Header Ads



சவூதி அரேபியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் வளர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்வு

(Thoo) சவூதி அரேபிய நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்களின் வளர்ச்சி விகிதம் 96 சதவீதமாக உயர்ந்துள்ளது.

“சவூதியில், மாணவிகள் உள்பட 99 சதவீத குழந்தைகள் தற்போது பள்ளிக்கு செல்கின்றனர். தினமும் ஒன்று அல்லது இரண்டு புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன” என்று சவூதி அரேபிய கிழக்கு மாகாண கல்வி அதிகாரி அப்துல் ரஹ்மான் அல்-முதைரிஸ் தெரிவித்துள்ளார்.

பொருளாதார மற்றும் திட்ட அமைச்சகம் மேற்கொண்ட, 2007ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சவூதி மக்கள்தொகையில் கல்வி அறிவு பெறாதவர்கள் 13.7 சதவீதம் பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

“1972இல் எழுத்தறிவின்மை 60 சதவீதமாக இருந்தது. சவூதி அரசின் இடைவிடாத போராட்டத்துக்குப் பின் மக்களின் கல்வி வளர்ச்சி 96 சதவீதத்தை எட்டியுள்ளது” எனவும் அவர் கூறியதாக அரப் நியூஸ் பத்திரிகை தெரிவிக்கிறது.

அல்-முதைரிஸ் மேலும் கூறுகையில், 1956ஆம் ஆண்டு முதியோர் கல்விக்கான பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு 1957இல் அமல்படுத்தப்பட்டது. 1984ஆம் ஆண்டு முதியோர் கல்விக்கான பொதுச் செயலகம் நிறுவப்பட்டது. நாட்டின் பல்வேறு மாகாணங்களில் உள்ள 21 முதியோர் கல்வி நிறுவனங்களில் 600 பேர் கல்வி கற்று வருகிறார்கள். மேலும் 72 முதியோர் எழுத்தறிவு நிறுவனங்கள் பெண்களுக்காகஅமைக்கப்பட உள்ளன.

No comments

Powered by Blogger.