Header Ads



இங்கிலாந்தில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - 150 பேர் கைது

இங்கிலாந்தில் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் நேற்று இஸ்லாமியர்களை எதிர்த்து இங்கிலீஷ் டிபென்ஸ் லீக் பிரிவினைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை எதிர்த்து போட்டி ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றபோது ஏற்பட்ட மோதலில் 160க்கும் மேற்பட்டோரை லண்டன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

டிபென்ஸ் லீக் பிரிவினைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் மற்றும் இனவெறிக்கு எதிரான ஒன்றுபட்ட அமைப்பினர் போன்ற பல குழுவினர் கலந்துகொண்ட இந்த சம்பவத்தின்போது சுமார் 3,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இஸ்லாமியர்கள் வசிக்கும் டவர் ஹாம்லெட் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழையாதவண்ணம் காவல்துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். 

அதேபோல் இவர்களின் ஊர்வலம் முடியும் இடமான டவர் பிரிட்ஜ் பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.பொது ஒழுங்கிற்கு தடை செய்யாதபடி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊர்வலத்தின் வழிகளும், நேரமும் காவல்துறையினரால் குறிப்பிடப்பட்டிருந்தன. வெள்ளிக்கிழமை அன்று இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஈடிஎல் அமைப்பினர் முறையிட்டபோது நீதிமன்றம் அவர்களது மனுவைத் தள்ளுபடி செய்தது. 

ஊர்வலம் முடியும் இடத்தில் போட்டி அமைப்பாளர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் 150க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் தகவல் அதிகாரி தெரிவித்தார். அதேபோல் கத்தி, வெடிமருந்துகள் போன்றவற்றை வைத்திருந்ததாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் ஈடிஎல் அமைப்பைச் சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த அமைப்பின் தலைவர் டோமி ராபின்சனும் அடங்குவார் என்று அந்த அமைப்பினரின் இணையதளத் தகவல் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.