PMGG அலுவலகத்தில் பொலீசார் திடீர் விசாரணை
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோக பூர்வ காரியாலயத்தில் நேற்றைய தினம் பொலீசாரினால் திடீர் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மதிய வேளையில் காரியாலயத்திற்கு வருகை தந்த இரண்டு பொலீஸ் உத்தியோகத்தர்கள் அங்கிருந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்க காரியாலய உத்தியோகத்தர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், இவர்கள் காத்தான்குடி பொலீஸ் நிலையத்திலிருந்து வருகை தந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
மேற்படி விசாரணையின்போது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கடந்தகால, சமகால செயற்பாடுகள் குறித்து அவர்கள் வினவியுள்ளதுடன் PMGGயின் அங்கத்துவம் குறித்தும் விரிவாக கேட்டறிந்துள்ளனர். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் கடந்த கால செயற்பாடுகளின் போது பல்வேறு தடவைகள் காத்தான்குடி பொலீசாரின் பாதுகாப்பு உதவிகள் முறையாக பெறப்பட்டுள்ளதுடன் தேர்தல் கால மற்றும் ஏனைய முறைப்பாடுகள் ஊடாகவும் பல்வேறு கட்டங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலீஸ் பிரிவுகளுடன் சிறந்த தொடர்பாடலைப் பேணிவருகின்றது. இவ்வாறு மட்டக்களப்பு, காத்தான்குடி பொலீசாருக்கு PMGG நன்கு அறிமுகமாக காணப்படுகின்ற நிலமையில் இவ்வாறு திடீர் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் பிண்ணனி என்னவாக இருக்கலாம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முக்கியஸ்தர்கள் ஆராய்ந்துவருகின்றனர்.
எனினும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது, தற்பொழுது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவநீதம் பிள்ளையினை சந்தித்து, கடந்த 3 வருட கால இடைவெளியில் இலங்கை முஸ்லிம்களின் மீதான உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்திருந்தது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு உள்ளுர், மற்றும் தேசிய ரீதியிலான ஆழும் தரப்பின் பிழைகள் சுட்டிக்காட்டப்படும் தருணங்களில் எல்லாம் எதிர்த்தரப்பின் மீது பாதுகாப்புத்தரப்பினரின் திடீர் விசாரணைகள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்பன பிரயோகிக்கப்பட்டேவந்துள்ளன. இதன் பிண்ணனியில் தான் இந்த திடீர் விசாரணையும்கூட தங்கள் இயக்கத்தினரை அச்சுறுத்தும் விதமாகவும் இயக்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முடக்கும் விதமாகவும் நடாத்தப்படடிருக்கலாம் என நல்லாடசிக்கான மக்கள் இயக்கம் கருதுகின்றது. அத்துடன் இவ்விசாரணையின் பிண்ணனியில் உள்ளுர் அரசியல் தலையீடு இருக்கலாம் எனும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரச்சனையினை சர்வதேச அவதானத்திற்கு கொண்டு செல்ல தங்களால் எடுக்கப்பட்ட முயற்சி குறித்து தாங்கள் மிகத்தெளிவான நிலைப்பாட்டில் உள்ளதாகவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இதே போல் பொதுபல சேனா காரியாலயத்தையும் விசாரணை செய்தால் என்ன?
ReplyDelete