இவ்வாறான செய்திகளை வெளியிடாதீர்கள் - ஜனாதிபதி மஹிந்த
(தினகரன்) சாதி, மத பூசல்களை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை வெளியிடுவதை ஊடகவியலாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிட்டு இன, மத பூசல்களுக்கு நாம் தூபமிடலாகாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஜனாதிபதி செயலகத்தில் தமிழ்ப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களையும், தமிழ் இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்த போது தெரிவித்தார்.
ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் பெளத்த வெறியர்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகளை கிழித்தெறிந்து அப்பெண்களை மானபங்கப்படுத்தியுள்ளனர் என்று ஆதாரமற்ற பொய்யான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இத்தகைய செய்திகள் உள்ளூரில் வெளிவந்தால் நாட்டில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும் என்பதை ஊடகவியலாளர்கள் உணர்ந்து மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.
இன்னுமொரு செய்தி குறித்த தகவல் தனக்கு எட்டியிருப்பதாகவும் அதில் 6 வயது சிறுமியை வயது முதிர்ந்த முஸ்லிம் ஒருவர் பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்றும் இன்னுமொரு சம்பவத்தில் வயது குறைந்த பிக்கு ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெறுவதாகவும் எனக்கு தெரியவந்தது. இப்படியான செய்திகள் ஊடகங்களில் வெளிவரக்கூடாது. இதனால், மக்களிடையே பகைமை உணர்வும், வன்முறைகளும் தூண்டப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். ஊடகங்களுக்கு இத்தகைய செய்திகள் கிடைக்கும் போது அந்த செய்திகளினால் சமூகத்திற்கு ஏற்படும் தாக்கங்களை நன்கு ஆராய்ந்த பின்னர் ஊடகங்கள் சுயதணிக்கைகளை செய்து செய்திகளை வெளியிடுவது அவசியமென்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
Post a Comment