Header Ads



மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் PMGG + FJP கைச்சாத்து

'மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தம்' எனும் வேலைத்திட்டம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (22.08.2013) கொழும்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் 9 பிரதான அரசியற் கட்சிகளும் 50க்கும் மேற்பட்ட சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டு நிறுவனங்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள மேற்படி வேலைத்திட்டத்தில் பிரதான 10 இணக்கப்பாடுகள் முன்னிறுத்தப்பட்டுள்ளன.

இந்த மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாட்டு மக்கள் ஒப்பந்தம் எனும் வேலைத்திட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) சார்பில் அதன் சூறாசபை அமீர் அஷ்ஷெய்க் MBM.பிர்தௌஸ் (நளீமி) மற்றும் சூறாசபை உறுப்பினர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் ஆகியோரும் நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP) சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் நஜா முஹம்மத் மற்றும் அதன் உறுப்பினர் அஷ்ஷெய்க் ஐயூப் அஸ்மின் (நளீமி) ஆகியோரும் கலந்துகொண்டு கையொப்பமிட்டனர்.

மேற்படி நிகழ்வில் கைச்சாத்திடப்பட்ட 10 பிரதான இணக்கப்பாடுகளும் பின்வருமாறு,

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் பிரதமரையும் அமைச்சரவையையும் உருவாக்குதல்.

18வது திருத்தத்தை ஒழித்து 17வது அரசியல் அமைப்புத் திருத்தத்தை மீண்டும் நிறைவேற்றுவதன் மூலம் அரச நிறுவனங்களில் சுயாதீனத் தன்மையைப் பலப்படுத்தல்.

இலங்கையைத் தாய்நாடாகக் கொண்ட சகல இன சமூகங்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களது தனித் தன்மையைப் பேணுதல்.

விருப்பு வாக்கு முறையை ஒழித்து பாராளுமன்ற ஜனநாயகத்தைப் பலப்படுத்தல்.

தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தல் மற்றும் பேச்சுரிமை, கருத்துக்களை வெளியிடும் உரிமையைப் பாதுகாத்தல்.

சட்டம் மற்றும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தை மீண்டும் நிலை நிறுத்தல்.

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரான சட்டங்களைப் பலப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.

இலவசக் கல்வி, இலவச சுகாதாரம் உட்பட்ட நலன்புரி சமூகமுறையைப் பாதுகாத்தல் மற்றும் பலப்படுத்தல்.

ஆட்சியாளர்களின் இலாபத்துக்கல்லாத உண்மையான மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை அறிமுகப்படுத்தல்.

முறையான நிருவாகத்தை மீள நிலைநிறுத்துவதற்கு ஆரம்ப நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (LLRC) அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை செயற்படுத்துவதன் மூலம் சகல மக்களினதும் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதன் மூலம் நாட்டின் சுயாதீனத் தன்மையைப் பாதுகாத்தல்.

என்ற மேற்கொண்ட 10 இணக்கங்களை அடிப்படையாகக் கொண்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக முழு சக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக இத்தால் உறுதி பூணுகிறோம்.

4 comments:

  1. அந்த 9 பிரதான அரசியற் கட்சிகள் யாவை? அறிந்து கொள்ளும் உரிமை நமக்குண்டா?

    ReplyDelete
  2. அல்லாஹ் உங்களது பணிக்கு நிறைவான உதவியை வழங்க வேண்டும். அருள் செய்ய வேண்டும். தூய்மையாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு பணிக்கும் இறையருள் உண்டு.

    ReplyDelete
  3. PMGG, FJP கட்சிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் குறித்த செய்தி ஒரு கேலிக்கூத்தாக உள்ளது.

    இது என்ன ???

    பிர்தவ்ஸ், அப்துல் ரஹ்மான், நஜா முஹம்மத், அஸ்மின் அய்யூபி எல்லோரும் PMGG கட்சிதானே??? PMGG கட்சி சார்பில் தானே அஸ்மின் அய்யூபி மன்னார் மாவட்டத்தில் தமிழர் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றார்.


    மக்களை என்னவென்று நினைத்துக் கொண்டு இப்படியெல்லாம் நாட்டியம் ஆடுகின்றனர் என்பது புரியாமல் உள்ளது. இப்படி ஒரு கேலியான செய்தியை வெட்கமில்லாமல் எப்படி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தனர் என்பது கூட ஆச்சரியமாக உள்ளது.


    இது என்ன புதிய நாடகம்? வட மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நஜா முஹம்மத், அஸ்மின் அய்யூபி, அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு PMGG கட்சி சார்பில் தமிழர் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்து அஸ்மின் அய்யூபியை மன்னார் மாவட்ட வேட்பாளராக நிறுத்தியமை குறித்த செய்தி யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் புகைபப்டத்துடன் வெளியாகி இருந்தது.அது மக்களுக்கு மறந்திருக்கும் என்ற நம்பிக்கையில் இப்பொழுது புதிய செட் நாடகம் போடுகின்றார்கள்.

    இவர்கள் எல்லோரும் ஒரே அடிப்படையில் உள்ளவர்கள், அதாவது ஜமாத்தே இஸ்லாமியின் பயிற்றப்பட்ட அங்கத்தவர்கள். இந்த நாடகத்தை இப்படியே தொடர விட்டால், நாளை ஜமாத்தே இஸ்லாமியுடனும் ஒப்பந்தம் போட்டு அதனையும் செய்தியாக வெளியிடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.


    மேற்படி விடயம் செய்தியாக வெளிவந்துள்ளமை காரணமாகவும், அரசியல் கட்சிகள் மக்கள் வாக்குகளை நம்பி அரசியல் செய்பவை என்கின்ற அடிப்படையிலும், மேற்படி விடயம் குறித்து கருத்து தெரிவிக்கவும், சந்தேகத்திற்கு இடமான செயற்பாடு குறித்து கேள்வி எழுப்பவும் இருக்கும் உரிமையின் அடிப்படையில் இதனை எழுதிகின்றேன்.


    இவர்களுடைய நாடகங்களை தொடர்ந்தும் அமைதியாக அவதானித்துக் கொண்டு இருக்க முடியாது என்கின்ற நிலையிலேயே, மக்கள் சிந்தனைக்ககவும், PMGG அவர்களுக்கு மக்கள் விழிப்புடன்தான் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்கவும் இதனை ஒரு சந்தர்ப்பமாக ஏற்படுத்திக் கொள்கின்றேன்.

    மேலதிகமாக, மேற்படி கேலிக்கூத்து ஒப்பந்தத்தில், ஐந்தாவது விடயமாக "தகவல் அறியும் உரிமையை உறுதிப் படுத்தல் மற்றும் பேச்சுரிமை, கருத்துக்கள் வெளியிடும் உரிமையைப் பாதுகாத்தல்" என்று குறிப்பிடப் பட்டுள்ளதால், எனது எழுத்துக்கள் பாதுகாப்பாக பிரசுரிக்கப் பட்டு, பதிலளிக்கப் படுவதற்கு உரியவை என்பதனை மேற்படி PMGG, FJP (?) இரண்டு தரப்பாரும் உறுதி செய்திருப்பது காரணமாக, நிச்சயம் அவர்கள் தங்கள் வார்த்தைகளை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளனர்.


    வழமையாகவே பதிலளிக்காமல் மெளனம் காத்து, அதனையே பெரிய சாதனையாக பேசும் இவர்கள், இது குறித்து என்ன செய்கின்றார்கள் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


    ஜனநாயக அடிப்படையில், கருத்து சொல்வதற்கு எனக்கு உள்ள உரிமையை மதித்து இந்த கருத்தை பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.


    நைசர் அப்துல் ரஹீம்

    ReplyDelete
  4. சகோதரர் நைசர் அப்துல் றஹீம் அவர்களுக்கு அரசியலில் இருக்கும் ஆர்வத்தையும் ஆவலையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை, ஆனாலும் அரசியல் குறித்த அறிவும், தெளிவும் இன்னமும் போதாமல் இருக்கின்றது, அது மட்டுமல்ல நாட்டில் என்ன நடக்கின்றது என்பதையும் இவர் கண்டுகொள்ளவேண்டும், அதற்கு செய்திகளை உடனுக்கு உடன் வெளியிடும் தளங்களோடு தொடர்பில் இருங்கள்."மக்கள் ஆட்சிக்கான இணக்கப்பாடு ஒப்பந்தம்" என்பது இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் இலங்கையின் பிரதான எதிர்கட்சிகள், சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து 10 அம்சங்களை முன்வைத்து பொது வேலைத்திட்டம் ஒன்றில் இணைந்துகொள்வதற்கான வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கான ஒப்பந்தமாகும். இவ்வொப்பந்தத்தில் நேற்று (22-08-2013) அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பெருந்திரளான மக்களுக்கு முன்னிலையில் குறித்த கட்சிகள் மற்றும், அமைப்புகள் கைச்சாத்திட்டன. குறித்த ஒப்பந்தத்தில் PMGG மற்றும் FJP என்பனவும் கைச்சாத்திட்டன இதுதான் யாழ் முஸ்லிம் உட்பட பல இணையங்களில் வெளிவந்த செய்தியாகும். (யாழ் முஸ்லிம் ஆசிரியர் இவ்வாறான செய்திகளுக்கு வரும் எதிர்மறையான விமர்சனங்களை எவ்வித யோசனைகளும் இன்றி படக்கென்று பிரசுரித்து விடுவார்) அந்தவகையில் உங்களது விமர்சனமும் பிரசுரமாகிவிட்டது. என்ன செய்வது விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்று எழுது செல்லவேண்டியதுதான் நைசர் அவர்களே (சிலவேளை எமது இந்த கருத்தை ஊடக தர்மத்தை மதிக்கும் யாழ் முஸ்லிம் ஆசிரியர் பிரசுரிக்காமல் விடவும் வாய்ப்புள்ளது)

    ReplyDelete

Powered by Blogger.