ஹஜ் மற்றும் உம்ரா சம்மந்தமான சில சட்டங்களும் தெளிவுகளும்
ஹஜ்ஜின் முதல் நிலைக் கடமைகள் (அர்கான்):
1. ஹஜ்ஜுக்கான நிய்யத் செய்தல் (இஹ்ராம்)
2. ஒன்பதாம் நாள் அரஃபாவில் வீற்றிருத்தல்
3. ஹஜ்ஜின் தாவாஃப் ஆகிய தவாஃபுல் இஃபாழாவை நிறைவேற்றல்
4. சஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஸஃயை நிறைவேற்றல்
உம்ராவின் முதல் நிலைக் கடமைகள் (அர்கான்):
1. உம்ராவுக்கான நிய்யத் செய்தல்
2. தவாஃப் செய்தல்
3. சஃபா, மர்வா குன்றுகளுக்கிடையில் ஸஃயை நிறைவேற்றல்
மேற்குறிப்பிட்ட முதல் நிலைக் கடமைகளில் ஒன்றை ஒருவர் நிறைவேற்றத் தவறி விட்டால் அவரின் ஹஜ், உம்ரா வணக்கங்கள் நிறைவேறாது. அதனைத் திரும்ப நிறைவேற்றுவதைத் தவிர அதற்கான மாற்றீடுகள் கிடையாது.
குறித்த நேரத்திற்குள் அரஃபாவிற்கு செல்ல ஒருவர் தவறி விடும் பட்சத்தில் அவர் உம்ராவின் கடமைகளை நிறைவேற்றிவிட்டு, இஹ்ராமிலிருந்து நீங்கி அடுத்த வருடம் அந்த ஹஜ்ஜை கழா செய்திடுவதோடு ஒரு பலிப் பிராணியை அறுத்து பலியிடவும் வேண்டும்.
அதே நேரத்தில் நிய்யத்தின் போது அவர் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் இஹ்ராமிலிருந்து நீங்கி விடுவதாக நிபந்தனையிட்டிருந்தால், வழமையான ஆடைகளை அணிந்து இஹ்ராமிலிருந்து நீங்கி விட முடியும். அவர் மீது எக்குற்றமுமில்லை.
அரஃபாவில் தரித்திருப்பதற்கான நேரம்
அரஃபாவில் தரித்திருப்பதற்கான நேரம் துல் ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் ஆரம்பமாகி அடுத்த நாள் (யவ்முன் நஹ்ர்) ஃபஜ்ர் வரை நீடிக்கும். அதாவது ஒருவர் துல் ஹஜ் பத்தாம் நாள் ஃபஜ்ர் உதயமாக முன் சிறிது நேரமேனும் அரஃபா எல்லைக்குள் இருந்து விட்டால் அவரின் அக்கடமை நிறைவேறிவிடும். இதற்கு திர்மிதி (891) , நஸாஇ (3039), அபூ தாவூத் (1950), இப்னு மாஜாஹ் (3016) போன்ற கிரந்தங்களில் பதிவாகியுள்ள உர்வா இப்னு முழர்ரிஸ் அத் தாஈ என்ற சகாபியின் செய்தி ஆதாரமாக விளங்குகிறது.
இறைத் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியில் இருந்து நீங்கிய (லுஹர்) பின்பே அராபாவில் தரிப்பட்ட போதிலும் மேற்குறிப்பிட்ட செய்தியில் அதற்கு முன்பு தரிப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்கள்.
ஹஜ்ஜின் இரண்டாம் நிலைக் கடமைகள் (வாஜிபாத்)
1. குறிக்கப் பட்டுள்ள (மீக்காத்) எல்லையை கடந்து செல்ல முன் நிய்யத் செய்தல்
2. இரவு வரை அரஃபாவில் தரித்தல்
3. அரஃபாவின் பின் அன்றைய இரவு முஸ்தலிபாவில் தங்குதல்
4. துல் ஹஜ் மாத 11,12,13 ஆகிய தினங்களில் மினாவில் இரவு தங்குதல்
5. அன்றைய தினம் மூன்று ஜம்ராக்களுக்கும்,10 ம் நாள் பெரிய ஜம்ராவுக்கு மாத்திரமும் கல் எறிதல்
6. தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்
7. இறுதியில் தவாபுல் வதாஃ வை நிறைவேற்றல்
உம்ராவின் இரண்டாம் நிலைக் கடமைகள் (வாஜிபாத்)
1. குறிக்கப் பட்டுள்ள (மீக்காத்) எல்லையை கடந்து செல்ல முன் நிய்யத் செய்தல்
2. தலை முடியை மழித்தல் அல்லது குறைத்தல்
இந்த வாஜிபுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவர் நிறைவேற்ற தவறிவிட்டால் அவர் அதற்குப் பகரமாக ஒரு பலிப் பிராணியை அறுத்து பலியிட்டு, ஹரம் எல்லைக்குள் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்க வேண்டும். அவர் உண்ணக் கூடாது. வேண்டுமென்றே வாஜிபுகளை தவற விடுவது குற்றமாகும்.
ஹஜ் மற்றும் உம்ராவின் சுன்னத்துக்கள்
இப்புனித கடமைகளில் ஈடுபடுவோர் பின்வரும் இறைத் தூதர் (ஸல்) அவர்களின் சுன்னாக்களை கடைப் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவது அவசியமாகும். இல்லாத விடத்து அதன் பரிபூரண நன்மைகளையும் அடைந்துக் கொள்ளும் வாய்ப்பை இழந்து விட நேரிடும். எனினும் சுன்னத்துக்களை விடுவதால் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதற்காக எந்த பகரமும் நிறைவேற்ற வேண்டியதில்ல. எந்தக் காரணமுமின்றி பொடுபோக்காக அதனை நிறைவேற்றாமல் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அவை பின்வருமாறு:
1. இஹ்ராமுக்கு முன் குளித்தல்
2. இஹ்ராமுக்கு முன் உடம்பில் மனம் பூசிக் கொள்ளல்
3. நிய்யத் செய்ய முன்பே தைத்த ஆடைகளை களைந்து இஹ்ராமுக்கான ஆடைகளை அணிதல், தைத்த ஆடைகளை அணிந்த நிலையில் நிய்யத் செய்தால் தாமதமின்றி உடனே அதனை களைந்து விட வேண்டும்.
4. ஆண்கள் வெண்ணிற ஆடைகளை அணிதல்
5. நிறைவேற்ற போகும் வணக்கத்தை நாவினால் மொழிந்து நிய்யத் செய்தல்
6. நிய்யத்தின் போது கிப்லாவை முன்னோக்குதல்
7. நோய் அல்லது வேறு காரணங்களினால் கடமைகளை நிறைவேற்றி முடிப்பதில் தடங்கல் ஏற்படும் என அஞ்சுவோர் அதனை நிய்யத்தின் போதே நிபந்தனையிடுதல். அதாவது ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் இஹ்ராமிலிருந்து நீங்கி கொள்வேன் என நிய்யத்தின் போதே கூறிக் கொள்ளல்.
8. ஆண்கள் சத்தமாகவும், பெண்கள் சத்தமின்றியும் தல்பியா கூறுதல்
9. உம்ரா செய்வோர் தவாஃபை ஆரம்பிக்கும் வரையும், ஹஜ் செய்வோர் துல் ஹஜ் மாதத்தின் 10ம் நாள் பெரிய ஜம்ராவுக்கு கல் எரியும் வரையும் தல்பியாவை அதிகதிகம் கூறுதல்
10. வீண் பேச்சுக்கள், தர்க்கங்கள் போன்ற வற்றிலிருந்து தவிர்ந்து கொள்ளல்
11. முடிந்தால் மக்காவுக்கு பகல் நேரத்தில் செல்தல்
12. மக்காவுக்கு சென்றவுடன் குளித்துக் கொள்ளல்
தவாஃபின் சுன்னத்துக்கள்
1. ஆண்கள் இஹ்ராமின் மேலாடையின் நடுப் பகுதியை வலது அக்குளுக்கு கீழும், அதன் இரு ஓரங்களையும் இடது புஜத்தின் மேலும் போட்டு "இழ்த்திபாஃ" முறையில் அணிந்து கொள்வது.
இஹ்ராமுடன் மக்காவுக்கு வந்தவுடன் நிறைவேற்றும் தவாஃபின் போது மாத்திரமே இவ்வாறு அணிய வேண்டும். அதற்கு முன்பே இவ்வாறு அணிந்து கொள்வது தவறாகும். அதே நேரத்தில் தவாஃப் முடிந்தவுடனே விஷேடமாக தொழுகையின் போது புஜத்தை மறைத்துக் கொள்ள வேண்டும்
2. ஒவ்வொரு சுற்றின் போதும் தக்பீர் கூறி ஹஜருல் அஸ்வதை முடிந்தால் நேரடியாக முத்தமிடல், அதற்கு முடியாவிட்டால் கையினால் தொட்டு முத்தமிடல், அதற்கும் முடியாத போது ஹஜருல் அஸ்வதை நோக்கி கையை உயர்த்தி தக்பீர் கூறிக் கொண்டால் போதும்.
ஹஜருல் அஸ்வதை தொடுவது, முத்தமிடுவது போன்றவை சுன்னத்தாகும், நெருங்கி முண்டியடித்துக் கொண்டு பிறரை நோவினை செய்யாது இருப்பது கடமையாகும் என்பதை கவனத்தில் கொள்வதோடு பெண்கள் ஆண்களுடன் ஒன்றர கலந்து, நெருங்கிக் கொண்டு செல்வது பெரும் குற்றமாகும் என்பதையும் புரிந்து கொண்டு செயல் படுவது அவசியம்.
3. மக்காவுக்கு வந்தவுடன் செய்யும் தவாஃபில் மாத்திரம் முதல் மூன்று சுற்றிலும் ஆண்கள் சிறு, சிறு எட்டுக்களுடன் அவசர, அவசரமாக நடந்து செல்லல் (ரமல்).
4. ருக்னுல் யமாநியைத் தொடுதல் (முத்தமிடுவது சுன்னத்தல்ல)
5. ஹஜருல் அஸ்வதிற்கும், ருக்னுல் யமாநியிற்குமிடையில் (رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ) என்ற துஆவை ஓதுதல்
6. தவாஃப் முடிந்தவுடன் மகாமு இப்ராஹீமுக்குப் பின் நின்று இரண்டு ரகஅத்துக்கள் தொழுதல்.
ஸஃயின் சுன்னத்துக்கள்
1. ஸஃபா, மர்வா மலைகளில் ஏறி " إنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَآئِرِ اللّهِ " என்ற இறைவசனத்தை ஓதுதல்
2. பின்பு தக்பீர் கூறியவர்களாக கிப்லாவை முன்னோக்கி நின்று இரு கைகளையும் துஆவுக்காக உயர்த்தி பின்வரும் திக்ரை கூறுவதோடு விரும்பியதை இறைவனிடத்தில் பிரார்த்தித்தல்
لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ، لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ أَنْجَزَ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ
3. ஆண்கள் இரு பச்சை நிற அடையாளங்களுக்கு இடையில் வேகமாக ஓடுதல்
4. ஸஃயின் போது வுளூவுடன் இருத்தல்
ஹஜ்ஜின் சுன்னத்துக்கள்
துல் ஹஜ் மாதத்தின் எட்டாம் நாள் :
1. அன்றைய தினம் ழுகருக்கு முன் ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்து மினாவுக்கு செல்தல்
குறிப்பு: இது வரைக்கும் ஹஜ்ஜுக்காக நிய்யத் செய்யாதோர் மற்றும் "தமத்துஃ" முறையில் ஹஜ் செய்வோர் உம்ராவின் பின் துல் ஹஜ் எட்டாம் நாள் நிய்யத் செய்து கொள்வது சுன்னத்தாகும். "மீக்காத்" எனும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கு வெளியில் இருந்து வருவோர் அதனைக் கடந்து செல்ல முன் நிய்யத் செய்து கொள்வது அவசியமாகும்.
2. அன்றைய தினம் ழுகர், அஸர், மஃரிப், இஷா மற்றும் அடுத்த நாள் ஃபஜ்ர் ஆகிய தொழுகைகளை மினாவில் தொழுதல்
3. அங்கே ழுகர், அஸர், இஷா ஆகிய மூன்று தொழுகைகளையும் அவற்றுக்குரிய நேரத்தில் சுருக்கி இரண்டிரண்டாக தொழுதல்
4. அன்று இரவு மினாவில் தங்குதல்
ஒன்பதாம் நாள்:
1. சூரியன் உதித்தவுடன் அங்கிருந்து அரஃபாவை நோக்கி செல்லுதல்
2. அதிகதிகம் தல்பியா கூறுதல்
3. சாத்தியப் பட்டால் நமிராவில் ழுகர் வரை இருந்து விட்டு பின் அரஃபாவை நோக்கி நகர்தல்
4. அரஃபாவில் ழுகரையும், அஸரையும் சேர்த்து சுருக்கி ழுகருடைய நேரத்தில் முற்படுத்தி தொழுதல்
5. அத்தொழுகைக்கு முன் சிறியதோர் மார்க்க உரையை நிகழ்த்துதல்
6. மஃரிப் வரையும் பிரார்த்தனைகள் மற்றும் திக்ருகளில் ஈடுபடுதல்
7. குறிப்பாக பின்வரும் திக்ரை அதிகம் கூறுதல்
لَا إِلهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ وَلَهُ الحَمْدُ وهُوَ عَلى كُلِّ شَيءٍ قَديرٌ،
8. சூரியன் மறைந்தவுடனேயே தாமதிக்காது முஸ்தலிஃபாவை நோக்கிச் செல்லல்
9. மஃரிபையும் இஷா வையும் அங்கே சேர்த்து தொழுதல்
10. அவசியமின்றி வேறு காரியங்களில் ஈடுபடாது தொழுகையின் பின் உடனே உறங்குதல்
பத்தாம் நாள்:
1. அன்றைய தினம் ஃபஜ்ர் தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே முஸ்தலிஃபாவில் தொழுதல்,
2. தொழுகையின் பின் "அல் மஷ்அருல் ஹராமிற்கு" வந்து கிப்லாவை முன்னோக்கி நின்ற நிலையில், இறைவனைத் துதித்துவிட்டு வெளிச்சம் வரும் வரை பிரார்த்தனைகளில் ஈடுபடுதல்,
"அல் மஷ்அருல் ஹராம்" என்பது ஒரு சிறிய மலை அமைந்திருந்த பகுதியாகும். அங்கே இப்பொழுது ஒரு பள்ளிவாயல் கட்டப் பட்டுள்ளது.
3. சூரியன் உதிப்பதற்கு முன் அங்கிருந்து நகர்ந்து விடுதல்
4. முஸ்தளிபாவுக்கும், மீனாவுக்கும் இடையில் அமைந்துள்ள "முஹஸ்ஸிர்" என்ற பள்ளத்தாக்கைக் கடக்கும் போது அவசர, அவசரமாக செல்லுதல்,
5. ஜம்ராவுக்கு கல் எறியும் வரை தக்பீர் கூறிக் கொண்டே இருத்தல்,
6. அன்றைய தினம் ஜம்ராவுக்கு கல் எறிதலை சூரியன் உதித்த பின் நிறைவேற்றல்,
7. கல் எறியும் போது மினா வலப் பக்கமும், மக்கா இடப் பக்கமும் அமையுமாறு ஜம்ராவை முன்னோக்கி நின்று கல் எறிதல்,
8. ஒவ்வொரு கற்களுடனும் தக்பீர் கூறி எறிதல்,
11, 12, 13 ம் நாட்கள் (அய்யாமுத் தஷ்ரீக்):
1. அந்த நாட்களில் அதிகதிகம் இறைவனை திக்ர் செய்தல்
2. தொழுகைகளை சுருக்கித் தொழுதல்
3. அந்த நாட்களில் ஜம்ராக்களுக்கு கல் எறிதலை சூரியன் உச்சியிலிருந்து நீங்கிய உடனே தாமதிக்காது நிறைவேற்றல்
4. ஒவ்வொரு கற்கள் எரியும் போதும் தக்பீர் கூறுதல்
5. சிறிய மற்றும் நடுத்தர ஜம்ராக்களுக்கு கல் எறிந்த பின் நீண்ட நேரம் துஆ செய்தல்
இஹ்ராம் செய்ததும் தடுக்கப்பட்டவை
ஒருவன் உம்ரா, ஹஜ்ஜுக்கான நிய்யத் செய்து விட்டால் பின்வருவனவற்றை அவன் செய்வது ஹராமாகும்:
1. மயிர்களை களைவது, நகங்களை நீக்குவது. அவன் அறியாமல் இவற்றில் ஏதேனும் விழுந்து விட்டாலோ, அல்லது மறதியாகவோ, அதன் சட்டம் தெரியாதவனாகவோ நீக்கியிருந்தால் எக்குற்றமுமில்லை.
2. உடம்பிலோ, ஆடையிலோ மணம் பூசுவது கூடாது. இஹ்ராம் செய்வதற்கு முன் உடம்பில் பூசிய மணம் தொடர்ந்தும் இருந்தால் குற்றமில்லை, ஆனால் ஆடையில் படிந்திருந்தால் அதனைக் கழுவி விட வேண்டும்.
3. இஹ்ராம் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஹரம் எல்லைக்குள் உள்ள பிராணிகளை வேட்டையிடுவது, அதனைக் கொல்வது, விரட்டுவது, அவ்வாறு செய்வதற்கு உதவுவது அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது.
4. இஹ்ராம் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஹரம் எல்லைக்குள், யாரும் நடாமல் தானாக வளர்ந்த மரங்கள், புற்பூண்டுகள் போன்றவற்றை வெட்டுவதும் தடையாகும்.
5. இஹ்ராம் செய்திருந்தாலும், இல்லாவிட்டாலும் முஸ்லிமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஹரம் எல்லைக்குள் பணம், ஆபரணம் உட்பட விழுந்து கிடக்கும் பொருட்கள் எந்தவொன்றையும், அதனை அறிவித்து, மீட்டுக் கொடுக்கும் நோக்கத்துடனே அன்றி எடுப்பது கூடாது.
6. இஹ்ராம் செய்த பின், தனக்கோ வேறொருவருக்கோ திருமணம் பேசுவது, திருமண ஒப்பந்தம் செய்வது போன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. உடலுறவு கொள்வது, இச்சையுடன் மனைவியரைக் கட்டியணைப்பது என்பனவும் தடையாகும்.
உஸ்மான் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கும் ஹதீஸ் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
“இஹ்ராம் செய்தவன் திருமணம் செய்யவோ, திருமணம் முடித்துக் கொடுக்கவோ, திருமணம் பேசவோ கூடாது”. (நூல்: முஸ்லிம்)
7. இஹ்ராமின் போது பெண்கள் கைமேஸ் அணிவதும், முகத்தை மறைப்பதும் கூடாது. எனினும், அந்நிய ஆண்கள் முன்னிலையில் தமது அழகை இஹ்ராம் அல்லாத வேளைகளில் மறைப்பது போன்று தலை மேலுள்ள துணி போன்ற ஏதேனுமொன்றின் மூலம் மறைத்துக் கொள்வது அவசியமாகும்.
8. ஆண்கள், இஹ்ராம் ஆடையின் மூலமோ, தொப்பி, தலைப்பாகை போன்ற வேறேதேனுமொன்றின் மூலமோ தலையை மறைக்கக் கூடாது. மறந்தவனாக அல்லது அதன் சட்டம் தெரியாதவனாக தலையை மறைத்து விட்டால், ஞாபகம் வந்ததும் அல்லது சட்டம் தெரிந்ததும் உடனே நீக்கி விட வேண்டும். அப்போது எக்குற்றமுமில்லை.
9. தோப்பு, சேட், கால்சட்டை, குஃப் போன்ற தைக்கைப்பட்ட ஆடைகளை முழு உடம்பிற்கோ, பாதி உடம்பிற்கோ அணிவதும் கூடாது.
இஹ்ராம் செய்தோருக்கு பின்வருவன தடையில்லை:
1. கைக்கடிகாரம் அணிதல்
2. Earphone பாவித்தல்
3. மோதிரம் அணிதல்
4. பாதணிகள் பாவித்தல்
5. மூக்குக் கண்ணாடி அணிதல்
6. பெல்ட், பட்டி போன்றவை அணிதல்
7. குடைப் பிடித்தல்
8. நிழல் பெறல்
9. தலையில் பொருட்களை சுமத்தல்
10. படுக்கையைத் தலையில் சுமத்தல்
11. காயங்களைக் கட்டுதல் , இஹ்ராம் ஆடையை மாற்றுதல், சுத்தப்படுத்துதல்
12. தலை மற்றும் உடம்பைக் கழுவுதல். கழுவும் போது முடிகள் ஏதேனும் விழுந்தால் குற்றமில்லை.
இஹ்ராமின் மூலம் தடையானதை செய்தவர் மீது கடமையாகும் பரிகாரம்
இஹ்ராமின் மூலம் தடை செய்யப் பட்ட காரியங்களை செய்வோர் பின்வரும் மூன்று நிலைகளில் வைத்து நோக்கப் படுவர்.
1. அவசியத்தின் நிமித்தம் தடையானதை செய்கின்றவர். உதாரணமாக: நோயின் காரணமாகவோ, கடும் குளிரின் காரணமாகவோ முகைத்தையோ, தலையையோ மறைக்க அல்லது தைத்த ஆடை அணிய நிர்பந்திக்கப் படுகின்றவரை குறிப்பிடலாம். இவ்வாறு நிர்பந்தத்திற்காக ஒருவர் இஹ்ராமின் போது தடையானதை செய்வது குற்றமில்லை. எனினும் அவர் அதற்கு பதிலாக பின்வரும் மூன்று பரிகாரங்களில் ஒன்றை நிறைவேற்றி விடுவது அவசியமாகும்.
A) ஒரு ஆட்டை அறுத்து பலியிடல்
B) மூன்று நோன்புகள் நோற்றல்
C) ஆறு மிஸ்கீன்களுக்கு ஒவ்வொருவருக்கும் அரை "ஸாஃ" (சுமார் 1.1/4 kg) அளவில் உணவளித்தல்
2. எந்த அவசியமுமின்றி வேண்டுமென்றே தடை செய்யப் பட்டதை செய்கின்றவர். இவ்வாறு செய்வது தண்டனைக் குரிய குற்றமாகும். அப்படி செய்தவர் இறைவனிடம் மன்னிப்பு கேட்பதோடு, மேட்குறிப்பிடப் பட்டுள்ள குற்றப் பரிகாரங்களில் ஒன்றை நிறை வேற்றுவது அவசியமாகும்.
அதே நேரத்தில் தரைவாழ் மிருகங்களில் ஒன்றை கொலை செய்திருந்தால் அதற்கு சமமான ஒன்றை அறுத்து பலியிடவேண்டும். அல்லது அதன் பெறுமானத்திற்கு சமமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். அல்லது அதற்கு சமமான நோன்புகளை நோற்க வேண்டும்.
ஹஜ்ஜின் வணக்கங்கள் பூர்த்தியாக முன் மனைவியுடன் உறவு கொள்வதின் மூலம் ஹஜ் பாதிலாகிவிடும். எஞ்சியிருக்கும் கடமைகளை தொடர்ந்து நிறைவு செய்து முடிக்க வேண்டும். அந்த ஹஜ்ஜை கழா செய்வதோடு அதற்கு குற்றப் பரிகாரமாக ஒரு ஒட்டகத்தை அறுத்து பலியிடவும் வேண்டும்.
3. மறதியினால் அல்லது அதன் சட்டம் தெரியாமையினால் தடை செய்யப் பட்ட ஒரு காரியத்தை செய்கின்றவர். இவர் மீது எந்தக் குற்றமுமில்லை. எனினும் ஞாபகம் வந்தவுடன் அல்லது அதன் சட்டம் தெரிந்தவுடன் உடனே அச்செயலிளிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது புனித கடமையான ஹஜ்ஜை அவன் தூதர் மூலம் காட்டித் தந்த பிரகாரம் முறையாக நிறை வேற்றி அதன் முழு நன்மைகளையும் அடைந்து கொள்ள எமக்கு அருள் புரிவானாக...
Post a Comment