Header Ads



சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை எப்படி அழிப்பது..?

சிரியா அளித்துள்ள ரசாயன ஆயுத விவர பட்டியல் பற்றி சர்வதேச ரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு சனிக்கிழமை விசாரணை நடத்தியது.

சிரியாவில் அதிபர் பஷார் அல் அஸாதுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்க ராணுவ தாக்குதல் நடந்து வந்தது. பதிலுக்கு கிளர்ச்சியாளர்களும் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடந்த 30 மாதங்களாக நடந்த மோதலில் 1,10,000 பேர் கொல்லப்பட்டனர்.

20 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி சிரியாவில் நடந்த ரசாயன ஆயுதத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலின்போது சரின் விஷ வாயுவை சிரியா ராணுவம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தாக்குதலில் ரசாயன குண்டுகள் வீசப்பட்டதை ஐநா சபையின் நிபுணர் குழுவும் உறுதி செய்தது.

இதையடுத்து சிரியாவுக்கு, அமெரிக்கா ராணுவ நெருக்கடி கொடுத்தது. மேலும் சிரியா ரசாயன ஆயுதங்களை அழித்து விட்டால் தாக்குதல் நடத்த மாட்டோம் என்றும் அறிவித்தது. ரஷியாவும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும்படி சிரியாவை நிர்ப்பந்தம் செய்தது.

இதை சிரியா ஏற்றுக் கொண்டதால் பதற்றம் தணிந்தது.

அண்மையில் அதிபர் பஷார் அல் அஸாத் அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ""சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க ஓர் ஆண்டு ஆகும் என்றும், அதற்கு 100 கோடி டாலர்கள் செலவாகும்'' என்றும் கூறினார்.

இந்நிலையில், ரசாயன ஆயுதங்களை சிரியா உடனடியாக அழிக்க முன்வர வேண்டும் என்று சீன அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுபற்றி சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி கூறும்போது, ""சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை அழிக்க சீனா உதவி செய்யும். சிரியாவில் நடைபெறும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டியது அவசியம்'' என்று தெரிவித்தார்.

ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு விசாரணை: சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பு நிர்வாகிகள் கூறும்போது, ""சிரியா அதிபர் பஷார் அல் அஸாதிடம் இருந்து ரசாயன ஆயுதங்கள் பற்றிய பட்டியல் வந்துள்ளது. சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பின் தொழில் நுட்ப செயலாளர் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்'' என்று தெரிவித்தனர்.

ஐநா அதிகாரி ஒருவர் கூறும்போது, ""சிரியாவில் உள்ள ரசாயன ஆயுத விவரங்கள் பற்றிய அறிக்கையை சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பிடம் அந்நாட்டு அரசு வியாழக்கிழமை வழங்கியது'' என்று தெரிவித்தார்.

சர்வதேச ரசாயன ஆயுதத் தடுப்பு அமைப்பானது சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை எப்படி அழிப்பது என்பது பற்றி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

ரஷிய-அமெரிக்க ஒப்பந்தத்தின்படி சிரியாவில் உள்ள அனைத்து ரசாயன ஆயுதங்களையும் 2014ஆம் ஆண்டின் மத்திய காலத்திற்குள் திரும்ப ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.