Header Ads



ஜெனிவாவில் 3 பிள்ளைகளின் தந்தையான இலங்கை தமிழர் தீக்குளித்து மரணம்

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தின் முன்பாக, தீக்குளித்த ஈழத்தமிழர் சிகிச்சை பலனின்றி மரணமாகியுள்ளார். சுவிஸ், சிசன் நகரில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செந்தில்குமரன் இரத்தினசிங்கம் என்ற 35 வயது மதிக்கத்தக்க ஈழத்தமிழரே தீக்குளித்து மரணமாகியுள்ளார்.

நேற்று அதிகாலை 1.10 மணியளவில் இவர் ஐ.நா மனிதஉரிமை ஆணையத்தின் முன்பாக உள்ள நாற்காலிக்கு அண்மையில் தீக்குளித்திருந்தார்.

ஈரானியர்கள் அப்பகுதியில் போராட்டம் ஒன்றை நடத்திக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீக்குளித்த இடத்தில், விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரின் நினைவுச் சின்னம் ஒன்று காணப்பட்டதாக சுவிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

படுகாயமடைந்த நிலையில் சுவிஸ் காவல்துறையினரால் மீட்கப்பட்ட இவர், உடனடியாக ஜெனிவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக, லௌசான் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு உலங்குவானூர்தி மூலம் கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

எனினும் நேற்றுமாலை 4.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி மரணமானதாக தெரியவருகிறது.  மரணமான செந்தில்குமரன், தமிழர்களுக்கு ஆதரவாக புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்ட போராட்டங்கள் அனைத்திலும் பங்கேற்பவர் என்றும், அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.