40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நடுத்தர வயதினரா..?
"அதிகரித்து வரும் மருத்துவ வசதிகள் மற்றும் வாழ்க்கை முறைகள் போன்ற காரணங்களால்,
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எல்லாம் நடுத்தர வயதினர் என்ற எண்ணத்தில் மாற்றம்
ஏற்பட்டுள்ளது' என, சமீபத்தில், லண்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதயக்கோளாறு, புற்றுநோய், நீரிழிவு போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் அதிக நாட்கள்
வாழ்வது கடினம் என்ற ஒரு சூழல் முன்பு இருந்தது. ஆனால், நவீன மருத்துவத்தில்,
எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதால், மனிதர்களின், சராசரி
ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. மனிதர்களது வாழ்க்கை முறையும், முன்பிருந்ததை விட, பல
மடங்கு மாறிவிட்டது. இந்நிலையில், நடுத்தர வயது குறித்த ஆய்வு ஒன்று, சமீபத்தில்,
பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது. இதில், 2,000 ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர். இதில்,
53 சதவீதத்தினர், நடுத்தர வயது என்பதே கிடையாது என, அழுத்தம் திருத்தமாக
தெரிவித்துள்ளனர்.
அதுபோல், 50 வயதுக்கும் மேற்பட்டவர்களில், 43 சதவீதம் பேர், நடுத்தர வயதில் ஏற்படும் பிரச்னைகளை தாங்கள் இன்னமும் சந்திக்கவில்லை என, கருத்து தெரிவித்தனர். இந்த ஆய்வில் பங்கேற்ற, 10 பேரில், 8 பேர், "நடுத்தர வயது என்பதை வரையறுக்க முடியாது; அது ஒரு மனம் சம்பந்தப்பட்ட விஷயம்' என, கருத்து தெரிவித்தனர். அதுபோல், 84 சதவீதம் பேர், "நீங்கள் வயதானவர் என்று சிந்திக்கத் துவங்கினால், அப்படியே ஆகிவிடுவீர்கள்' என, தத்துவார்த்தமாக பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட பெனெந்தன் ஹெல்த் நிறுவனத்தின் தலைவர், பால் கீனன் கூறியதாவது: ஒருவருக்கு வயதாகிவிட்டது என்பதற்கு, உடல்நிலை பாதிப்பு மற்றும் ஞாபக மறதி ஆகியவையே முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன. நவீன தொழில்நுட்பத்தின் மீது வெறுப்பு, இளைஞர்கள் எதைப் பற்றி பேசுகின்றனர், சிந்திக்கின்றனர் என்பதில் உள்ள குழப்பம், மூட்டுவலி, சத்தமான சூழ்நிலையை வெறுப்பதுதான், வயதாக துவங்கி விட்டதற்கான அடையாளங்களாக கருதப்படுகின்றன. ஆனால், பிரிட்டன்வாசிகளைப் பொறுத்தவரை, நடுத்தர வயது என்பதற்கான பழைய மரபுகளை கடந்து செல்பவர்களாக உள்ளனர். நடுத்தர வயது என்பதை வெறும் எண்களால் நிர்ணயம் செய்யக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர். நமக்கு என்ன வயது என்பதை விட, நாம் எப்படி உணருகிறோம் என்பது தான் முக்கியம். இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment