Header Ads



இலங்கை முஸ்லிம்கள் குறித்த 44 பக்க அறிக்கை நவநீதம் பிள்ளையிடம் உள்ளது - ஹஸன் அலி

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளையிடம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரஸ்தாபித்திருந்தமை வரவேற்கத்தக்க ஒரு விடயம். முஸ்லிம்கள் குறித்து கரிசணை காட்டி, கருத்துகளை வெளியிடும் அரசியல் உரிமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் நடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி ஹஸன் அலி தெரிவித்துள்ளார்.

நவிபிள்ளை முஸ்லிம் காங்கிரஸைக் கூடச் சந்திக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முஸ்லிம்கள் தொடர்பில் நவிபிள்ளையிடம் எடுத்துரைதத்தாகவும் ஆனால், இதில் ஏதேனும் சதி இருக்கலாம் என்ற தோரணையில் சிலர் கருத்துகளை வெளியிட்டு குழப்ப நிலைமையைத் தோற்றுவிக்க முயற்சிப்பது தொடர்பில் கேட்டபோதே Viக்கு இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ஐ.நா மனித உரிமை ஆணையர் இலங்கை வந்திருந்தபோது, அவரைச் சந்திப்பதற்கான வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தோம். இருப்பினும் அது கைகூடவில்லை. இது தொடர்பில் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அரசியல் கட்சிகளைச் சந்திப்பதற்கான அனுமதியை வழங்க வேண்டியது இலங்கை வெளிவிவகார அமைச்சுக்குரிய பணியாக இருந்தது. இந்த நிலையில் தமது அலுவலகத்தால் முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவிக்க முடியாமல் போனதாக இலங்கையிலுள்ள ஐ.நா அலுவலக உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், இது தொடர்பில் நாம் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து எதனையும் வினவில்லை. இந்தப் பிரச்சினையை பெரிதாக நாங்கள் கருதவும் இல்லை. அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சி என்ற வகையில் அவர்கள் நவிபிள்ளையைச் சந்திப்பதற்கு இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகமோ அல்லத இலங்கை வெளிவிவகார அமைச்சோ அனுமதி வழங்கியிருக்கலாம். அது வரவேற்கத்தக்க விடயமே. மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நாயகம் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்திக்காதிருந்தால் அவரது விஜயம் அர்த்தமற்றதாகப் போயிருக்கும். கட்சி என்ற அடிப்படையில் இந்த விடயத்தில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

கூட்டமைப்புக்கு அனுமதி வழங்கினால் ஏன் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று நாம் எந்தத் தரப்பையும் கேட்கவும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது சர்வதேச அங்கீகாரம் பெற்ற தமிழ் மக்களின் பாரிய சக்தியாகும் என்பதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். அவர்கள் அனுமதி கேட்காமலேயே அழைக்கப்பட வேண்டியவர்கள்.

நிலைமைகள் இவ்வாறிருக்க, இந்த விடயத்தில் நாமே அலட்டிக் கொள்ளாத நிலையில் வேறு சில முஸ்லிம் கட்சிகளும் சில அமைப்புகளும் எங்களுக்காக அறிக்கை விடும் தேவை அவர்களுக்குரியதல்ல.

எங்களைச் சந்திப்பதற்கு நவிபிள்ளை எந்த விதத்திலும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. அமைச்சர் ஹக்கீமை அமைச்சர் மட்டத்தில் நவிபிள்ளை சந்தித்த போது வழமைக்கு மாறான முறையில் முஸ்லிம்கள் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் அவராகவே கேட்டறிந்து கொண்டதனை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம். இதனை விட நாம், முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் 44 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றினையும் அவரிடம் வழங்கியுள்ளோம். அத்துடன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அவரிடம் பிரஸ்தாபித்துள்ளது.நிலைமை இவ்வாறிருக்க இந்த விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் சிலர் அறிக்கை விடுவது என்பது கேலிக்குரியது.

செல்லாக் காசாகப் போயுள்ள தங்களது வங்கரோத்துக் கட்சிகளைச் சந்திக்க நவிபிள்ளை மறுத்தார் என்பதற்காக அதனைப் பிரசாரப்படுத்துவதற்கு எமது கட்சியையும் உள்வாங்கிக் கொள்ளும் தேவை பிற கட்சிகளுக்கு வேண்டப்படாத ஒன்றாகும்.

தமிழை பெரும்பான்மையாகப் பேசும் பிராந்தியங்களில் வாழும் இரு சிறுபான்மைச் சமூகங்களை அதிருப்திக்குள்ளாக்கி பிரச்சினைகளை மேலும் வளர்க்க விரும்பும் இவ்வாறான வங்கரோத்துவாதிகள் தொடர்பில் தமிழ் பேசும் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

புத்தளம் பள்ளிவாசலில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் தொடர்பில் முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தவர் அமரர் தந்தை செல்வா என்பதனை முஸ்லிம் சமூகம் நன்றியுடன் நினைவு கூருகிறது என்றும் ஹஸன் அலி தெரிவித்தார்.

2 comments:

  1. mr hasan aali why this poyy bery
    muslimgalin kaathil flower suththuwthillai
    we are not monggal & we are not pigggs

    ReplyDelete
  2. u don't have rights to talk about muslims...we should thanks for TNA..They did great job..muslim congrass need only vote from muslims...

    ReplyDelete

Powered by Blogger.