Header Ads



குள்ளநரி அரசியலையே முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது - உதுமாலெப்பை


(எம்.எம்.ஏ.ஸமட்)

கிழக்கில் எதைப் பேசி மக்களை முஸ்லிம் காங்கிஸ் ஏமாற்றி வாக்குகளைப் பெற்றதோ அதே பாணியில் கிழக்கிற்கு வெளியிலும் முஸ்லிம்களை ஏமாற்றும் நடவடிக்கையையே முஸ்லிம் காங்கிரஸ் புரிகிறது. இவ்வாறு தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை குறிப்பிட்டார்.

வட மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் அப்துல் சத்தாரை ஆதரித்து குருநாகல் ஹெட்டிபொலயில்  நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இந்நாட்டில் வாழுகின்ற மூவின மக்களும் சமூக ஒருமைபாட்டுடனும் புரிந்துணர்வுடனும் சமாதானத்துடனுமே வாழ விரும்புகின்றனர். ஒரு சிலரே அவற்றை விரும்பாது செயற்பட்டு வருகின்றனர். அந்ந ஒரு சிலர் செய்கின்ற தவறுகளை ஒட்டுமொத்த சமூகமுமே செய்யும் தவறாகக் கருதுவது தவறாகும்.

இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்களில் மூன்றிலொரு பகுதியினரே கிழக்கு மற்றும் வடக்கில் வாழுகின்றனர். ஏனைய மூன்றிலிரண்டு பகுதியினர் வடக்கு மற்றும் கிழக்கிற்;கு வெளியே வாழுகின்றனர். இந்நாட்டில் வாழுகின்ற பௌத்த மக்களின் மத குருமார்கள் அரசியல் தலைமைகள், புத்திஜீவிகள், பொது மக்கள் ஆகியோரில் 99 வீதமானோர்  முஸ்லிம்களுடன் சகோதர வாஞ்சையுடன் சந்தோசமாக வாழவே விரும்புகின்றனர். இவ்வாறு வாழும் மக்களிடையே வாக்குகளைப் பெறுவதற்காக விசமத்தனமான பிரச்சாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பிரச்சினைகள் எல்லா சமூகத்தினரிடமும் காணப்படுகிறது. முஸ்லிம்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரச்சினைகள் எங்கிருந்து உருவாக்கப்படுகிறதோ, எவ்வாறு உருவாகிறதோ அதைக் கவனத்திற்கொண்டு, உரிய முறையில் அதை அணுகி தீர்ப்பதன் மூலம் முஸ்லிம்கள் இந்நாட்டில் நிம்மதியாக வாழ வழியை ஏற்படுத்த வேண்டும். மாறாக, அதை விஷ்வரூபமாக மாற்றி, ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பகைவர்களாக ஏனைய சமூகத்துக் காட்டும் மிகக் கேவலமான நடவடிக்கைளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொள்வதைக் கைவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்ளவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த 2012 கிழக்கில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின் போது வெற்றிலைக்கு அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் பள்ளிவாசல்களை உடைப்பதற்காக அளிக்கப்படும் வாக்குகளாக அமையும் என்று பிரச்சாரம் செய்தது மாத்திரிமின்றி,  மகிந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், கிழக்கு மாகாண சபையின் பொம்மை ஆட்சியை ஒழிப்போம், என்றெல்லாம்  வீரவனசம் பேசி கிழக்கு மக்களை உணர்ச்சிகளினால் உசுப்பேற்றி,  வாக்குகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ், தேர்தல் வெற்றியின் பின் முஸ்லிம்களின் உரிமைகளையும் நலன்களையும் பள்ளிவால் உடைப்புக்களையும் பற்றிப் பேசாது அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான பேரம் பேசலில் மட்டுமே ஈடுபட்டனர். அதை இன்னும் கிழக்கு மக்கள் மறக்கவில்லை.

இத்தகைய குள்ளநரி அரசியலையே முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக செய்து வருகின்றமையை இன்று  அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர். மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணராத நிலையிலேயே மு.கா.வின் தலைமையும் எனையவர்களும் நடைபெறள்ள மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைளில் செயற்பட்டு வருகின்றனர்

அரசியல் அதிகாரங்கள் இல்லாமல் மக்களின் நலன்களை நாம் நிறைவேற்ற முடியாது. அந்தவகையில் வடமேல் மாகாண சபைக்கு குருநாகல் மாவட்டத்தில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளரான அப்துல் சத்தாரை வெற்றிபெறச் செய்வதன் மூலம் குருநாகல் மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களின் நலன்களின் குரலாக அவரை வடமேல் மாகாண சபையில் அமரச்செய்வீர்கள் என நம்புகின்றேன் என அமைச்சர் உதுமாலெவ்வை மேலும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. சமூக ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்குடன் செயற்படும் அந்த ஒரு சிலர் யார் என்று வெளிப்படையாகச் சொல்லும் அளவுக்குக் கூட உங்களுக்கு உரிமையும், பலமும் இல்லையா?

    99 வீதமாக வாழும் பெரும்பான்மைச் சமூகங்களுக்குள் வாழும் விஷமிகள்தானே இன்று சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைப் பகிரங்கமாக மேற்கொண்டு வருகின்றனர். அவற்றைக் கட்டுப்படுத்த உங்களின் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை இது வரையில் எடுத்துள்ளது? அல்லது நீங்களும், உங்களின் கட்சித் தலைமையும்தான் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

    முஸ்லிம்களும், தமிழர்களும் இனவாதம் பேசியதால்தான் இன்று சிங்களவர்களும் இனவாதம், மதவாதம் பேசுகின்றார்கள் என்றும், அக்கரைப்பற்றுக்குள் இவ்வாறான பிரச்சினைகள் வந்தால் அப்போது நான் பார்த்துக் கொள்வேன் என அமைச்சர் அதாவுள்ளா சொல்லியிருப்பதுதான் முஸ்லிம் சமூகத்தின் அர்த்தமுள்ள அரசியல் அதிகாரமா?

    2012 தேர்தலில் முஸ்லிம்களை ஏமாற்றி வாக்குப் பலத்தைப் பெற்று வந்த குள்ளநரி ஸ்ரீ.ல.மு.கா வை நீங்களும் சேர்ந்துதானே மாலையிட்டு வரவேற்று மாகாண அரசாங்கத்தை நிறுவி மந்திரிப் பதவியையும் இன்று பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். முஸ்லிம் சமூகத்திற்கு அவ்வாறு துரோகம் செய்யாமல் த.தே. கூட்டமைப்புடன் மு.கா. கைகோர்த்து சிறுபான்மை மக்களின் மாகாண சபையாக உருவாக்கியிருந்தால் இன்று உங்களால் அமைச்சர் உதுமான் லெப்பை என்று நின்று பேச முடியுமா?

    மொத்தத்தில் நீங்கள் எல்லோருமே சிறுபான்மையினரை ஒடுக்கி பெருந்தேசியவாதத்தையும், பௌத்த ஆதிக்கத்தையும் இந்நாட்டில் ஓங்கச் செய்ய முயன்று வரும் மஹிந்த சிந்தனையில் ஊறித்திளைத்த ஒரே குப்பைகள்தான் என்பதும் நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும்.

    உங்களோடு ஒருவாராக குருணாகல் மாவட்டத்திலிருந்தும் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மஹிந்த சாம்ராஜ்யத்திற்குப் பெற்றுக் கொடுக்க அயராது பாடு படுகின்றீர்கள். அதற்கான பிரதிபலன்களை எதிர்காலத்தில் எதிர்பார்த்து. அவ்வளவுதான்!

    எதற்கும் மக்களின் தீர்ப்பை வரும் 21ம் நாள் நாமனைவரும் அறிவோம்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இப்படி ஆளுக்கு ஆள் குள்ளநரி கதை சொல்வதை விட்டு விட்டு ஒற்றுமையாக ஒரு வழிபார்க்கலாம் தனே.... இந்த வீராப்பு பேச்செல்லாம் தேர்தல் முடியும் வரைதான்... அதற்குப்பின்னர் நீங்கள் அத்தனைபேரும் 'ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்' மாதிரிதான் இருப்பீர்கள்.

    இதுதான் 'நம்மவர்' அரசியல்.

    ReplyDelete
  3. நல்லவர் வந்துட்டார் மற்றவர்களின் குறை தேட....சாரு நீங்களும் உங்கள் குதிரை வீரர் அதாவும் முஸ்லிம்களின் பள்ளி,ஹலால் ஏனைய இதர பிரச்சினைகளில் செய்த நல்ல விடயம் என்ன?நீங்கள் அரசில் இருந்து என்ன பயன்?

    ReplyDelete

Powered by Blogger.