Header Ads



பேஸ்புக் பணம் கொடுக்குமா..?

பேஸ்புக் என்பது பிரபல சமூக இணையதளம் ஆகும். இதன் மூலம் பல தகவல் பரிமாற்றங்கள் உலகெங்கிலும் நொடிப்பொழுதில் கொண்டு செல்ல முடியும். இதில் தனி நபருக்கான தகவல் பக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளதால் தனி ஒரு நபர் தன்னுடைய தகவல் தொடர்புகள் அனைத்தையும் இதன் மூலம் பராமரித்துக் கொள்ள முடியும். இத்தகைய வலைத்தளங்களிலும் தொழில்நுட்பக் குறைகள் ஏற்படுவது உண்டு. அவ்வாறான குறைகள் தலைமை நிறுவனத்திற்குத் தகுந்த ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படுமேயானால் அந்த நபர்களுக்குத் தகுந்த சன்மானமும் அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த அருள் என்ற 21 வயது பொறியியல் பட்டதாரி சமீபத்தில் இப்படிப்பட்ட பிழை ஒன்றினை அந்நிறுவனத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சில மாதங்களுக்கு முன்னர்தான் தகவல்தொடர்பு துறையில் தனது பட்டப்படிப்பை இவர் முடித்துள்ளார். தொழில்நுட்பக் குறைகளை கண்டறிவோருக்கு பணம் கிடைக்கும் என்ற ஆர்வத்தில் இதனைப் பார்க்க ஆரம்பித்தவர் அதன்மூலம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களையும் கற்றுக் கொண்டுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்னாலும், பிழை ஒன்றினை சுட்டிக்காட்டி அருள் எழுதியபோது அவருக்கு 1,500 டாலர் அன்பளிப்பாகத் தரப்படும் என்று பேஸ்புக் நிறுவனத்திலிருந்து தகவல் வந்துள்ளது. ஆயினும், இன்னும் அந்தப் பணம் அவருக்குக் கிட்டவில்லை. இப்போது, ஒருவரால் தனது தகவல் பக்கத்தில் போடப்படும் போட்டோவை அவருக்குத் தெரியாமல் அழிக்ககூடிய தவறினை அருள் கண்டறிந்தார். இதனை முதலில் நிறுவனத்திடம் தெரியப்படுத்தியபோது அவர்கள் அதனை நிராகரித்துள்ளனர். பின்னர், தகுந்த வீடியோ ஆதாரங்களுடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் வெளியிட்டிருந்த போட்டோ ஒன்றினை அகற்றும் முறையை அருள் விளக்கியிருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நிறுவனம் பரிசுத்தொகையாக 12,500 டாலர் அளிப்பதாகத தெரிவித்துள்ளது.

சமீபத்தில், பாலஸ்தீனிய ஆராய்ச்சியாளர் ஒருவர் இதுபோன்ற பிழை ஒன்றினைக் குறித்து எழுதியபோது பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். அதனால், அந்த ஆராய்ச்சியாளர் நிறுவனர் மார்க் சக்கர்பர்கின் தகவல் பக்கத்திலேயே நுழைந்து இதனைத் தெரிவித்திருந்தார். இது தவறான அணுகுமுறை என்று கூறிய பேஸ்புக் நிறுவனம் ஆராய்ச்சியாளரது தகவல் தொடர்புப் பக்கத்தையும் துண்டித்து விட்டது.

No comments

Powered by Blogger.