சாதனையாளர்களுக்கு விழா நடத்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் தீர்மானம்
யாழ் முஸ்லிம் மறுமலர்ச்சி அமைப்பினருக்கும் அதன் ஆலோசகர்களுக்குமிடையிலான கூட்டமொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் யாழ்ப்பாண முஸ்லிம்களில் கல்வித்துறையில் உயர்பதவி வாகித்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறுகள் பதிவில் வைக்கப்பட வேண்டுமெனவும், யாழ் முஸ்லிம்களிடையே தொன்று தொட்டு பிரகாசித்தவர்கள் வரலாறுகளில் இடம் பிடித்தவர்கள் தற்போதைய சமுதாயத்துக்கு ஞாபகப்படுத்தப்பட வேண்டுமெனவும், கல்வி, உயர் கல்வி, பட்டப்படிப்புகள், மார்க்கக் கல்வி, விளையாட்டுத் துறைகளான உதைப்பந்தாட்டம், கிறிகட், மரதன், சைக்கிளோட்டம், கராட்டே, சிலம்படி விளையாட்டுக்களில் பிரகாசித்தவர்கள், சமுதாயத்தவர்களுக்கு கல்வி புகட்டும் ஆசான்கள், சமுதாயத்தை தமது செல்வம் மூலமாக கட்டியெழுப்பிய தனவந்தர்கள் போன்றவர்கள் பாராட்டப் பட வேண்டுமெனவும் அதற்காக வேண்டி விழா ஒன்றையும் அந்த விழாவில் ஒரு வரலாற்று நினைவு மலர் ஒன்றை வெளியிட வேண்டுமெனவும் கூறப்பட்ட கருத்துக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மேலும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக தம்மாலான உதவிகளை செய்வதாக கல்வித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பல பிரமுகர்கள் தெரிவித்தனர். இதன் ஒரு கட்டமாக யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் தற்போது ஆண்டு பத்து மற்றும் ஆண்டு பதினொன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதற்காகவேண்டி யாழ் ஒஸ்மானியா அதிபரை அனுகி மாணவர்களின் கல்வித் தேவைகளை அறிந்து கருத்தரங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமெனவும் முன்னாள் கல்விப்பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் கொண்ட குழுவொன்று யாழ்ப்பாணம் உள்ளிட்ட இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து தேவைகளை நேரில் கண்டறிய வேண்டுமெனவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இன்ஷா அல்லாஹ் மிகவிரைவில் யாழ் ஒஸ்மானியாவின் அதிபர் இணங்கும் ஒரு திகதியில் இக்குழு யாழ்ப்பாணம் சென்று அதிபரையும் ஆசிரியர்களையும் சந்திக்கும்.
அத்துடன் வருகின்ற நவம்பர் மாதத்தில் யாழ் முஸ்லிம்களில் நல்ல துறைகளில் பிரகாசித்தவர்களுக்காண விழாவை நடத்துவதென்றும் அதற்காக வவுனியா, இக்கிரிகொல்லாவ, மதவாச்சி, புத்தளம்,நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, மாத்தளை, குருநாகல உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசாங்க உத்தியோகத்தர், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள், உலமாக்கள், பட்டதாரிகள், மாணவ பட்டதாரிகள், தொழில் நுட்பவியலாளர்கள் போன்றவர்களை அழைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. தூர பிரதேசங்களிலிருந்து வருபவர்களுக்கு பிரயாண ஒழுங்குகள் மற்றும் மதிய உணவு என்பன வழங்கவும் ஏகமனதாக முடிவெடுக்கபட்டது. இதற்கான உதவிகளை கூட்டத்துக்கு வந்திருந்த தனவந்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.
தற்போது யாழ் முஸ்லிம் சாதனையாளர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு அச்சுக்கு தயாரான நிலையில் உள்ளது. மேலே கூறப்பட்டவாறான துறைகளில் இருக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் உடனடியாக தமது தகவல்களை எம்.ஏ.ஏம்.சப்ரின் (0774628168) அல்லது எம்.ஜான்ஸின் சரீப் (0774457416) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
Post a Comment