Header Ads



கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு.. (படங்கள்)


(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு க.பொ.த. உயர்தர வகுப்பில் தொழிற்நுட்ப பொறியியல் பிரிவில் கல்வி பயிலுவதற்காக பாண்டிருப்பைச் சேர்ந்த  தமிழ் மாணவன் முதன்முதலாக இணைந்து இன நல்லுறவிற்கு புதிய பாதையொன்றை அமைத்துள்ளார்.

கல்வியமைச்சு உயர்தர வகுப்புகளில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப பாடத்துறையில் அதிகளவிலான மாணவர்கள் தற்போது நாட்டம் கொண்டு அதில் இணைந்து கல்வி கற்று வருகின்றனர். நாடு தளுவிய ரீதியில் அரசாங்கம் முதன் முறையாக 200 பாடசாலைகளை தேர்தல் தொகுதிக்கு ஒரு பாடசாலை என்ற ரீதியில் தெரிவு செய்து கடந்த மாதம் இப்பாடத்தினை பாடசாலைகளில் ஆரம்பித்து வத்திருந்தது.

இதனடிப்படையில் கல்முனைத் தொகுதியில் தொழில்நுட்ப பாடநெறினை பயில்வதற்காக கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 33 வருடங்களின் பின்னர் பாண்டிருப்பைச் சேர்ந்த கல்முனை கார்மல் பாத்திமா தேசியகல்லூரியில் கல்வி பயின்று 8 பாடங்களில் ஏ சித்திபெற்ற ஆனந்தராஜா விதுஜன் என்ற மாணவன் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் புதன்கிழமை ( 4-9-2013 ) இணைந்து கொண்டதன் மூலம் வரலாற்று சான்று ஒன்றினை ஏற்படுத்தியுள்ளார்.

19980 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி க.பொ.த.உயர்தர வகுப்பில் கல்வி பயிலுவதற்காக களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கே. உதயகுமார் என்ற தமிழ் மாணவன் இறுதியாக இந்த கல்லூரியில் சேர்ந்திருந்தார் எனவும் கடந்த 30 வருடகாலமாக இப்பிரதேசத்தில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இக்கல்லூரியில் கல்வி கற்ற தமிழ் மாணவர்களும் மாணவிகளும் தத்தமது பிரதேச பாடசாலைகளில் கல்வி கற்க வேண்டிய நிலைமையொன்று தோன்றியிருந்ததால் அன்றிலிருந்து இக்கல்லூரியில் தமிழ் மாணவர்கள் இணைந்து கொள்ளவில்லை.

தற்போது நாட்டில் சுமூகமான சூழ்நிலையொன்று தோன்றியிருப்பதால் எல்லா இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒற்றுமையாக ஒரே வகுப்பில் கல்விபயிலும் நிலையொன்று மீண்டும் தோன்றியிருப்பதோடு க.பொ.த.உயர்தர வகுப்பில் மீண்டும் தமிழ் முஸ்லிம் மாணவிகளும் கல்வி கற்பதற்காக இணைந்து கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட்டுள்ளமை  கண்டு பெரு மகிழ்சியடைவதாக கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தெரிவித்தார்.

இக்கல்லூரியில் கடந்த 33 வருடங்களுக்கு முன்னர் க.பொ.த. உயர்தர வகுப்பில் கல்வி கற்ற பொத்துவில் முதல் மட்டக்களப்பு வரையிலான மற்றும் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த பல தமிழ் மாணவ மாணவிகள் உயர்தர பரீட்சைகளில் திறமையாக சித்தியடைந்து வைத்தியர்களாகவும் , பொறியிலாளர்களாகவும் , சட்டத்தரணிகளாகவும் , கணக்காளர்களாகவும் பட்டதாரிகளாகவும் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தொழில் புரிந்து வருகின்றமை எமக்கு மேலும் பெருமை தருவதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.