துனீஷியாவில் இஸ்லாமியவாதிகளின் கூட்டணி அரசு பதவிவிலக சம்மதம்
(tn) துனீஷியாவில் தொடரும் அரசியல் பதற்றத்திற்கு தீர்வாக ஆளும் இஸ்லாமியவாதிகளின் கூட்டணி அரசு பதவி விலக இணங்கியுள்ளது. எதிர்த் தரப்பினருடனான சந்திப்பின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி காபந்து அரசொன்று அமைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துனீஷியாவில் எதிர்த் தரப்பு தலைவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. இதனை யொட்டி ஆளும் இஸ்லாமியவாதிகளின் அன்னஹ்தா கூட்டணி மற்றும் மதச் சார்பற்ற எதிர்த்தரப்புகளுக்கு இடையில் நீண்டகாலமாக பதற்றம் நீடித்தது.
கடந்த 2011 அரபு எழுச்சி போராட்டம் ஆரம்பமான துனீஷியாவில், நாட்டில் நீண்டகால சர்வாதிகார ஆட்சி புரிந்த அரசு கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனநாயக மாற்றத்திற்கான செயற்பாடுகள் அண்மைய பதற்றச் சூழல் காரணமாக இழுபறிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பலம்வாய்ந்த தொழிலாளர் ஒன்றியத்தின் மத்தியஸ்த்தத்தில் அரசு மற்றும் எதிர்த் தரப்புகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. இந்நிலையில் இருதரப்பும் அடுத்த வாரத்துக்குள் தீர்க்கமான முடிவை எடுக்கும்படி தொழிலாளர் ஒன்றியம் அழுத்தம் கொடுத்துள்ளது.
உடன்பாட்டின்படி அன்னஹ்தா கட்சி மூன்று வார பேச்சுவார்த்தைக்கு பின், அதிகாரத்தை சுதந்திரமான ஆட்சி மாற்ற தலைமை ஒன்றிடம் வழங்கவும் தொடர்ந்து பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களுக்கான திகதிகளை நிர்ணயிக்கவும் இணங்கியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை திங்கள் (இன்று) அல்லது செவ்வாய் (நாளை) ஆரம்பமாகும் என்று அன்னஹ்தா அதிகாரி லொட்பி சிடோன் ராய்ட்டருக்கு குறிப்பிட்டார். நாட்டை அரசியல் பதற்றத்தில் இருந்து மீட்க இந்த திட்டத்திற்கு அன்னஹ்தா எந்த நிபந்தனையும் இன்றி உடன்பட்டதாக குறிப்பிட்டார்.
துனீஷியாவில் தோன்றிய மக்கள் எழுச்சி அரபு உலகெங்கும் பரவி உள்நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவிய போதும் அது அரசியல் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சீர்குலைந்துள்ளது. மதச் சார்பற்ற நாடாக இருந்த துனீஷியாவில் இஸ்லாமிய திட்டவரைபை முன்வைத்து செயற்படுவதாக எதிர்ப்பாளர்கள் அன்னஹ்தா கட்சி மீது குற்றம்சாட்டினர்.
Post a Comment