27 பில்லியன் டொலர் பணம் யாருடையது..?
(tn) ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் உரிமை கோரப்படாமல் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ரகசியமாக பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் சுமார் 27 பில்லியன் டொலர் பணம் காலஞ்சென்ற ஈராக் சர்வாதிகாரி சத்தாம் ஹுஸைன் அல்லது லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் ரகசிய சொத்தாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
100 யூரோ நோட்டுகளைக் கொண்ட இந்த பணத்தொகை 2000 பலகைப் பெட்டிகளில் அடைத்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கிடங்கொன்றில் பதுக்கி வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பணத்திற்கான உரிமையாளர் தம்மை அடையாளப்படுத்துமாறு ரஷ்ய சுங்கப் பிரிவு அறிவித்திருந்தபோதும் இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. இந்த பணத்திற்கு உரிமை கோரப்படும் பட்சத்தில் ரஷ்யாவின் மிகப் பெரிய பில்லியன் டொலர் அதிபதிகளில் முன்னணியில் இருப்பவரான ரொமன் அப்ரமோவிக்கை விடவும் குறித்த நபர் செல்வந்தராகக் கருதப்படுவார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி பிராங்போட்டிலிருந்து மொஸ்கோ விமான நிலையத்திற்கு இந்த பணம் கொண்டுவரப்பட்டுள்ளது. பணத்தை அனுப்பியவராக 45 வயது பார்சின் மொல்டெக்கின் பெயர் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் அவர் அதற்கு உரிமை கோரவில்லை.
இந்நிலையில் இந்தப் பணம் சதாம் ஹுஸைன் அல்லது முஅம்மர் கடாபியின் ரகசிய சொத்தாக இருக்கலாம் என வதந்தி பரவி வருகிறது. அதேபோன்று மாபிஃயா கும்பல் அல்லது ஊழல் அதிகாரிகளின் பணமாகவும் இது இருக்கலாம் என பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மறுபுறத்தில் குறித்த பணத்தை தம்மிடம் கையளிக்குமாறு பல்வேறு தொண்டு நிறுவனங்களும் ரஷ்ய அரசை கோரி வருகின்றன. இதில் ஷிப்பிலோவ்ஸ் என்ற தொண்டு நிறுவனம் இந்த பணத்தைப் பெற்றுத்தரும் வழக்கறிஞர்களுக்கு 2 பில்லியன் டொலர் கட்டணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதனிடையே குறித்த பணத்தை பறிமுதல் செய்வதற்கு நியாயமான காரணங்கள் இல்லாத நிலையில் ரஷ்ய அரசு அந்தப் பணத்தை இதுவரை பறிமுதல் செய்யவில்லை என்று சுங்கத்துறை தொடர்பான நிபுணர் வடினம்லியாலின் டெய்லி மெயில் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
Post a Comment