில் குளத்தின் ஒரு பகுதியில் நீர் வற்றி புற்றரையாகி விட மறு புறத்தில் வருடம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். நூற்றுக் கணக்கில் கடற்காகங்கள் அதனுள் நீந்தித் திரியும். அத்துடன் வயற்கோழ, காட, வக்கா, கீச்சான் என்பனவும் கூட்டம் கூட்டமாக ஓடித் திரியும். இப்புற்றரை எங்கள் விளையாட்டு மைதானமாக மாறி கட்டைப்பந்து, மட்டைப்பந்து, கிட்டிப்புள் என்பன விளையாடுவோம். வெட்டுக்கிளி பிடிப்போம். பெருநாள் காலங்களில் இப் புற்றரையில் தொட்டில் ஊஞ்சல், கிறுக்கு ஊஞ்சல் போன்ற பெரும் பெரும் ஊஞ்சல்கள் அமைத்து அதில் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் ஆடிப்பாடி மகிழ்ந்து பெருநாளை சந்தோசமாகக் கழிப்பார்கள்.

  கரைவாகுவட்டை நெல் விளைந்து அறுவடை முடிந்த பின் பெரிய பள்ளிவாசலில் 'கந்தூரி' சாப்பாட்டை தாமரை இலையில் வைத்துக் கொடுப்பார்கள். ஊர் மக்கள் அனைவரும் 'நாரிசாச் சோறு' என்று அவற்றை வாங்கிச் சென்று சாப்பிடுவார்கள். அன்றிரவு வான வேடிக்கைகள் மிகவும் கோலாகலமாகக் கண்ணைக் கவரும் காட்சியாக இருக்கும். வட பகுதி மக்களும் தென் பகுதி மக்களும் போட்டி போட்டுக் கொண்டு அதில் ஈடுபடுவார்கள். இளனி வானம், எலி வானம, வெளிச்சக் குண்டு எனப் பல வகையான, பல நிறங்களில் மேலே எழும்பும் வெளிச்சம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவற்றையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கும்போது பெருமூச்சுதான் வருகிறது. இப்போது இருப்பதுபோல் அவசர வாழ்க்கை அப்போதில்லை.

  மக்களின் வாழ்க்கை மிக அமைதியானது, நிம்மதியானது, சந்தோசமானது, விட்டுக்கொடுப்புகளும், கொடுக்கல் வாங்கல்களும் மிகத் தாராளம். தேங்காய், மாங்காய், முருங்கைக்காய், பப்பாசிப்பழம், பசுப்பால், தயிர் என்பன பணத்திற்கு விற்கப்படுவதில்லை. அவையெல்லாம் இலவசமாக வழங்கப்பட்ட காலம் அதுவாகும்.

2 comments:

  1. சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நான் கண்ட அட்டளைச்சேனை அப்படியே அச்சொட்டாக வர்ணிக்கப்பட்டுள்ளது .அதே கோனாவத்தை ,அதே அக்கரை,அதே தோணி கிட்டத்தட்ட 97 வீதம் சாய்ந்தமரூதும் அட்டாளைச்சேனையும் புவியியல் ,பாரம்பரிய ரீதியாக மிகவும் நெருக்கமான நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் கிராமங்களாகும் .

    ReplyDelete
  2. கண்ணை மூடி நிகழ்வுகளை நினைக்கையில் உண்மையில் பெரு மூச்சுதான் வருகிறது. என்ன ஒரு அற்புதமான காலம் அது. பண்புள்ள மனிதர்கள் நேயமிக்க உறவுகள் மற்றும் குடும்ப நண்பர்கள் .....அழகான ஆக்கமையா. பழைய பெட்டகத்தை நுகர தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

Powered by Blogger.