கூகுள் இணையதளத்தின் புதிய ‘ஹம்மிங்பேர்ட்’ தேடல்முறை அறிமுகம்
அமெரிக்காவின் மென்லோபார்க் என்ற இடத்தில் லார்ரி பேஜ் மற்றும் செர்கே பிரின் என்ற இருவரால் சென்ற 1998ம் ஆண்டில் கூகுள் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. சூசன் ஒஜ்சிக்கி என்பவரது வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இந்த ஆண்டு தனது 15-வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடுகின்றது. இந்த சமயத்தில் கூகுளின் புதிய இணையதளத் தேடல்முறையான ஹம்மிங்பேர்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நேற்று பத்திரிகையாளரிடம் பேசிய தேடல் பிரிவின் மூத்த துணைத் தலைவரான அமித் சிங்கால், கூகுள் நிறுவனம் சென்ற மாதம் இந்தப் புதிய முறையை அறிமுகப்படுத்தியதாகக் கூறினார். அது தற்போது கூகுள் வழியாக உலகம் முழுவதிலும் உள்ள 90 சதவிகிதத் தேடல்களை ஆக்கிரமித்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இணையதளத் தேடல் வளர்ச்சி விகிதத்துடன் கூகுள் நிறுவனமும் இணைந்து செயலாற்ற முயற்சிக்கின்றது. இணையதள வளர்ச்சிக்கேற்ப தேடுதல் குறித்த கேள்விகளும் கடினமாவதால் ஆரம்ப காலத்திலிருந்து பயன்படுத்தப்படும் பூலியன் என்ற கீபோர்ட் முறைகள் பதிலளிக்க இயலவில்லை. ஏனெனில், தேடுதல் வார்த்தைகளுடன் கூடுதலாக கருத்துகளையும், பொருள்களையும் பொருத்த வேண்டியிருப்பதால் மேம்படுத்தப்பட்ட தேடல்முறை தேவைப்பட்டது.
இணையதளத்தில் உள்ள ஆவணங்கள் குறித்த கேள்விகளுக்கு ஹம்மிங்பேர்ட் நல்லதொரு தீர்வாக அமையும், என்று அமித் சிங்கால் குறிப்பிட்டார். முந்தைய காலத்தில் இருந்ததைவிட இந்த உலகம் நிறைய மாறிவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் இணையதளப் பயன்பாட்டிற்குள் வந்து விட்டார்கள். வலைத்தளமும் அதிவேகமாக வளர்ந்துவிட்டது.
இப்போது நீங்கள் இந்தப் புதிய முறை கொண்டு உங்கள் பையினுள் இருக்கும் சிறிய கருவியிடம் எந்தத் தகவலை வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம் என்றும் அமித் சிங்கால் தெரிவித்தார்.
Post a Comment