Header Ads



மேல் மாகாண பாடசாலைகளின் தரம் 11, இறுதித் தவணைப் பரீட்சையை முன்னமே நடாத்த தீர்மானம்

(Nf) மேல் மாகாண பாடசாலைகளின் தரம் 11 க்கான இறுதித் தவணைப் பரீட்சையை பொதுநலவாய மாநாட்டிற்கு முன்னர் நடத்துவதற்கு மேல் மாகாண கல்வித் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் பொருட்டு கால அட்டவணை தயாரிப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று விடயத்திற்குப் பொறுப்பான பணிப்பாளருடன் இன்று இடம்பெறவுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் பீ.என். ஐலப்பெரும தெரிவிக்கின்றார்.

மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஐலப்பெரும தெரிவித்த கருத்து -

"பாடசாலைகளின் தரம் 10 மற்றும் 11 வகுப்புக்களுக்கான ஆண்டிறுதி தவணைப் பரீட்சை, பொதுவான பரீட்சையாகவே மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்றது. நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பொருட்டு கொழும்பு வலயத்திலுள்ள பல பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதால், கடந்த வருடங்களைப் போன்று பரீட்சையை நடத்துவதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து கொழும்பு நகரிலுள்ள பாடசாலைகள் உட்பட மூடப்படவுள்ள பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கான ஆண்டிறுதிப் பரீட்சையை பொதுநலவாய மாநாட்டிற்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கும், தரம் 10 வகுப்புகளுக்கான ஆண்டிறுதிப் பரீட்சையை மாநாட்டிற்காக மூடப்பட்டு திறக்கப்பட்ட பின்னர் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக் கால அட்டவணையைத் தயாரிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட விடயத்திற்குப் பொறுப்பான வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான வினாத்தாள் தயாரித்தல் மற்றும் அச்சிடல் நடவடிக்கைகள் மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுமுறைக்கு ஏற்றவாறும், மாணவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன"

No comments

Powered by Blogger.