சமூகத்துக்காக தன்னை அர்பணித்த காதி நீதிபதி மர்ஹும் யெஹ்யா
காதி நீதிபதியாகச் சேவையாற்றி அண்மையில் இறையடி சேர்ந்த மர்ஹும் அல்ஹாஜ் எம். எச். எம். யெஹ்யா அவர்களின் மறைவு இரத்தினபுரி வாழ் முஸ்லிம்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் ஒரு பேரிழப்பு என்றுதான் கூற வேண்டும்.
தென் இலங்கையின் மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல என்னும் ஊரில் 1934 ஆண்டு பிறந்த இவர் இரத்தினபுரியை தனது வாழ்விடமாகக் கொண்டார். தனது சொந்த முயற்சியினாலும் அயராத உழைப்பினாலும் செல்வந்தராகி இரத்தினபுரியில் யெஹ்யா மோட்டர்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி இன்று அது பல கிளைகலைக் கொண்டு இயங்கி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
ஒரு பிரபல தொழிலதிபராக வளர்ந்து வந்த இவர் தனது வாழ்க்கையில் நற்பண்புகளுடன் வாழ்ந்து துன்பத்தில் இருக்கும் ஏழைகள் மீது இரக்கப்பட்டவராகக் காணப்பட்டார். சமூகத்தில் கல்வி, சமயப்பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததுடன் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் அயராது உழைத்தார். இரத்தினபுரி முஸ்லிம் நலன்புரிச்சங்கத்தை உருவாக்கினார். அத்துடன் இரத்தினபுரி நகரத்தில் உள்ள ஜென்னத் பள்ளியின் வளர்ச்சிக்காக முக்கிய பங்களிப்பு செய்துள்ளதுடன். இப்பள்ளி வாசலின் நிர்வாக செயலாளராக, பொருளாளராக இருந்த காலக்கட்டத்தில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணியில் கடைத்தொகுதியொன்றை அமைத்து நிரந்தர வருமானத்துக்கு வழி அமைத்துக்கொடுத்தார். பள்ளி வாசலுக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் அத்துமீறிக் குடியேறியிருந்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை வெளியேற்றியதில் பெரும்பங்காற்றி அக்காணியைப் பள்ளிவாசலுக்குப் பெற்றுக்கொடுத்தார்.
இரத்தினபுரி வாழ் முஸ்லிம் சிறார்களின் சன்மார்க்க அறிவை மேம்படுத்தும் பணியில் எம். எச். எம். யெஹ்யா ஹாஜியார் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டினார் 1990ம் ஆண்டு இரத்தினபுரியில் அஹதிய்யாப் பாடசாலையை ஆரம்பித்து அதன் ஸ்தாபகராகவும் வழிகாட்டியாகவும்; செயற்பட்டார். இதன் பின் கஹவத்தை இறக்குவானை, குருவிட்ட, எகலியகொடை, பலாங்கொடை போன்ற இடங்களிலும் அஹதியாப்பாடசலைகளை ஆரம்பித்து வைப்பதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
இரத்தினபுரியில் ஒரு முஸ்லிம் பாடசாலை உருவாக்குவதில் முக்கிய காரணகர்த்தாவாக இருந்தார். முஸ்லிம் பாடசாலை என ஒதுக்கப்பட்ட காணியில் அந்நியர் உரிமை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் அக்காணியை தனது முழு செல்வாக்கையும் பயன்படுத்தி துணிச்சல் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்காணியை முஸ்லிம்களுக்குப் பெற்றுக்கொடுத்தார். இன்று இக்காணியில் அல்-மக்கியா முஸ்லிம் மகா வித்தியாலயம் இரத்தினபுரி மாவட்டத்தில் சிறந்த பாடசாலைகளில் ஒன்றாக திகழ்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இப்பாடசாலை இருக்கும் வரை யெஹ்யா ஹாஜியாரின் நாமமும் இருந்துக் கொண்டே இருக்கும்.
1978ம் ஆண்டு இரத்தினபுரி மாவட்ட காதி நீதிபதியாக நியமனம் பெற்ற இவர் இலங்கையில் நீண்ட காலம் சுமார் 35 வருடகாலம் காதி நீதிபதியாக பணியாற்றிய சிறப்புக்குரிய பெருமை இவரையே சாரும். காதி நீதிபதியின் கௌரவத்துக்கும் கண்ணியத்துக்கும் மகுடம் சேர்த்த இவரது பணியைப் பாராட்டி இலங்கை நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் திரு. P.று.னு.ஊ. ஜெயத்திலக்க இவருக்கு சான்றிதழும் விருதும் வழங்கி கௌவித்தார். காதி நீதிபதிகள் சங்கத்தின் பொருளாளராகவும், காதி நீதிபதிகளின் சம்மேளனத்தின் தலைவராகவும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம் சமயக் கலாச்சாரத்தின் கீழ் இயங்கி வந்த காதி நீதிபதிகள் அமைப்பை இலங்கை நீதி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கும் முன்னின்று உழைத்தார்.
தான் ஒரு கொளரவமான பிரஜையாக உருவாவதற்கும் காரணமாக இருந்த பெற்றோரின் நினைவாக இரத்தினபுரி புதிய நகரில் (நீதிமன்றத்துக்கருகில்) தனது சொந்த செலவில் ஒரு பள்ளிவாசலை அமைத்துக்கொடுத்தது மாத்திரமல்லாமல், இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் இரத்தினபுரி மாவட்டக்கிளை இயங்குவதற்கு தன்னுடைய வர்த்தக நிலையத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அதனை சிறப்பாக இயங்க வைத்தார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகா நாட்டின் இரத்தினபுரி வர்த்தக கைத்தொழில் சங்கத்தின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
ஒன்பது பிள்ளைகளைக்கொண்ட மர்ஹும் யெஹ்யா ஹாஜியாரின் குடும்பத்தில் மூத்த புதல்வர் அல்ஹாஜ் யெஹ்யா எம். இப்லார் 1993ம் ஆண்டு முதல் இன்று வரை சப்ரகமுவ மாகாண சபை அங்கத்தவராக இருந்து வருவதுடன். இவரது மருமகன் அல்ஹாஜ் நிஹால் பாருக் அதேசபையில் அங்கத்தவராக இருந்து வருகின்றனர். அவரது மற்றுமோர் மகனாகிய இபாம் யெஹியா அவர்கள் 1999ம் வருடத்துக்கான இரத்தினபுரி மாவட்டத்தின் சிறந்த வர்த்தகருக்கான விருதைப் பெற்றுள்ளமை குடும்பத்துக்கு பெருமை சேர்க்கக்கூடிய விடயமே.
இன மத பேதமின்றி அல்லல்படுவோருக்கு அவர்களின் தேவைகளை அறிந்து செயற்படும் இவரின் குண நலப்பண்புகள் ஏனையவர்களுக்கும் ஓர் முன் உதாரணமாகும். பல்வேறு சமயங்கள் மொழிகள் பேசும் இந்நாட்டில் மர்ஹும் யெஹ்யா ஹாஜியார். பண்புகள் தேசிய நல்லிணக்கமும் நல்லுறவும். நிலைபெறுவதற்கு உருதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
மர்ஹும் யெஹ்யா ஹாஜியார் அவர்கள் ஓர் உத்தம புருஷராக வாழ்ந்தார் என்பதற்கு அவருடைய ஜனாஸா நல்லடக்கத்தின்போது இன மத மொழி பேதமின்றி திறண்ட மக்கள் வெள்ளமே ஓர் சிறந்த உதாரணமாகும். இவரது ஞாபகார்த்தமாக கடந்த பொசன் தினத்தன்று இரத்தினபுரி கஜுகஸ்வத்தை பௌத்த தேவாலயத்தில் நானூருக்கும் அதிகமானோருக்கு அன்னதானம் வழங்கியது பௌத்த மக்கள் இவர் மீது எவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள் என்பதையே காட்டுகிறது.
இவரின் பிரிவால் துயரத்தில் இருக்கும் அன்பு மனைவி மக்களுக்கு இறைவன் அருளால் அவரின் நற்கருமங்களை ஏற்று மேலான சுவர்க்கத்தை வழங்க வேண்டும். என்று பிரார்த்திப்போமாக.
ஆமின்.
மர்ஹும் எம்.எச்.எம். யெஹியா ஹாஜியார் போன்றவர்கள் அழ்ழாஹ்வை மாத்திரம் அஞ்சியவர்களாகவும், அவனது திருப்திக்காக வாழ்ந்தவர்களுமாக இருந்ததார்கள். அதன் காரணமாகவே அவர்களால் இத்தனை விடயங்களையும் சாதிக்கவும், வரலாற்றில் சாதனையாகப் பதிவு செய்யவும் முடிந்தது.
ReplyDeleteபுனிதமான இம்மாதத்தில், அன்னாருடைய மக்பறாவை சுவனத்துச் சோலையாகவும், அன்னாரின் மறுமைப் பேறு அல்லாஹ்வின் திருலிகாவைப் பெறுவதுமாகவும் இருக்க நானும் பிரார்த்திக்கின்றேன்..
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-