Header Ads



விளையாட்டு வினையானது - நண்பரை பயமுறுத்த முயன்ற போது விபரீதம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் லாங்மேண்ட் என்ற பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரவீன் லால் (40) என்பவர் வசிக்கிறார். இவரது மகள் பிரமிளா (18). இவர் ஓட்ட பந்தய வீராங்கனை. இவரது குடும்ப நண்பர் நெரிக் காலே (21). தான் வசித்து வந்த வீட்டை காலி செய்து விட்டு பிரவீன் லால் வேறு வீட்டுக்கு குடியேறினார். முன்பு இருந்த வீட்டில் தற்போது நெரிக் காலே வசிக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பிரமிளா தனது ஒன்று விட்ட சகோதரியுடன் நெரிக் காலே வீட்டுக்கு சென்றார்.

அங்கு அறைக்குள் நெரிக் காலே இருப்பது தெரிய வந்தது. நண்பர் என்பதால் அவரை விளையாட்டாக பயமுறுத்த பிரமிளா நினைத்தார். அதே வீட்டில் ஏற்கனவே வசித்ததால் பிரமிளாவுக்கு எல்லா அறைகளும் நன்கு தெரிந்திருந்தது. அதனால் சத்தம் இல்லாமல் வீட்டுக்குள் நுழைந்தார். நெரிக் காலேவின் அறையை மெதுவாக திறந்து திடீரென விளக்குகளை அணைத்தார். அத்துடன் பயங்கரமாக கூச்சலிட்டபடியே அறைக்குள் குதித்தார். இரவு என்பதால் அதிர்ச்சி அடைந்த நெரிக் காலே, மர்ம ஆசாமி யாரோ வீட்டுக்குள் நுழைந்து விட்டதாக கருதி தனது கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார்.

அதன்பின் அலறல் சத்தம் கேட்டதால் மீண்டும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மின் விளக்கை போட்டு பார்த்த போது, பிரமிளா உடலில் தோட்டா பாய்ந்து ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருப்பது தெரிய வந்தது. பதற்றம் அடைந்த நெரிக் காலேவும் பிரமிளாவின் சகோதரியும், பிரமிளாவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரமிளா பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் நெரிக் காலே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விளையாட்டு வினையானதை கண்டு நெரிக் காலேவும் பிரவீன் குடும்பத்தினரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

No comments

Powered by Blogger.